முகவை க.சிவகுமார்.
திருவொற்றியூர் செய்தியாளர்
மும்பை வழியாக மட்டுமே ஆப்பிள் இறக்குமதி செய்ய முடியும்
வர்த்தக அமைச்சகம் அறிவிப்பு
தென் மாநிலங்களில் ஆப்பிள் விலை அதிகரிக்கும் அபாயம்
திருவொற்றியூர், செப்.23:மும்பையில் உள்ள நவசேவா துறைமுகத்தின் வழியாக மட்டுமே வெளிநாட்டு ஆப்பிள் பழங்களை இறக்குமதி செய்ய முடியும் என வர்த்தக அமைச்சகத்தின் இறக்குமதி கொள்கையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பையடுத்து சென்னைத் துறைமுகம் மூலம் ஆப்பிளை இறக்குமதி செய்ய தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சென்னைத் துறைமுகம் மூலம் பல ஆண்டுகளாக வெளிநாடுகளிலிருந்து ஆப்பிள் பழங்கள் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. தற்போது ஆண்டுக்கு சுமார் 10 ஆயிரம் கண்டெய்னர்கள்வரை ஆப்பிள் பழங்கள் இறக்குமதியாகின்றன. இதன் மதிப்பு சுமார் மதிப்பு சுமார் ரூ.1,500 கோடிக்கு இருக்கும். இறக்குமதி செய்யப்படும் பழங்கள் ஒட்டு மொத்த தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட தென் மாநிலங்களின் பெரும்பாலான பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இரண்டு மாதங்களைத் தவிர்த்து ஆண்டு முழுவதும் ஆப்பிள் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.
மும்பை நவசேவாவுக்கு அனுமதி: சென்னை உள்ளிட்ட இதர துறைமுகங்களுக்குத் தடை
இந்நிலையில் வர்த்தக அமைச்சகத்தின் வெளிநாட்டு வர்த்தகக் கொள்கை 2015-2020-ல் கடந்த செப்.14 அன்று திருத்தம் கொண்டு வந்துள்ளது. வெளிநாட்டு வர்த்தகக் இயக்குனரக அறிவிப்பு எண்.21 ன் படி இனி மும்பையில் உள்ள நவசேவா துறைமுகத்தின் வழியே மட்டுமே ஆப்பிள் பழங்களை இறக்குமதி செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் உள்ள 11 பெரிய துறைமுகங்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட சிறிய துறைமுகங்கள் வழியாக ஆப்பிளை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம் ஏதும் அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை.
ஆப்பிள் விலை உயரும் அபாயம்:
சென்னைத் துறைமுகத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வந்த ஆப்பிள் உள்ளிட்ட பழங்கள் தற்போது கிராமங்கள் வரை பரவியிருக்கும் நிலையில் திடீரென தடை விதிக்கப்பட்டுள்ள தடையால் ஆப்பிள் விநியோகத்தில் பற்றாக்குறை ஏற்படும். இதனால் தென் மாநிலங்களில் ஆப்பிள் விலை பல மடங்கு உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பாரபட்சமானது, உள்நோக்கம் கொண்டது:
இது குறித்து தமிழ் வர்த்தக சங்கத் தலைவர் சோழநாச்சியார் ராஜசேகரன் கூறியது, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிஜி உள்ளிட்ட நாடுகளிலிருந்து குளிரூட்டப்பட்ட கண்டெய்னர்களில் இறக்குமதி ஆப்பிள்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. மும்பை வழியே மட்டுமே இறக்குமதி செய்ய முடியும் என்றால் அங்கிருந்து சென்னைக்குக் கொண்டு வர பல மடங்கு செலவு அதிகரிக்கும். இதனால் பொதுமக்கள்தான் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியதிருக்கும். மேலும் ஒரு தரப்பினருக்கு மட்டுமே அளிக்கப்படும் வர்த்தக வாய்ப்புகள் அதே நாட்டில் மற்றொரு பகுதியினருக்கு மறுக்கப்படுவது என்பது எந்த விதத்தில் நியாயம் எனத் தெரியவில்லை.
