இந்திய கடலோரக் காவல் படையில் புதிய ரோந்து கப்பல், படகுகள்
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் அஜய்குமார் சிங் அர்ப்பணித்தார்.
திருவொற்றியூர், மார்ச்.29:இந்திய கடலோரக் காவல்படை கிழக்கு பிராந்தியத்தில் ஐ.சி.சி.எஸ் அனாக் என்ற ரோந்துக் கப்பல், சி-417, சி-430 ஆகிய ரோந்து படகுகளை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் அஜய்குமார் சிங் ஞாயிற்றுக்கிழமை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
இதற்கான விழா நிகழ்ச்சி சென்னைத் துறைமுக வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்திய கடலோரக் காவல்படை கிழக்கு பிராந்திய கமாண்டர் சத்ய பிரகாஷ் சர்மா தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் அஜய்குமார் சிங் கலந்து கொண்டு புதிய ரோந்துக் கப்பல், இரண்டு அதிநவீன படகுகள் உள்ளிட்டவைகளை நாட்டிற்கு அர்ப்பணித்தார்.
இதில் கமாண்டர் சத்யபிரகாஷ் சர்மா பேசியது,
கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் வடிவமைப்பு, கட்டமைப்பு செய்யப்பட்ட புதிய ரோந்துக் கப்பலான ஐசிசிஎஸ் அனாக் (FAST PATROL VESSEL ) 50 மீட்டர் நீளமும், சுமார 290 டன் எடை கொண்டது. மணிக்கு அதிகபட்சமாக 33 கடல் மைல் வேகம் செல்லக் கூடிய இக்கப்பலில் அதிநவீன பல்வேறு வசதிகள் உள்ளன. மேலும் இக்கப்பலில் கேப்டன் மணீஷ்பால், 39 மாலுமிகள், அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். மேலும் காட்டுப்பள்ளி எல் அன் டி சிப் யார்டில் கட்டமைக்கப்பட்ட சி-417, சி-430 என்ற அதி நவீன இடைமறிக்கும் படகுகள் (Interceptor Boats) ஆகியனவும் கிழக்குப் பிராந்தியத்தில் இன்று முதல் இணைக்கப்படுகிறது. இதில் பல்வேறு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
கிழக்குப் பிராந்திய கடலோரக் காவல் படை 2490 கி.மீ. தூரத்திற்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்திய கடலோரப்படையில் தற்போது 102 ரோந்துக் கப்பல்கள், 64 ரோந்து விமானங்கள் உள்ளன. மேலும் 90 புதிய கப்பல்கள், 36 இடைமறிக்கும் படகுகள் உள்ளிட்டவை பல்வேறு கப்பல்கட்டும் தளங்களில் கட்டமைக்கப்பட்டு வருகின்றன. ஆண்டுக்கு சுமார் 850 வீரர்கள், அதிகாரிகளுக்கு புதிய பணிவாய்ப்பு இப்படைப் பிரிவில் அளிக்கப்பட்டு வருகிறது.
நீண்ட கடற்கரையை எல்லையாகக் கொண்ட இந்தியா நாட்டின் பாதுகாப்பில் கடலோரக் காவல் படையின் பங்கு மகத்தானது. கடலோரப் பகுதிகளில் கண்காணிப்பு, கடத்தலை தடுத்தல், மீனவர்கள் பாதுகாப்பு, கப்பல்களுக்குப் பாதுகாப்பு
அளிப்பது, புயல் உள்ளிட்ட ஆபத்து காலங்களில் உதவுவது உள்ளிட்ட பல்வேறு பணிகளை கடலோரக் காவல் படையினர் சிறப்பாகச் செய்து வருகின்றனர். இப்பணிக்கு கூடுதல் பலம் அளிக்கும் விதமாக இப்புதிய கப்பல், படகுகள் இணைப்பு உறுதுணையாக இருக்கும் என்றார் சர்மா.
இந்நிகழ்ச்சியில் கொச்சி கப்பல் கட்டும் தள நிர்வாக இயக்குனர் கேப்டன் சுப்பிரமணியன், காட்டுப்பள்ளி எல் அன் டி
கப்பல் கட்டும் தள இயக்குநர் வைத்தியநாதன், பாதுகாப்புத் துறை மக்கள் தொடர்பு அதிகாரி ஆண்டவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment