Monday, 7 December 2015

சென்னைத் துறைமுகத்தில் கண்டெய்னர் ஏற்றுமதி பணிகள் பாதிப்பு

தீபாவளியை கொண்டாட முடியாமல் லாரி டிரைவர்கள் தவிப்பு

திருவொற்றியூர், நவ.9:கனமழை மற்றும் பலத்த காற்று வீசியதால் சென்னைத் துறைமுகத்தில் கண்டெய்னர்கள் ஏற்றுமதி கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து சென்னைத் துறைமுகத்தை நோக்கி வந்து கொண்டிருந்த ஆயிரக்கணக்கான லாரிகள் வரிசையில் காத்திருக்கின்றன.
   வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலையை ஒட்டி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. மேலும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முதல் திங்கள்கிழமை வரை பலத்த காற்று வீசியது. இதனால் சென்னைத் துறைமுகத்தின் வழக்கமான பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பல்கள் நடுக்கடல் கொண்டு செல்லப்பட்டன. மேலும் துறைமுகத்தில் அமைந்துள்ள இரண்டு சரக்குப் பெட்டக முனையங்களிலும் கண்டெய்னர்களைக் கையாளும் பணிகள் நிறுத்தப்பட்டன. இதனால் துறைமுகத்தை நோக்கி வந்து கொண்டிருந்த ஆயிரக்கணக்கான கண்டெய்னர் லாரிகள் மணலி, மாதவரம் வரை வரிசையில் காத்திருக்கின்றன. 
தீபாவளியைக் கொண்டாட முடியாமல் டிரைவர்கள் தவிப்பு: 
    இது குறித்து கண்டெய்னர் லாரி டிரைவர் முருகன் கூறியது,
கடந்த வெள்ளிக்கிழமை சரக்குகளை ஏற்றி வரிசையில் காத்திருக்கிறேன். ஞாயிற்றுக்கிழமை காலையில் துறைமுகத்திற்குள் சென்று இறக்கிவிட்டு குடும்பத்தினருடன் தீபாவளி கொண்டாட சொந்த ஊரான விழுப்புரம் செல்ல திட்டமிட்டிருந்தேன். ஆனால் திங்கள்கிழமை இரவுவரை திருவொற்றியூரைக் கூட கடக்க இயலவில்லை. சுங்கத்துறை சீலிடப்பட்ட ஏற்றுமதிக்கான சரக்குகள் கண்டெய்னர்களில் உள்ளதால் வழியில் நிறுத்திவிட்டும் சென்றுவிட முடியாது. இதேபோல் நூற்றுக்கணக்கான டிரைவர்கள் தீபாவளி கொண்டாடமுடியாமல் 
கனமழை தடுத்துவிட்டது சோகம்தான் என்றார் முருகன்.
கடல் சீற்றம்-ராட்சத அலைகள்:
   காற்றழுத்தத் தாழ்வு நிலையை அடுத்து சென்னைக் கடலோரப் பகுதிகளான காசிமேடு, திருவொற்றியூர், எண்ணூர் உள்ளிட்ட பகுதிகளில் கடல் சீற்றமுடன் காணபட்டது. பெரும்பாலான இடங்களில் தொடர்ந்து ராட்சத அலைகள் வீசின. இதனையடுத்து தாழ்வான பகுதிகளில் கடல் நீர் புகுந்தது. பலத்த காற்று வீசியதால் குடிசைகளில் வசித்தோர் அருகில் உள்ள சமுதாய நலக் கட்டடங்களில் தங்க வைக்கப்பட்டனர். 
நீரில் மூழ்கிய சாலைகள்:
   தொடர் கனமழையால் திருவொற்றியூர் நெடுஞ்சாலை, எண்ணூர் விரைவு சாலையில் அநேக இடங்களில் வெள்ளநீர் தேங்கியது. திருவொற்றியூர் மேற்கு பகுதிகளில் பெரும்பாலான உட்புறச் சாலைகளில் மழைநீர் தேங்கியது. வழக்கமாக மழைக்காலங்களில் கார்கில் நகர், ராஜாஜி நகர் உள்ளிட்ட பகுதிகள் குளம்போல் காட்சியளிக்கும். ஆனால் மழை நீரை வெளியேற்ற ராட்சத மோட்டார் பம்புகள் மாநகராட்சி நிர்வாகத்தால் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததால் இப்பகுதியில்
பெருமளவு பாதிப்பு குறைந்திருந்தது. 
முறையாக அமைக்கப்படாத மழைநீர் வடிகால் கால்வாய்:
   துறைமுக இணைப்புச் சாலைத் திட்டத்தின் கீழ் சீரமைக்கப்பட்ட எண்ணூர் விரைவு நெடுஞ்சாலையில் மழை நீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் இச்சாலையில் பல இடங்களில் எங்கு பார்த்தாலும் மழை நீர் குளம் போல் தேங்கியிருந்தது. சாலையில் தேங்கும் வெள்ள நீர் வழிதோட அமைக்கப்பட்ட துளைகள் முறையாக அமைக்கப்படவில்லை. மேலும் துளைகளில் குப்பைகள் அடைத்திருந்ததால் தண்ணீர் வழிந்தோடவில்லை. இதே நிலைதான் திருவொற்றியூர் நெடுஞ்சாலையிலும் இருந்தது. சாலை விரிவாக்கப்பணிகள் திட்டமிட்ட காலத்திற்குள் நிறைவேற்றப்படாததால் மழைநீர் கால்வாய் பல இடங்களில் ஒருங்கிணைக்கப்படவில்லை. வடக்கு மாட வீதியில் அடைப்புகள் நீக்கப்படாததால் தியாகராஜர் கோயில் குளத்திற்கு வர வேண்டிய மழைநீர் வந்து சேரவில்லை. கனமழையால் திருவொற்றியூரின் பல இடங்களில் பொதுமக்களின் இயல்பு வாழக்கை பாதிக்கப்பட்டது.

No comments:

Post a Comment