சென்னை அருகே இந்திய கடற்படை போர்க் கப்பல்கள் அணி வகுத்தன
கடற்படை தினத்தையொட்டி பொதுமக்கள் முன்னிலையில் செயல் விளக்கம்
திருவொற்றியூர், அக்.12:இந்திய கடற்படையின் கிழக்கு பிரிவு சார்பில் 'கடலில் ஒரு நாள்' நிகழ்ச்சி சென்னைக்கு அருகே நடுக்கடலில் திங்கள் நடைபெற்றது. இதில் 8 போர்க் கப்பல்கள் பங்கேற்று அணிவகுத்தன. பின்னர் கடற்படையின் பல்வேறு செயல்பாடுகள் குறித்து விளக்க நிகழ்வுகள் நடைபெற்றன.
1971-ல் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற போரில் பங்கேற்ற இந்திய கடற்படை படகுகளில் சென்று கராச்சி துறைமுகத்தைக் கைப்பற்றி வெற்றி கொண்டது. இந்திய வரலாற்றில் முக்கிய நிகழ்வாகக் கருதப்படும் இந்த வெற்றி யை நினைவு கூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 4-ம் தேதி கடற்படை தினம் கொ்ண்டாடப்பட்டு வருகிறது.
இதேபோல் இந்த ஆண்டும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதில் முதல் நிகழ்ச்சியாக இந்திய கடற்படையின் செயல்பாடுகள் குறித்து முப்படை வீரர்களின் குடும்பத்தினர், ராணுவம், விமானப்படை அதிகாரிகள், மற்றும் பொதுமக்கள் தெரிந்து கொள்ள'கடலில் ஒரு நாள்' என்ற நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. சென்னைக்கு அருகே நடுக்கடலில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஏவுகனைகளை ஏவும், எதிரிகளின் ஏவுகனைகளை அளிக்கும் வல்லமை, அதி நவீன ஆயுதங்கள் அடங்கிய கப்பல்களான ஷிவாலிக், ரன்விஜய், ஷக்தி, பெட்வா, கோரா, விபுடி, நிசான்க் மற்றும் நீர்மூழ்கிக் கப்பலான சிந்துத்வஜ் ஆகிய 8 கப்பல்கள் அணிவகுத்துச் சென்றன.
பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் கடற்படையின் பல்வேறு செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டன. போரின்போது ஒரு கப்பலிலிருந்து மற்றொரு கப்பலுக்கு பொருள்களை பரிமாற்றம் செய்வது, ஹெலிகாப்டர், சிறிய ரக விமானங்களில் ரோந்து செல்வது, அதிநவீன துப்பாக்கிகளால் சுட்டு வீழ்த்துவது, அதிவேக படகுகளில் ரோந்து செல்வது, உள்ளிட்ட பல்வேறு சாகசங்களை கடற்படை வீரர்கள் செய்து காட்டினர். இந்நிகழ்வுகளைக் கண்டுகளிக்க முப்படை வீரர்களின் குடும்பத்தினர், அதிகாரிகள், தேசிய மாணவர் படை (என்.சி.சி.), பொதுமக்கள் என சுமார் சுமார் 3 ஆயிரம் பேர் போர்க்கப்பல்களில் சென்னைத் துறைமுகத்திலிருந்து நடுக்கடலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
கடற்படை கிழக்கு பிராந்திய கமாண்டர் ரியர் அட்மிரல் எஸ்.பொகரே, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்படை அதிகாரி அலோக் பட்நாகர் மற்றும் முப்படையின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்திய கடற்படையின் கிழக்கு பிரிவு விசாகபட்டனத்தைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இந்நிகழ்ச்சிக்காக விசாகபட்டனத்திலிருந்து இக்கப்பல்கள் வரவழைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment