காமராஜர் துறைமுகம் வழியாக கார் ஏற்றுமதி செய்ய டொயோடா ஒப்பந்தம்
அமைச்சர் நிதின் கட்கரி முன்னிலையில் கையெழுத்தானது
திருவொற்றியூர், மார்ச் 4:காமராஜர் துறைமுகம் வழியாக கார்களை ஏற்றுமதி செய்ய டொயோடா-கிர்லோஸ்கர் மோட்டார் வாகன நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் கப்பல்த்துறை அமைச்சர் நிதின் கட்கரி முன்னிலையில் செவ்வாய்க்கிழமை புதுதில்லியில் கையெழுத்தானது.
இது குறித்து காமாராஜர் துறைமுகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
2001-ம் ஆண்டு தொடங்கப்பட்டு தற்போது மிக வேகமாக வளர்ந்து வரும் துறைமுகங்களில் ஒன்றான காமராஜர் துறைமுகம் ஆண்டுக்கு சுமார் 32 மில்லியன் டன் சரக்குகளைக் கையாண்டு வருகிறது. இதனை ஆண்டுக்கு 69 மில்லியன் டன்னாக
உயர்த்த பல்வேறு திட்டங்களை அறிவித்து பணிகள் நடைபெற்று வருகின்றன.
2011-ம் ஆண்டு முதல் இத்துறைமுகம் வழியாக கார்கள் ஏற்றுமதி நடைபெற்று வருகிறது. இதுவரை சுமார் 6.95 லட்சம் கார்கள் கையாளப்பட்டுள்ளன. இதற்கு வசதியாக 1.41 லட்சம் சதுர மீட்டர் அளவிலான கார் நிறுத்தும் தளம் அமைக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் இங்கு சுமார் 12 கார்களை நிறுத்த முடியும். மேலும் 4 ஆயிரம் கார்களை நிறுத்து வகையில் கூடுதல் வசதிகள் அமைக்கப்பட்டு வருகிறது. தற்போது நிஸ்ஸான், போர்டு, ஹோண்டா, டைம்லர், அசோக் லேலண்டு உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது வாகனங்களை இத்துறைமுகம் மூலம் ஏற்றுமதி செய்கின்றன.
இந்நிலையில் டொயோடா-கிர்லோஸ்கர் கூட்டு நிறுவனம் பெங்களூரு தொழிற்சாலையில் தயாராகும் கார்களை காமராஜர் துறைமுகம் வழியாக ஏற்றுமதி செய்ய முடிவு செய்துள்ளது. 10 ஆண்டுகள் செல்லத்தக்க இந்த ஒப்பந்தம் சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் கப்பல்த் துறை அமைச்சர் நிதின் கட்கரி முன்னிலையில் புதுதில்லியில் செவ்வாய்க்கிழமை கையெழுத்தாகியது. இந்த ஒப்பந்தத்தில் காமராஜ் துறைமுத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.பாஸ்கராச்சார், டொயோடா கிர்லோஸ்கர் நிறுவனத்தின் துணை மேலாண்மை இயக்குநர் டி.எஸ்.ஜெய்சங்கர் ஆகியோர் கையெழுத்திட்டனர். இந்நிகழ்ச்சியில் இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், கப்பல்த் துறை செயலாளர் ராஜீவ்குமார், இணைச்செயலாளர் (துறைமுகங்கள்)முருகானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்்.
No comments:
Post a Comment