உதவிக்கரம் நீட்டுவோர் வழங்கும் பொருள்கள் விநியோகிக்க சிறப்பு ஏற்பாடு தேவை
சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
திருவொற்றியூர், டிச.2: சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களைத் தவிர தமிழகத்தின் உள் மாவட்டங்களில் கனமழை இல்லை. இந்நிலையில் சென்னை மாநகர மக்களின் துயர்துடைக்க இப்பகுதி மக்கள் பெரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். சமூக ஊடகங்கள், வலைத்தளங்களில் நூற்றுக்கணக்கானோர் உதவிக்கரம் நீட்ட தயாராக உள்ளதாக நூற்றுக்கணக்கானோர் தகவல்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே இவர்கள் வழங்கும் பொருள்களைப் பெற்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு முறையாகக் கொண்டு சேர்த்திட தமிழக அரசு உடனடியாக சிறப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வாட்ஸ்அப்பில் தெரிவித்த தாமு என்பவரின் அலைபேசி எண்ணை நாம் தொடர்பு கொண்டபோது, நான்கு வேன்களில் மதுரையிலிருந்து பிஸ்கட், ரொட்டி பாக்கெட்களை அனுப்பியுள்ளதாகவும், அவற்றை ஏற்கனவே ஒருவர் சென்னையில் பெற்றுக் கொள்ளவிருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் சென்னையில் ஒருவர் 5 ஆயிரம் உணவு பொட்டலங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும், பெற்றுக்கொண்டு விநியோகிக்க தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண்ணையும், உணவு தயார்நிலையில் உள்ளதற்கான படத்தையும் முகநூலில் தெரிவித்திருந்தார்.
சமீபத்தில் நெடுஞ்சாலைத் துறையில் பணியில் உள்ள மோகன் என்பவர்
தனது நண்பர்கள் மூலம் திரட்டிய ரூ.2 லட்சம் நிதியில் திருவொற்றியூர் பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய சுமார் 1,600 பேருக்கு போர்வைகள் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற வேண்டுகோள்கள் சமூக ஊடகங்களில் வந்தவண்ணம் உள்ளன. முன்பெல்லாம் தொண்டு நிறுவனங்கள் மட்டுமே இப்பணிகளில் ஈடுபட்டுள்ள நிலையில் தற்போது தனிநபர்களும் உதவிக்கரம் நீட்டத் தயாராக உள்ளது வரவேற்கத்தக்கது.
வெள்ளத்தால் அனைத்தையும் இழந்து தவிக்கும் மக்களுக்கு எவ்வளவு கொடுக்தாலும் பாதிக்கப்பட்ட மக்களின் துயார் தீராது என்ற நிலையில் அரசு வழங்கும் நிவாரணம் மட்டுமே போதுமானதாக இராது.
உணவு பொட்டலங்கள், விரைவில் கெட்டுப் போகாத பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள், ரொட்டி பாக்கெட்டுகள், ஆடைகள், போர்வைகள், கொசுவர்த்திச் சுருள்கள், பிஸ்கெட்டுகள், மருந்து பொருள்கள், பாட்டில்கள், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள் உள்ளிட்டவையே பாதிக்கப்பட்ட மக்களின் தற்போதைய தேவையாக உள்ளன. இவற்றை வழங்க தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் உள்ளிட்டோர் தயாராக உள்ள நிலையில் மாவட்டம் தோறும் ஒருங்கிணைத்து நிவாரண பொருள்களைச் சேகரித்து பாதிக்கப்பட்ட பகுதிகள் வாரியாக
வழங்க தேவையான சிறப்பு ஏற்பாடுகளை தமிழக அரசு உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும். இல்லையெனில் நிவாரணப் பொருள்கள்கள் பரவலாகப் போய்ச் சேராது.
எனவே சுனாமி பாதிப்பு ஏற்பட்டபோது களத்தில் இறங்கி செயலாற்றி முதல்வர் ஜெயலலிதா இக்கோரிக்கையையும் கவனத்தில் கொள்ளவேண்டும் என்றனர் திருவொற்றியூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய நிர்வாகிகள் துரைராஜ், சுப்பிரமணி ஆகியோர்.
எவ்வழியேனும் வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களின் துயர்துடைப்பே அனைவரின் கடமையாகக் கொள்ள வேண்டும். இதற்கு தமிழக அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் போதிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட மக்களின் வேண்டுகோளாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment