Friday, 11 December 2015

வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு குவியும் நிவாரண பொருள்கள் 

பொருள்கள் இருப்பை அதிகரிக்க நடவடிக்கை தேவை 

திருவொற்றியூர், டிச.5:வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களை நோக்கி நிவாரண பொருள்கள் குவிந்தவண்ணம் உள்ளன. ஆனால் இவற்றை பகுதி வாரியாக சமமாக விநியோகிக்க  போதுமான ஏற்பாடுகள் இதுவரை செய்யப்படவில்லை. 
   மேலும் அத்தியாவசிய பொருள்கள் தட்டுப்பாடின்றி அனைவருக்கும் கிடைக்க வேண்டிய நிலையில் தற்போது முழுவீச்சில் நிவாரணப் பணி மேற்கொள்ளவும்,  பல்வேறு அமைப்புகளையும் ஒருங்கிணைக்கும் சிறப்பு ஏற்பாடுகளை தமிழக அரசு உடனடியாக செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். 
   சென்னை மற்றும் புறநகர், கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களைத் தவிர உள்மாவட்டங்களில் வெள்ளப்பாதிப்பு அதிக அளவில் இல்லை. ஆனால் சென்னையில்  தமிழகத்தின் ஒவ்வொரு மூலையிலும் இருந்து வந்து குடியேறிவர்கள்தான் அதிகமாக உள்ளனர்.  எனவே சென்னை மாநகரவாழ் மக்களின் துயர் துடைப்பதில் தமிழகமே தற்போது வீறு கொண்டு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது. வெள்ள நீரின் தாண்டவம் உச்சத்தில் இருந்தபோது தொலைபேசி, அலைபேசி உள்ளிட்டவை செயலிழந்தன. இருப்பினும்  வாட்ஸ்அப், முகநூல் உள்ளிட்டவைகளில் பல்வேறு தரப்பினரும் தாங்கள் ஏற்பாடு செய்து வைத்துள்ள உணவு, குடிநீர் உள்ளிட்டவைகளை பெற்றுக்கொண்டு விநியோகிக்க வேண்டுகோள் விடுத்திருந்தனர்.  
தொண்டு நிறுவனங்களை மிஞ்சிய பொதுநல அமைப்புகள்:
    முன்பெல்லாம் ஏதேனும் பாதிப்பு எனில் நிவாரண பணிகளில்  தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்தான் முக்கிய பங்கு வகிக்கும். ஆனால் தற்போதைய வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டெடுப்பதில் தனிநபர்கள் கூட தாங்களாகவே சிறு சிறு குழுக்களை ஏற்படுத்திக் கொண்டு நிவாரண உதவிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 
மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நிவாரண பொருள்கள் வந்தவண்ணம் உள்ளன. ஆனால் இவற்றை விநியோகம் செய்ய போதுமான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என பாதிக்கப்பட்ட மக்களில் பலர் புகார் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் பெங்களூருவிலிருந்தும் கோவையிலிருந்தும் தலா  1 லட்சம் சப்பாத்திகள் வருகின்றன என்ற தகவல்கள் வந்தன. இவை எங்கு கொண்டு செல்லப்பட்டது, எவ்வாறு விநியோகம் செய்யப்பட்டது என்பது குறித்து இப்பணியில் ஈடுபட்டுள்ள உயர் அதிகாரிகளுக்குக் கூட தெரியவில்லை. 
அனைத்தையும் இழந்து தவிப்பு:
    சென்னையின் புறநகர் பகுதிகளில் அதிக அளவிலான அடுக்கு மாடு வீடுகளில் 
தரைத்தளத்தில் வசித்தவர்களின் டிவி, குளிர்சாதன உபகரணங்கள், கட்டில், மெத்தை, 
போர்வைகள், அரிசி, மாவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள், மளிகைச் சாமான்கள், உடைகள் உள்ளிட்ட அனைத்தும் சேதமடைந்து விட்டன. குடிசைவாசிகளைப் பொருத்தவரை சேதம் இன்னும் அதிகமாகவே இருக்கும். தற்போது மழை சற்று ஓய்ந்ததையடுத்து  படிப்படியாக இனிமேல்தான்  வெள்ளச் சேதாரம் முழுமையாகத் தெரியவரும். வெள்ளத்தில் மூழ்கிய வீடுகளில் மீண்டும் இயல்பு வாழ்க்கையைத் தொடர வேண்டும் எனில் ஒரு புதிய வீட்டில் குடியேறினால் என்ன தேவையோ அத்தனை பொருள்களையும் உடனடியாக வாங்கியாக வேண்டிய கட்டாயத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் உள்ளனர்.