இந்தியாவின் கிழக்கு நுழைவு வாயிலாக சென்னைத் துறைமுகம் விளங்கி வருகிறது. இங்கு அனைத்து வகை பொருள்களையும் இறக்குமதி செய்வதற்கான வசதிகள் மற்றும் அனைத்து துறை அலுவலகங்கள் சென்னையில் அமைந்துள்ளன. இருப்பினும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இப்பிரச்னை அமைச்சகத்திடம் கேட்டால் இதுவரை எவ்வித விளக்கமும் இல்லை. இந்த அறிவிப்பு பாரபட்சமானது, உள்நோக்கம் கொண்டது என்பதில் ஐயமில்லை. இது குறித்து கப்பல் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மூலமாக மத்திய அரசுக்கு எங்கள் அதிருப்தியைத் தெரிவித்துள்ளோம் என்றார் ராஜசேகரன்.
திரும்பப் பெற வேண்டும்: சுங்கத்துறை முகவர் சங்கம்
இந்த அறிவிப்பு குறித்து சென்னை சுங்க இல்ல முகவர்கள் சங்கத் தலைவர் கே.வி.வி.கிரி கூறியது,
இந்த அறிவிப்பு ஒருதலைபட்சமானது. ஆப்பிள் வர்த்தகம் என்பது நாட்டின் ஒட்டுமொத்த பகுதி முழுதும் நிரம்பியுள்ளது. சென்னைத் துறைமுகம் சுமார் 130 ஆண்டுகளுக்கும் மேலான பழமையுடையது. இத்தடை மூலம் சென்னைத் துறைமுகத்தின் எதிர்காலம் பாதிக்கும். வெளிநாட்டு ஆப்பிள் பழங்களுக்கு இந்தியாவில் ஒட்டுமொத்தத் தடை என்றால் கூட ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் ஆப்பிள் விளையும் பகுதிகளிலிருந்து அருகாமையில் உள்ள மும்பைக்கு அனுமதி. நீண்ட தூரத்தில் உள்ள சென்னைக்குத் தடை என்பது இயல்பாகவே ஏற்றுக் கொள்ள முடியாது. அதிலும் எவ்வித ஆலோசனையும் இன்றி வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பை உடனடியாக மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றார் கிரி.
நீதிமன்றத்தை நாடுவோம்:
இது குறித்து சென்னைக் கோயம்பேடு வியாபாரி சந்தானக் கிருஷ்ணன் கூறியது,
மத்திய அரசு சார்பில் சமீபகாலமாக வெளியிடப்படும் முக்கிய அறிவிப்புகள் உண்மையிலேயே பிரதமர் நரேந்திர மோடியின கவனத்திற்குச் செல்கிறதா எனத் தெரியவில்லை. ஒரே நாட்டில் ஒரு பகுதிக்கு அனுமதி. மற்றொரு பகுதிக்கு தடை என்பது சாத்தியமல்லை. இதனால் பல்வேறு பின் விளைவுகள் ஏற்படும். தற்போது ஆப்பிள் இருப்பு வைத்திருப்பவர்கள் பதுக்கி வைக்க ஆரம்பிப்பார்கள். மும்பையிலிருந்து ஆப்பிளை கொண்டு வந்தால் அனைத்து மட்டத்திலும் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியதிருக்கும். நாடு முழுவதும் ஒரே சீரான வர்த்தகம் வேண்டும் என்ற கொள்கை வளர்ந்து வரும் நிலையில் இதுபோன்ற அறிவிப்புகள் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை பின்னடைவுக்குக் கொண்டு செல்லும். எனவே நடைமுறைக்கு ஒத்து வராத இந்த அறிவிப்பை உடனடியாக மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில் நீதிமன்றங்களை நாடுவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என்றார் சந்தான கிருஷ்ணன்.
சமூக ஊடகங்களில் அனுப்பப்படும் தகவல்களை சேகரித்து வைக்கப்பட வேண்டும் என்ற மத்திய அரசின் அறிவிப்பு அனைத்து தரப்பினரின் எதிர்ப்பால் திரும்பப் பெறப்பட்டது. இதே போல் வர்த்தக அமைச்சகத்தின் இந்த அறிவிப்பும் பொதுமக்களின் எதிர்ப்பினைப் பெறும் என்பதில் ஐயமில்லை. எனவே இது குறித்து உடனடியாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
No comments:
Post a Comment