Friday, 19 June 2015

காட்டுப்பள்ளி துறைமுகத்திற்கு திருப்பி விடப்பட்ட சர்வதேச சரக்குப் பெட்டக கப்பல்

முகவை க.சிவகுமார்.
திருவொற்றியூர் செய்தியாளர்
-----------------------

தொடரும் நெரிசல் பிரச்னை: 

சென்னைத் துறைமுகத்திற்கு எச்சரிக்கை மணி 

திருவொற்றியூர்,ஜூன் 18:தொடர்ந்து இருந்து வரும்  போக்குவரத்து நெரிசல் பிரச்னையால் சென்னைத் துறைமுகத்திற்கு வரவேண்டிய  எம்.வி.சீலேண்டு காமெட் (M.V.SEALAND COMET) என்ற சர்வதேச சரக்குப் பெட்டகக் கப்பல், அருகில் உள்ள காட்டுப்பள்ளி எல் அன் டி தனியார் துறைமுகத்திற்கு  திருப்பி விடப்பட்ட சம்பவம் சென்னைத் துறைமுகத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
    சென்னைத் துறைமுகத்தில் உள்ள சரக்குப் பெட்டக முனையங்கள் மூலம் ஆண்டுக்கு சுமார் 18 லட்சம் கண்டெய்னர்கள் கையாளப்படுகின்றன. ஆனால் இதற்கேற்ப கட்டமைப்பு வசதிகளை முழுமையாக ஏற்படுத்தாததால் கடந்த சில ஆண்டுகளாக கடும் போக்குவரத்து நெரிசல் இருந்து வருகிறது. இது குறித்து பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து புகார் அளித்தும் எவ்வித தீர்வும் காணப்படவில்லை. இதனால் கண்டெய்னர் லாரிகள் துறைமுகத்தில் ஒரு முறை சென்றுவர முதல் 5 நாள்கள்வரை ஆகும் அவல நிலை இருந்து வருகிறது.  இப்பிரச்னையால் வேளாண் விளைபொருள் உள்ளிட்ட குறிப்பிடத் தகுந்த சரக்குகள் வேறு துறைமுகங்களுக்குச் சென்றுவிட்டன. 
இருப்பினும் சுங்கத்துறை, துறைமுக நிர்வாகங்களிடையே போதிய ஒத்துழைப்பு இல்லாததால் இப்பிரச்னை தொடர்கிறது. 
திருப்பிவிடப்பட்ட கப்பல்: 
     இந்நிலையில் உலகில் மிகப்பெரிய கப்பல் நிறுவனங்களின் ஒன்றான மார்க்ஸ் நிறுவனம் சார்பில் கடந்த செவ்வாய்க்கிழமை சென்னைத் துறைமுகத்திற்கு வர வேண்டிய எம்.வி.சீலேண்டு காமெட் என்ற கப்பலில் வரும் சரக்குகளை தவிர்க்க முடியாத காரணங்களால் அருகில் உள்ள காட்டுப்பள்ளித் துறைமுகத்தில் இறக்க அனுமதிக்கும்படி மார்க்ஸ் நிறுவனம் சார்பில் சென்னை சுங்கத்துறையிடம் கடந்த ஜூன் 12-ல் அனுமதி கோரி ஒப்புதல் பெற்றது. இதனையடுத்து கடந்த திங்கள்கிழமை காட்டுப்பள்ளித் துறைமுகத்திற்கு வந்த இக்கப்பல் 3,246 கண்டெய்னகளை இத்துறைமுகத்தில் ஏற்றி, இறக்கிச் சென்றது. . 
26 மணி நேரத்தில் 3,246 கண்டெய்னர்கள்: 
இது குறித்து காட்டுப்பள்ளி எல் அன் டி துறைமுக நிர்வாகத் தரப்பில் கூறியது,
    தமிழ்நாடு அரசு கூட்டாண்மையுடன் அமைக்கப்பட்டுள்ள சர்வதேசத் தரத்திலான இத்துறைமுகத்தை ஜன. 2013 ல் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். இதன்  அருகாமையில் ஏராளமான சரக்குப் பெட்டக நிலையங்கள் உள்ளன. பெரிய கப்பல்களைக் கையாளும் திறன்கொண்ட இத்துறைமுகம்  சுங்கத் துறை அனுமதி உள்ளிட்ட சில காரணங்களால் மந்தநிலை இருந்து வந்தது. ஆனால் தற்போது அனைத்து அனுமதிகளையும் பெற்றுவிட்டோம். ஏற்கனவே சில கப்பல்கள் 15 நாள்களுக்கு ஒரு முறை வந்து செல்கின்றன.  மார்க்ஸ் நிறுவனம் சுங்கத்துறையினரின் உரிய அனுமதியுடன் இக்கப்பலை கடந்த திங்கள்கிழமை கொண்டு வந்தது. 26 மணி நேரத்தில் 3,246 கண்டெய்னர்கள் கையாளப்பட்டன. இங்கு இறக்கி வைக்கப்பட்ட கண்டெய்னர்கள் சில மணி நேரங்களில் துறைமுகத்திலிருந்து வெளியே எடுத்துச் செல்ல முடியும் என்ற நிலை இங்கு உள்ளது என்றனர். 
சென்னைத் துறைமுகத்திற்கு எச்சரிக்கை மணி:
