வீடுகளில் வெள்ளம்: தாசில்தார் அலுவலகத்தை முற்றுகை
திருவொற்றியூர், நவ.23:தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் திருவொற்றியூர் நந்தியோடை பகுதியில் வீடுகளில் வெள்ளம் புகுந்துள்ளது. இதனையடுத்து இங்கு வசித்தவர்கள் பள்ளிக் கூடங்களில் தங்க வைக்கப்பட்டனர். திங்கள்கிழமை பள்ளி திறக்கப்படவிருந்த நிலையில் பள்ளிகளில் தங்க வைக்கப்பட்ட பொதுமக்கள் வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.
ஆனால் ஞாயிற்றுக்கிழமை இரவு மீண்டும் கன மழை பெய்ததையடுத்து மீண்டும் குடியிருப்புகளில் மழைநீர் புகுந்தது. இதனையடுத்து மீண்டும் தங்குமிடம் கோரி திருவொற்றியூர் வட்டாட்சியர் அலுவலகத்தை திங்கள்கிழமை இப்பகுதி மக்கள் முற்றுகையிட்டனர்.
இது குறி்த்து முற்றுகையில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறியது,
கடந்த 10 நாள்களுக்கும் மேலாக தொடர் மழை பெய்து வரும் நிலையில் எங்கள் குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்தது. இதனையடுத்து பள்ளிகளில் தங்க வைத்தனர். ஆனால் இவ்வாறு தங்க வைக்கப்பட்ட பொதுமக்களுக்கு சரியான வகையில் அதிகாரிகள் உணவு வழங்கவில்லை. மேலும் பள்ளிகள் திங்கள்கிழமை திறக்கப்படுவதாகக் கூறி மீண்டும் வீடுகளுக்கு அனுப்பினர். ஆனால் ஞாயிற்றுக்கிழமை இரவு மீண்டும் பெய்த கனமழையால் மீண்டும் வெள்ளம் புகு்ந்துள்ளது. ஆனால் மீண்டும் தங்குமிடம் அளிக்க அதிகாரிகள் மறுக்கின்றனர். மேலும் மழை பெய்தால் உடனடியாக மழைநீரை வெளியேற்ற நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கூறினர்.
இதனைடுத்து பாதிக்கப்பட்ட மக்களை மாற்று இடங்களில் தங்க வைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். முறையான வகையில் உணவு வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தையடுத்து முற்றுகை போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டனர்.
No comments:
Post a Comment