கண்டெய்னர் லாரிகள் நாள் கணக்கில் காத்திருக்கும் அவலம்
கேள்விக் குறியாகும் சென்னைத் துறைமுக எதிர்காலம்
திருவொற்றியூர், டிச.09::சென்னைத் துறைமுகத்தில் தொடர்ந்து இருந்து வரும் நெரிசல் பிரச்னையால் கண்டெய்னர் லாரிகள் வரிசையில் நாள் கணக்கில் காத்திருக்கும் அவல நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால் சென்னைத் துறைமுகத்தின் எதிர்காலமே கேள்விக்குறியாகும் என வர்த்தகர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
சென்னைத் துறைமுகத்தில் இரண்டு சரக்குப் பெட்டக முனையங்கள் உள்ளன. இவற்றை வெளிநாட்டு நிறுவனங்கள் ஒப்பந்த அடிப்படையில் இயக்கி வருகின்றன.
ஆண்டுக்கு சுமார் 25 லட்சம் கண்டெய்னர்கள் கையாளப்படுகின்றன. இதுதவிர கண்டெய்னரில் செல்லாத ஏராளமான சரக்குகள் கையாளப்படுகின்றன. தினமும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் துறைமுகத்திற்குள் வந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஆனால் இதற்கேற்ப உள்ளேயும், வெளியேயும் போதிய கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை. துறைமுக இணைப்புச் சாலைகள் திட்டம் முழுமையாக நிறைவடையவில்லை. மேலும் மதுரவாயல் உயர்மட்ட மேம்பாலத் திட்டம் உள்ளிட்ட திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது தவிர மேலும் பல பிரச்னைகள் துறைமுகத்தின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கி உள்ளன.
சுங்கத்துறை அதிகாரிகள் ஒத்துழையாமை:
வெளிநாட்டு வர்த்தகம் என்பதால் துறைமுகத்தின் செயல்பாடுகளில்
சுங்கத்துறையின் பங்கு முக்கியமானதாகும். இத்துறையில் சுமார் 40 சதவீத அதிகாரிகள் பற்றாக்குறை கடந்த சில ஆண்டுகளாக நீடித்து வருகிறது. குறைவாக உள்ள அதிகாரிகளை வைத்துக் கொண்டு நிறைவாகப் பணியாற்ற முடியவில்லை.
இதனால் நான்கு அதிகாரிகள் பணி செய்ய வேண்டிய இடத்தில் இரண்டு பேர்தான் பணியாற்றுகின்றனர். பணியில் உள்ள அதிகாரிகளும் விரைவாக பணியாற்றுவதில்லை. இது குறித்து யாரேனும் கேள்வி எழுப்பினால் சோதனையில் ஏதேனும் பிரச்னை என்றால் யார் பொருப்பு என அதிகாரிகள் பதில் அளிக்கின்றனர். மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சி.பி.ஐ. நடத்திய அதிரடி நடவடிக்கையை அடுத்து சுங்கத் துறை கைது செய்யப்பட்டனர். இதனை எதிர்ப்பு தெரிவித்த சுங்கத்துறை அதிகாரிகள் சுணக்கமான வேலைகள் மூலம் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் துறைமுக நுழைவு வாயில்களில் கண்டெய்னர்கள் செல்வதில் மிகுந்த கால தாமதம் ஏற்படுகிறது. இதுவே லாரிகள் பல கி.மீ. தூரத்திற்கு வரிசைகட்டி நிற்பதற்கு
முக்கிய காரணமாக உள்ளது.
சரக்குப் பெட்டக முனையங்கள்:
துறைமுகத்தில் உள்ள இரண்டு முனையங்களுக்கும் கப்பல்கள் வந்து செல்கின்றன. கப்பல் கட்டப்படும் கால அளவிற்கு ஏற்ப துறைமுகத்திற்கு கட்டணம் செலுத்த வேண்டும். இதனால் எந்த முனையத்தில் முனையத்தில் விரைவாக கப்பல்கள் வந்து திருப்பி அனுப்பப்படுகிறதோ அந்த முனையத்திற்கு கப்பல்களை அனுப்ப பன்னாட்டு கப்பல் நிறுவனங்கள் விரும்புகின்றன. இதில் இரண்டு முனையங்களுக்கிடையே போட்டி நிலவுகிறது. இதனால் லாரிகளில் பெட்டகங்களை இறக்கும்பணியை நிறுத்திவிட்டு கப்பல்களில் பெட்டகங்களை ஏற்றி இறக்குவதில் முனையங்கள் சுறுசுறுப்பு காட்டுகின்றன. கப்பல்கள் கட்டப்படும் நாள்களிலெல்லாம் இவ்வாறு பல மணி நேரங்களுக்கு லாரிகளை முனையத்தின் உள்ளே அனுமதிப்பது கீடையாது. இது குறித்து கண்காணிக்க வேண்டிய துறைமுக நிர்வாகம் முனையங்களின் அடாவடிகளைக் கண்டு கொள்வதில்லை என்கிறார் கண்டெய்னர் லாரி உரிமையாளர் பிரபாகரன்.
முன்பு சாலைகள் குறுகலாக இருந்தபோது பொதுப் போக்குவரத்து ஸ்தம்பிக்காமல் இருக்க சில இடங்களில் போலீஸ் பூத்துகள் அமைக்கப்பட்டன. ஆனால் தற்போது சாலைகள் அனைத்தும் ஆறு வழி அளவிற்கு அகலப்படுத்தப்பட்டுவிட்டன. எனவே ஒரு வழியில் லாரிகள் வரிசை கட்டி நின்றால் பொதுமக்களுக்கு எவ்வித சிரமமும் ஏற்படாது. போக்குவரத்தும் ஸ்தம்பிக்காது.
எனவே எண்ணிக்கையில் போலீஸ் பூத்துகளை குறைப்பதை விடுத்து பூத்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. லாரிகள் அவசரமாக முந்திச் செல்ல வேண்டும் எனில் பூத்தில் உள்ள போலீஸாரைக் கவனித்தால் போதுமானது. இதன் மூலம் நாள் கணக்கில் வரிசையில் காத்திருக்கும் லாரிகள் சில மணி நேரங்களில் துறைமுகத்தைச் சென்றடைய முடியும். இது குறித்த சமீபத்தில் பத்திரிகை செய்திகள் வெளியானதையடுத்து இதில் சிறிது மாற்றம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அவசர நடவடிக்கை தேவை:
ஆண்டுக் கணக்கில் தொடரும் இப்பிரச்னையால் சென்னைத் துறைமுகத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருகிறது. சென்னைக்கு அருகாமையில் அதிநவீன தனியார் துறைமுகம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பிரச்னையால் ஏற்றுமதி, இறக்குமதியாளர்கள் வேறு துறைமுகங்களை நாடத் தொடங்கிவிட்டனர். தென்னிந்தியாவின் தொழில் வளர்ச்சியில் சென்னைத் துறைமுகத்தின் பங்கு வரலாற்றுச் சிறப்பு உடையது. இந்த சிறப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் எனில் கண்டெய்னர் போக்குவரத்து நெரிசல் பிரச்னை போர்க்கால அடிப்படையில் தீர்க்கப்பட வேண்டும் என்பது உண்மை.
No comments:
Post a Comment