தட்டுப்பாடு ஏற்படுமா?:
  சரி, வாங்குவதற்கு பணம் இருக்கும் என்றே வைத்துக்கொண்டாலும் பாதிக்கப்பட்ட அனைவரும் ஒரே நேரத்தில் கடைகளில் குவிந்தால் என்ன ஆகும்? வெள்ளத்தால் போக்குவரத்து துண்டிக்கப்பட்ட நிலையில் அத்தியாவசியப் பொருள்கள் அனைத்தும் தங்குதடையின்றி கிடைக்குமா? வெள்ளத்தின்போது தட்டுப்பாடு ஏற்பட்டு ஒரு லிட்டர் பால் ரூ 50, தண்ணீர் கேன் ரூ.70 என அனைத்து பொருள்களும் அநியாய விலைக்கு விற்றதை நம்மால் வேடிக்கைதான் பார்க்க முடிந்தது. இதேபோல் மக்கள் பயணிக்க ஆட்டோ, கால் டாக்சிகள், கார்கள் உள்ளிட்டவற்றின் கட்டணங்களும் பாதிக்கப்பட்ட மக்களை பயமுறுத்தும் என்ற அச்சமும் உள்ளது. எனவே கூடுதல் கட்டணம், கூடுதல் விலைக்கு யார் விற்றாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அறிவிக்க வேண்டும். 
விரைவான சரக்குப் போக்குவரத்து: 
     உணவு பொட்டலங்கள், விரைவில் கெட்டுப் போகாத பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள், ரொட்டி பாக்கெட்டுகள், ஆடைகள், போர்வைகள், கொசுவர்த்திச் சுருள்கள், பிஸ்கெட்டுகள், மருந்து பொருள்கள், பாட்டில்கள், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள், சோப்பு, சலவை பவுடர்கள் உள்ளிட்டவையே பாதிக்கப்பட்ட மக்களின் தற்போதைய தேவையாக உள்ளன. இவற்றை தட்டுப்பாடின்றி இருப்பு வைக்க வியாபாரிகள் சங்கக் கூட்டமைப்புகள் மூலம் வியாபாரிகளை அரசு அறிவுறுத்த வேண்டும். மேலும் சங்க நிர்வாகிகளின்  ஒத்துழைப்பையும் கோரவேண்டும்.  மேலும் அத்தியாவசிய பொருள்களை மொத்த கொள்முதல் செய்து இவற்றை உடனடியாக சென்னைக்குக் கொண்டு வந்து சேர்ப்பதற்குத் தேவையான போக்குவரத்து வசதிகளை வியாபாரிகளுக்கு உடனடியாக அரசு ஏற்படுத்தித் தர வேண்டும். 
ஏழைகளுக்கு நிவாரண பொருள்கள்:
     கடைகளில் இருப்பினை உயர்த்தும் அதே நேரம் இப்பொருள்களை வாங்கும் வசதி இல்லாத ஏழை மக்களுக்கு அனைத்து அத்தியாவசிய பொருள்கள் அடங்கிய நிவாரணப் பேக்கேஜை இலவசமாக வழங்க வேண்டும். இவர்களுக்கு பணமாகக் கொடுப்பதைவிட இது போன்று பேக்கேஜ்-ஆகக் கொடுப்பது சிறப்பாக இருக்கும். இவற்றை வழங்க அரசியல் சார்ந்த, சாராத அமைப்புகள், தனிநபர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் உள்ளிட்டோரை வலியுறுத்த வேண்டும். ஏனெனில் தினந்தோறும் ஒரு சில இடங்களில் மட்டும் நிவாரண பொருள்களை மட்டுமே வழங்குவது என்பது தேவையற்றதே. தேவையை அறியாமல் இலவசமாகக் கொடுக்கும் பொருள்களால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரத்தை எந்த விதத்திலும் உயர்த்திட வழிவகுக்காது என்பது சுனாமி நிவாரணப் பணிகள் மூலம் நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.
       எவ்வழியேனும் வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களின் துயர்துடைப்பே அனைவரின் கடமையாகக் கொள்ள வேண்டும். இதற்கு தமிழக அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் போதிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் ஒட்டுமொத்த வேண்டுகோளாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment