முன்னேற்றம் இல்லாததால் தேடும் பணியில் சோர்வு
திருவொற்றியூர், ஜூன் 16: கடந்த ஜூன் 8-ம் தேதி காணாமல் போன இந்திய கடலோரக் காவல் படையின் பி 81 ரக டோர்னியர் ரோந்து விமானம் காணாமல் போய் 9 நாள்கள் ஆன நிலையில் மீட்பு பணியில் தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டு வருகிறது. அனைத்து நவீன வசதிகளை பயன்படுத்தி ஏராளமான கப்பல்கள், ரோந்து விமானங்கள், ஹெலிகாப்டர்கள் உள்ளிட்டவைகளைப் பயன்படுத்தி முழு வீச்சில் சுமார் 200 மணி நேரத்திற்கு மேல் தேடியும் எவ்வித முன்னேற்றமும் இல்லாததால் மீட்பு படையினர் சோர்வடைந்துள்ளனர்.
கடந்த ஜூன் 8, திங்கள்கிழமை மூன்று அதிகாரிகளுடன் ரோந்துப் பணியில் ஈடுபட்ட டோர்னியர் ரோந்து விமானம் காணாமல் போய் ஒன்பது நாள்கள் ஆகிவிட்டன. கடந்த ஒன்பது நாள்களாக தேடும் பணி நடைபெற்று வந்த நிலையில் கடந்த சனிக்கிழமை விமானம் காணாமல் போய் இருக்க வாய்ப்புள்ள கடல் பகுதியில் எண்ணெய் படலம் மிதப்பது கண்டறியப்பட்டது. மேலும் காணாமல் போன விமானத்திலிருந்து விட்டு விட்டு சமிஞ்சைகள் கிடைப்பதாக கடற்படை கப்பலான சந்தயாக் கண்டறிந்தது. இதனையடுத்து இப்பகுதியில் கடந்த மூன்று நாள்களுக்கும் மேலாக தேடுதல் பணி ஒருங்கிணைக்கப்பட்டன. கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பலான ஐ.என்.எஸ்.சிந்துத்வாஜ் தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளது.
மேலும் தேசிய பெருங்கடல் தொழில் நுட்பக் கழகத்தின் (National Institute of Ocean Technology) ஆய்வுக் கப்பலான 'சாகர் நிதி' தொடர்ந்து விமானத்திலிருந்து கிடைத்த சமிஞ்சை குறி்த்து ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இக்கப்பலில் உள்ள நவீன கருவிகள் மூலம் கடலின் அடிப்பாகம் (Seabed) ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது. மேலும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தொலைவிலிருந்து இயக்கும் கப்பலான (Remotely Operated Vessel-ROV) எம்.வி. ஒலிம்பிக் கேன்யான் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
மேலும் காணாமல் போன விமானத்தை கண்டுபிடிப்பதில் உதவும்படி
இந்திய விமானப்படையை மீட்பு படையினர் திங்கள்கிழமை கேட்டிருந்தனர். இந்நிலையி்ல செவ்வாய்க்கிழமை விமானப்படையின் சிறப்பு ஹெலிகாப்டர்கள்
சென்னையிலிருந்து கிளம்பிச் சென்று சிதம்பரம், தஞ்சாவூர், நாகபட்டனம் உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வாகப் பறந்து விமானத்தைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்தன. இதில் தகவல்கள் ஏதும் கிடைக்காததால் ஹெலிகாப்டர்கள் சென்னை திரும்பின என கடலோரக் காவல்படை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
அனைத்து வகை நவீன கருவிகள் கொண்ட கப்பல்கள், விமானங்கள், படகுகளைக் கொண்டு கடந்த 9 நாள்களாகத் தேடியும் காணாமல் போன விமானம் குறித்து எவ்வித முன்னேற்றமும் இல்லை. இதனால் கடலோரக் காவல்படை, கடலோரப் பாதுகாப்புக் குழு, கடற்படையைச் சேர்ந்த அதிகாரிகள், வீரர்கள் சோர்வுற்றுள்ளனர். மேலும் தற்போது நடைபெற்றுவரும் ஒருங்கிணைக்கப்பட்ட ஆய்வின் முடிவைப் பொருத்து இன்னும் ஓரிரு நாள்களில் தேடும் பணி கைவிடப்பட வாய்ப்புள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment