லட்சக் கணக்கானோர் சிக்கித் தவிப்பு: மீட்பு பணிகளில் ஒருங்கிணைப்பு தேவை
அதிக அளவில் ஹெலிகாப்டர், படகுகளைப் பயன்படுத்தக் கோரிக்கை
திருவொற்றியூர்,டிச.2:தொடர்ந்து பெய்து வரும் வரலாறு காணாத கனமழையால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளநீரால் சூழப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் சிக்கிய வீடுகளில் முடங்கியுள்ளனர்.
சாலைகள் அனைத்திலும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் ஹெலிகாப்டர்கள் மூலம் கண்காணித்து மீட்பு பணிகளை ஒருங்கிணைத்து அனைத்து பணிகளையும் போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னையை மிரட்டும் ஏரிகள்:
முன்பெல்லாம் சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளான பூண்டி, செம்பரம்பாக்கம், செங்குன்றம், சோழவரம் உள்ளிட்ட ஏரிகளின் நீர்மட்டம் கூடினால் இனி குடிநீர் பிரச்னை நமக்கு இல்லை என சென்னை மாநகர மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் இன்றைக்கு இந்த எரிகளில் திறக்கப்படும் உபரி நீரால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். அனைத்து ஏரிகளிலும் சேர்த்து சுமார் விநாடிக்கு 30 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. மாநகர் பகுதிகளில் பெய்யும் மழையால் அதிக அளவு பாதிப்பு இல்லை என்றாலும் ஏரிகளில் திறந்து விடப்படும் உபரிநீரால் அடையாறு, கூவம், குசஸ்தலை ஆறுகள் மற்றும் பக்கிங்காம் கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்கள் திக்குமுக்காடியுள்ளனர். குடிநீர் வழங்கும் ஏரிகள் மக்களை மிரட்டும் ஏரிகளாக உருவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
லட்சக்கணக்கானோர் சிக்கித் தவிப்பு:
செம்பரம்பாக்கம் ஏரி உபரி நீரால் தென்சென்னையில் வசிக்கும் மக்கள் சிக்கித் தவிக்கும் நிலையில் செங்குன்றம், சோழவரம் ஏரி உபரிநீரால் வடசென்னையின் திருவொற்றியூர், மணலியைச் சுற்றியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகள், கிராமங்களில் லட்சக்கணக்கான மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் வெள்ளப் பெருக்கு என்பதால் மீட்பு பணிகளும் போதிய பலனளிக்கவில்லை. இதுவரை தாழ்வான பகுதிகளில் தரைத்தளத்தில் வசிக்கும் மக்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டள்ளனர். இதுவரை சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மட்டுமே அனைத்து பகுதிகளிலிருந்தும் மீட்கப்பட்டுள்ளனர். ஆனால் முதல் தளம் மற்றும் அடுக்குமாடிகளில் வசிக்கும் லட்சக்கணக்கானோர் முடங்கியுள்ளனர். எனவே அடுத்து இவர்களையும் மீட்பது என்பது அரசுக்கு சவாலான பணியாகவே இருக்கும்.
மீனவர்களின் சிறப்பான பங்கு:
மீட்பு பணியில் போலீஸார், தீயணைப்பு படை, மாநகராட்சி, வருவாய்த்துறை உள்ளிட்ட அரசு இயந்திரங்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளனர். ஆனால் சாலைகள் அனைத்தும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் படகுகள் மூலம்தான் மக்களை மீட்க முடியும் என்ற அசாதாரன சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதில் அரசு ஊழியர்களுக்கு போதிய சிறப்பு பயிற்சிகள் இல்லாதது மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. ஒரு பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ள நிலையில் சில நூறு பேர்களை மட்டுமே படகுகள் மூலம் மீட்க முடிகிறது. தற்போதைய நிலையில் மீனவர்களின் பங்கு அளப்பரியாதாக உள்ளது. திருவொற்றியூர், மணலி புதுநகர் பகுதியில் புதன்கிழமை மீட்பு பணியில் பதினைந்துக்கும் மேற்பட்ட படகுகள் ஈடுபடுத்தப்பட்டன. அப்போது மீனவர்கள்தான் பயமின்றி வெள்ளநீரில் எதிர்நீச்சல் போட்டு பொதுமக்களை மீட்டதை நேரில் பார்க்க முடிந்தது.