    இது குறி்த்து சுங்கத் துறை முகமை நிறுவன மேலாளர் ஜெகநாதன் கூறியது,
சுமார் 130 ஆண்டுகள் பழமை கொண்ட இத்துறைமுகத்திற்கு இணைப்புக் கப்பல்கள் (Vessel Connectivity) அதிக எண்ணிக்கையில் வந்து செல்கின்றன. இவ்வாறான அதிக கப்பல்கள் வருவதால்தான் சரக்குகளும் அதிக எண்ணிக்கை கண்டெய்னர்களில் எடுத்து வரப்படுகிறது. சென்னைத் துறைமுகம் ஒன்று மட்டுமே இப்பகுதியில் இருந்த நிலைமை மாறி சென்னையிலிருந்து 27 கி.மீ. தொலைவில் காமராஜர் துறைமுகம், 29 கி.மீ. தொலைவில் காட்டுப்பள்ளி எல் அன் டி துறைமுகம், 170 கி.மீ. தொலைவில் கிருஷ்ணாபட்டனம் துறைமுகம், 295 கி.மீ. தொலைவில் காரைக்கால் துறைமுகம் உள்ளிட்டவை அமைந்துள்ளன. இது தவிர பழைய துறைமுகங்களான தூத்துக்குடி, கொச்சி உள்ளிட்ட துறைமுகங்களும் சென்னைக்கு சவாலாகவே உள்ளன.
    இவை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வரும் வர்த்தக வளர்ச்சியை கருத்தில் கொண்டு அமைக்கப்பட்டிருந்தாலும் சென்னைத் துறைமுகத்திற்கு வந்து கொண்டிருந்த சரக்குகளையே அதிகமாக நம்பியுள்ளன என்பது எதார்த்தமானது. எனவே காட்டுப்பள்ளி துறைமுகத்திற்கு மார்க்ஸ் நிறுவன கப்பல் திருப்பிவிடப்பட்ட சம்பவம் சென்னைத் துறைமுகத்திற்கு நேரடியாக விடப்பட்ட எச்சரிக்கை மணி ஆகும். இனியும் கண்டெய்னர் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க சென்னைத் துறைமுகம் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் அடுத்தடுத்து பல கப்பல் நிறுவனங்களும் தங்களது கப்பல்களை இப்புதிய துறைமுகங்களுக்குக் கொண்டு செல்லும் வாய்ப்பு அதிகிரித்துள்ளது என்றார் ஜெகநாதன்.
முனையங்களின் திறன் அதிகரிக்க வேண்டும்:
இது குறி்த்து தமிழ் வர்த்தக சங்கத்தின் தலைவர், சென்னைத் துறைமுக அறங்காவலர் குழு உறுப்பினர்  சோழநாச்சியார் ராஜசேகரன் கூறியது,  
    சென்னைத் துறைமுகம் தனது சிறப்பைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமெனில் இங்குள்ள இரண்டு தனியார் முனையங்களின் கையாளும் திறனை அதிகரிக்க வேண்டும். மேலும் துறைமுகத்திற்கு உள்ளேயும், வெளியேயும் கட்டமைப்பு வசதிகளை ஒருங்கிணைத்து லாரிகள் தாராளமாக வந்து செல்லும் உறுதியை அளிக்க வேண்டும். மதுரவாயல் திட்டத்தை தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும். மேலும் துறைமுகத்திற்குள் லாரிகள் வந்து செல்வதற்கான அதிகபட்ச கால அளவு நிர்ணயிக்கப்பட வேண்டும். சுங்கத்துறையில் அதிகாரிகள் பற்றாக்குறை உள்ளது. இதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் துறைமுகத்தில் நிலவும் ஒட்டு மொத்த பிரச்னைகள் குறித்து வர்த்தக அமைப்புகளுடன் சென்னைத் துறைமுகம் உடனடியாக ஆலோசனை நடத்த வேண்டும். நீண்டகால பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காணப்பட்டால் மட்டுமே இத்துறைமுகத்தை காப்பாற்ற இயலும என்பதே எதார்த்தம் என்றார் சோழநாச்சியார்.
     பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் தனியார் துறைமுகங்களும் வளர வேண்டியதுதான். ஆனால் அந்த வளர்ச்சி உள்ள பொதுத்துறை துறைமுகங்களின் சரிவில்தான் இருக்க வேண்டும் வளரவேண்டும் என்பதில்லை. எனவே தனியார் துறைமுகங்களுடன் போட்டியிட்டு சென்னைத் துறைமுகம் வெற்றி பெற வேண்டும் என்பதே இத்துறைமுகம் சார்ந்த சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது. 

No comments:

Post a Comment