Friday, 16 October 2015

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் கடற்படையினர் கூட்டுப் பயிற்சி
சென்னை அருகே நடுக்கடலில் அக்டோபர் 19-வரை நடைபெறுகிறது

திருவொற்றியூர், அக்.15: இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய மூன்று நாடுகளின் கடற்படையினர் பங்கேற்கும் கூட்டுப் பயிற்சி சென்னைக்கு அருகே நடுக்கடலில் அக்.19-வரை நடைபெற உள்ளதாக இந்திய கடற்படை கிழக்குப் பிரிவு தளபதி ரியர் அட்மிரல் பி.கே.வர்மா சென்னையில் வியாழக்கிழமை தெரிவித்தார்.

   இது குறித்து சென்னைத் துறைமுகத்தில் இந்திய கடற்படையின் போர்க் கப்பலான ஐ.என்.எஸ்.ஷிவாலிக்கில் வியாழக்கிழமை செய்தியாளர் கூட்டம் நடைபெற்றது. அப்போது ரியர் அட்மிரல் பி.கே.வர்மா கூறியது,
    இந்திய, அமெரிக்க கடற்படையினர் பங்கேற்கும்  மலபார் கூட்டுப் பயிற்சி (Excercise Malabar) என்ற பெயரில் கடந்த 1992-ல்  தொடங்கி கடந்த 18 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு பசிபிக் பெருங்கடலின் மேற்கு பகுதியில் நடைபெற்ற ஒத்திகையில் புதிதாக ஜப்பான் நாட்டின் கடற்படையும் இணைந்தது.  இதில் இந்நிலையில் 19-ம் ஆண்டு ஒத்திகையை சென்னைக்கு அருகே நடத்த முடிவு செய்யப்பட்டது. இதில் இந்திய, அமெரிக்க, ஜப்பான் கடற்படையினர் பங்கேற்றுள்ளனர்.  இதன்படி அக்.14 தொடங்கிய கூட்டுப் பயிற்சி இரு நாள்கள் சென்னைத் துறைமுகத்திலும், நான்கு நாள்கள் நடுக்கடலிலும் நடைபெற உள்ளது. 
அதி நவீன விமானம் தாங்கி போர்க் கப்பல்:
         துறைமுகத்தில் நடைபெறும் பயிற்சியில் மூன்று நாடுகளின் தொழில் நுட்ப உத்திகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கங்கள் நடைபெறுகின்றன. நடுக்கடலில் நடைபெறும் கூட்டுப் பயிற்சியில் இந்திய கடற்படையின் ஷிவாலிக், ரன்விஜய், பெட்வா, ஷக்தி ஆகிய நான்கு போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பலான சிந்துத்வஜ், பி.81 டோர்னியர் விமானம், ஹெலிகாப்டர்கள் பங்கேற்கின்றன. அமெரிக்கா கடற்படையின் விமானம் தாங்கி கப்பல், அணு சக்தியில் இயங்கும் அதிநவீன நீர்மூழ்கிக் கப்பல், அதி நவீன ரோந்து விமானங்கள் உள்ளிட்டவை பங்கேற்கின்றன. மேலும் ஜப்பான் நாட்டின் ஏவுகணைகளைக் கொண்டு எதிரிகளின் தளங்களை துள்ளியமாகத் தாக்கும் புயூஜுகி என்ற கப்பலும் இதில் பங்கேற்கிறது.
பயிற்சியின் நோக்கம்:
    இக்கூட்டுப் பயிற்சி மூலம் இரு தரப்பினரின் போர் உத்திகள், போர்க்கருவிகளைக் கையாளும் விதங்கள், கடற்கொள்ளையர்களை எதிர்கொள்வது, இரு தரப்பு ஒத்துழைப்புகளை அதிகரிப்பது, பரிமாற்றம் செய்வது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் இதில் மேற்கொள்ளப்படும். மேலும் எவ்வாறான சிறப்புப் பயிற்சிகளை மேற்கொள்கிறோம் என்பதை வெளிப்படையாகத் தெரிவிக்க இயலாது. மேலும் ஒவ்வொரு நாட்டினரின் கட்டமைப்பு போர்த் திறன் உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் குறித்து வீரர்கள் அறிந்து கொள்ள இயலும். மேலும் வளர்ந்து வரும் அறிவியல் வளர்ச்சியில் கடற்படை கப்பல்கள், போர்க் கருவிகளில் ஏற்பட்டு வரும் தாக்கங்கள் குறித்து படையினர் அறிந்து கொள்ள முடியும். 
எந்த நாட்டிற்கும் எதிரானதல்ல:
    உலக அளவில் ஜனநாயகம் வலுப்பெற்றுள்ள இந்த நாடுகளின் சார்பில் நடைபெறக் கூடிய இப்பயிற்சி மூலம் சுதந்திரமான சர்வதேச கடல்வழிப் பயணத்திற்கான பாதுகாப்பை அதிகரிக்க முடியும். இதனால் சர்வதேச வணிகம் அதிகரிப்பதோடு பொருளாதாரமும் வளர்ச்சி அடையும். மேலும் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த முடியும்.  இது வங்கக் கடல் பகுதியில் நடைபெறுவதால் சீனா நாட்டிற்கு எதிரான கூட்டுப் பயிற்சி இல்லை என்பதோடு எந்த நாட்டிற்கும் எதிரானதல்ல. படையினர் என்றால் தொடர்ந்து இது போன்ற போர்ப் பயிற்சிகளில் ஈடுபடுத்தப்படுத்தப்பட வேண்டும் என்பது வழக்கமானதுதான் என்றார் வர்மா.
   பேட்டியின் போது அமெரிக்க கடற்படை துணைத் தளபதிகள் ஜே.பி.அக்காய்ன், சி.வில்லியம்ஸ், ஜப்பான் கடற்படை துணைத் தளபதி முரகவா உள்ளிட்டோர் உடன் இருந்தனர். 

No comments:

Post a Comment