ஒருங்கிணைப்பு உடனடி தேவை:
தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை எதிர்கொள்ள அரசு இயந்திரங்கள் அனைத்தையும் தமிழக முதல்வர் ஜெயலலிதா முடுக்கிவிட்டுள்ளார். தேசிய பேரிடர் மீட்பு படை, கடற்படை, கடலோரக்காவல் படை உள்ளிட்டவை புதன்கிழமை முதல் மீட்பு பணிகளுக்காக வரவழைக்கப்பட்டுள்ளன. ஆனால் இவைகளுக்கிடையே போதிய ஒருங்கிணைப்பு இல்லை. அனைத்து பகுதிகளிலும் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கும் நிலையில் எங்கு மக்கள் சிக்கியுள்ளனர், அவர்களை மீட்பது எப்படி, மீட்கப்படும் மக்களை எங்கு தங்கவைப்பது, அவர்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்டவைகளை எப்படி வழங்குவது, மாடி வீடுகளில் முடங்கியுள்ள மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருள்களை கொண்டு சேர்ப்பது எப்படி, முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான கழிவறை உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்துவது எப்படி என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு விடையளிப்பதில் தற்போதைய மீட்பு குழுவினரிடம்
விடை இல்லை. காரணம் மீட்பு படையினர் இடையே போதிய ஒருங்கிணைப்பு இல்லை. புதன்கிழமை மணலி பகுதியில் வந்து இறங்கிய தேசிய பேரிடர் மீட்பு படையினரோடு உள்ளூர் போலீஸார் மற்றும் தீயணைப்பு படையினருக்கு
எவ்வித தொடர்பும் இல்லாததைக் காண முடிந்தது.
ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்த வேண்டும்:
மீட்பு பணிகளைத் துரிதமாக செயல்படுத்துதற்கு தேவையான சாலைகள் அனைத்தும்
வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெறும்
மீட்பு பணிகளைக் கண்காணிக்க பொதுப்பணித் துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நான்கு அமைச்சர்களை முதல்வர் ஜெயலலிதா நியமித்துள்ளார்.
அவர்கள் புதன்கிழமை திருவொற்றியூர் வந்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். ஆனால் அனைத்து சாலைகளும் வெள்ளநீரால் மூழ்கியுள்ளதால் அவர்களால் வெள்ளம் சூழ்ந்துள்ள மணலி புதுநகர் பகுதிக்கு நேரடியாகச் செல்ல முடியவில்லை. வடசென்னை போலீஸ் இணை ஆணையர் தினகரன் மட்டுமே லாரி ஒன்றில் ஏரி இப்பகுதிகளைப் பார்வையிட்டார்.
எனவே சாலை மார்க்கம் அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் மீட்பு பணியில் ஹெலிகாப்டர்களை உடனடியாக ஈடுபடுத்த வேண்டும். ராணுவம், கடற்படை, கடலோரக் காவல்படை, விமானப்படை உள்ளிட்டவற்றில் உள்ள அனைத்து ஹெலிகாப்டர்களையும் உடனடியாக மீட்பு பணியில் பயன்படுத்திட தமிழக அரசு மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதிக படகுகளை ஈடுபடுத்த வேண்டும்:
தற்போது மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்லவில்லை. காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகள் உள்ளன. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளை உடனடியாக வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளுக்குக் கொண்டு செல்ல வேண்டும். இவற்றை கொண்டு செல்ல மீனவ சங்கங்கள், ஆளும்கட்சியைச் சேர்ந்த மீனவ சமுதாயத் தலைவர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட வேண்டும். மேலும் அவர்களுக்குத் தேவையான செலவினங்கள், டீசல், உணவு உள்ளிட்டவைகளை உடனடியாக தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் அனைத்து பணிகளையும் ஒருங்கிணைக்க உயர்மட்ட தொடர்பு மையம் ஏற்படுத்த வேண்டும். தொடர்மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் இது போன்ற போர்க்கால அடிப்படியில் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பு மக்களின் வேண்டுகோளாக உள்ளது.
No comments:
Post a Comment