கனமழை, வெள்ளச்சேதப் பாதிப்பு:
வடசென்னை பகுதிகளில் பகுதிகளை மத்தியக் குழுவினர் நேரில் ஆய்வு
திருவொற்றியூர், நவ.28:கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வடசென்னை பகுதிகளை உள்துறை இணைச் செயலாளர் டிவிஎஸ்என். பிரசாத் தலைமையிலான மத்தியக் குழுவினர் சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தனர்.
தமிழகத்தில் சமீபத்தில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட மத்திய அரசு சார்பில் மத்தியக் குழு அமைக்கப்பட்டது. உள்துறை இணைச் செயலாளர் டிவிஎஸ்என் பிரசாத் தலைமையில் ஒன்பது பேர் கொண்ட குழு கடந்த வியாழக்கிழமை தமிழகம் வந்தது. தமிழக முதல்வர் ஜெயலலிதாவை தலைமைச் செயலகத்தில் சந்தித்து பேசிய இக்குழுவினர் வெள்ளிக்கிழமை கடலூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்தனர். இந்நிலையில் இக்குழுவினர் சனிக்கிழமை வடசென்னை பகுதிகளில் ஆய்வு செய்தனர். முதலில் தண்டையார்பேட்டை சேனியம்மன் கோயில் தெருவில் அமைக்கப்பட்டு்ள்ள நிவாரண முகாமை பார்வையிட்டனர். பின்னர் இளைய முதலி தெருவில் நடைபெற்று வந்த வெள்ள நீர் அகற்றும் பணியைப் பார்வையிட்டனர்.
பின்னர் திருவொற்றியூர் கனமழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட கார்கில் நகர், ராஜாஜி நகர், சடையன்குப்பம், பக்கிங்காம் கால்வாய், சத்தியமூர்த்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் பாதிப்புகள் குறித்து விசாரித்தனர். பின்னர் வெள்ளநீரால் வீடுகள் அடித்துச் செல்லப்பட்ட பர்மாநகர் இருளர் குடியிருப்பு பகுதிகளை பார்வையிட்ட
மத்திய குழுவினர் அவர்களுக்கு வழங்கப்பட்ட நிவாரண உதவிகள் குறித்து கேட்டறிந்தனர். பின்னர் பொன்னேரி, சோழவரம் உள்ளிட்ட திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு பகுதிகளை இக்குழுவினர் பார்வையிட்டனர். மத்தியக் குழுவினர் நேரில் ஆய்வு செய்தபோது அந்தந்தப் பகுதிகளில் கனமழையின்போது எடுக்கப்பட்ட வீடியோ, புகைப்படங்களைக் காட்டி மாநில அதிகாரிகள் விளக்கிக் கூறினர்.
பொதுமக்கள் புகார்:
மத்தியக் குழுவினரிடம் பொதுமக்கள் கூறியது,
கனமழையால் வெள்ளம் ஏற்பட்டு வீட்டில் இருந்த உடைகள், மளிகை சாமான்கள் உள்ளிட்ட அனைத்தும் வீணாகிவிட்டன. அரசு சார்பில் உணவு மற்றும் தங்குமிடம் மட்டுமே அளிக்கப்பட்டது. இது போதுமானதல்லை. போதிய நிவாரணம் அளித்தால் மட்டுமே எங்களால் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப இயலும். மேலும் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, குழந்தைகளின் பாடப் புத்தகங்கள் என பெரும்பாலனவை நாசமாகிவிட்டன. எனவே இவற்றை வழங்குவதற்கு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மத்தியக் குழுவினர் பாதிக்கப்பட்ட ஒரு சில இடங்களை மட்டுமே பார்வையிட்டுச் சென்றுள்ளனர். கடும்பாதிப்பு உள்ளான பகுதிகளில் நேரில் ஆய்வு செய்யாதது வருத்தம் அளிக்கிறது எனத் தெரிவித்தன.
மத்திய குழுவினருடன் சென்னை மாநகர ஆணையர் விக்ரம் கபூர், வருவாய் நிர்வாக ஆணையர் அதுல்ய மிஸ்ரா, வெள்ள நிவாரண சிறப்பு அதிகாரி எஸ்.கே.பிரபாகர், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், சென்னை மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி மற்றும் ஐம்பதுக்கும் மேற்பட்ட உயர் அதிகாரிகள் உடன் சென்றனர்.
பெட்டிச் செய்தி....
ஆளும் கட்சியினருக்குத் தடை
மத்தியக் குழு பார்வையிட வருவதாகத் தகவல் அறிந்ததையடுத்து ஆளும்கட்சியைச் சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள், மண்டலக் குழு தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஆங்காங்கு தொண்டர்களுடன் மத்தியக் குழுவினரிடம் முறையிடக் காத்திருந்தனர். ஆனால் இக்குழுவினர் பார்வையிட வந்தபோது இவர்கள் யாரும் காணப்படவில்லை. இது குறித்து விசாரித்தபோது மத்தியக் குழுவினர் பாதிக்கப்பட்ட மக்களிடம் சுதந்திரமாக விசாரிக்க ஆளும் கட்சியினர் தடையாக இருந்துவிடக்கூடாது. எனவே இந்த ஆய்வுக்கு யாரும் வரவேண்டியதில்லை என முதல்வர் சார்பில் அறிவுறுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் ஐம்பதுக்கும் மேற்பட்ட கார்களில் அதிகாரிகள் பவனி வந்ததால் சிறிய தெருக்களில் நெரிசல் ஏற்பட்டது. மேலும் மத்திய குழுவினரைச் சூழ்ந்து கொண்டு ஏராளமான போலீஸார் வளையம் ஏற்படுத்தி பாதுகாப்பு அளித்தனர்.
இதனால் பத்திரிகையாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட யாரும் மத்தியக் குழுவினரிடம் நேரடியாக பேச இயலவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:
Post a Comment