30 கி.மீ. தூரத்திற்கு கண்டெய்னர் லாரிகள் காத்திருக்கும் அவலம்
முதல்வர் தலையிடக் கோரிக்கை
திருவொற்றியூர், ஜூன் 8: சமீபத்தில் சென்னை சுங்கத்துறை அதிகாரிகளிடம் மத்திய புலனாய்வு பிரிவு சோதனை நடத்தியதையடுத்து ஏற்றுமதி இறக்குமதி பணியில் சுங்கத்துறை அதிகாரிகள் சுணக்கம் காட்டுவதாகவும், இதனால் துறைமுகத்திலிருந்து சுமார் 30 கி.மீ தூரத்திற்கு கண்டெய்னர் லாரிகள் நாள் கணக்கில் காத்திருக்கும் அவலம் உள்ளதாக லாரி டிரைவர்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் கடந்த 20 நாள்களுக்கும் மேலாக நீடித்து வரும் இப்பிரச்னையில் தமிழக முதல்வர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வர்த்தக அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
சென்னைத் துறைமுகத்தில் வெளிநாட்டு நிறுவனங்கள் நிர்வகிக்கும் இரண்டு சரக்குப் பெட்டக முனையங்கள் உள்ளன. இவற்றின் மூலம் ஆண்டுக்கு சுமார் 18 லட்சம் கண்டெய்னர்கள் கையாளப்படுகின்றன. இதற்கேற்ப
சாலை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்து பல்வேறு நடவடிக்கைகள் கப்பல்த் துறை அமைச்சகம் மேற்கொண்டு வந்தது. ரூ.270 கோடி செலவில் அமைக்கப்பட்ட துறைமுக இணைப்புச் சாலைத் திட்டப்பணிகள் பெருமளவு முடிவுற்ற நிலையில் போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இங்கு ஏற்படும் ஏதாவது ஒரு பிரச்னை மூலம் பல ஆண்டுகளாக நிலவி வரும் கண்டெய்னர் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த ஒராண்டில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட வேலை நிறுத்தங்கள் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த இருபது நாள்களுக்கும் மேலாக சரக்குப் பெட்டக முனையங்களில் பணியில் உள்ள சுங்கத் துறை அதிகாரிகள் ஆவணப் பரிசோதனையில் தேவையற்ற சுணக்கம் காட்டுவதாகப் புகார் எழுந்துள்ளது.
சி.பி.ஐ. ரெய்டு எதிரொலி: சுங்க அதிகாரிகள் அதிர்ச்சி
இது குறி்த்து கண்டெய்னர் லாரி டிரைவர்கள் நல சங்க நிர்வாகி முருகன் கூறியது,
சென்னைத் துறைமுகத்தில் கடந்த மே 14-ம் தேதி சி.பி.ஐ. திடீர் ரெய்டு நடத்தியது. இதில் முனையங்களில் பணியில் இருந்தபோது முறைகேடுகளில் ஈடுபட்ட சுங்கத்துறை அதிகாரிகள் பிடிபட்டனர். இவர்கள்மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு சி.பி.ஐ. பரிந்துரை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது சுங்கத் துறை அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து ஏற்றுமதிக்கான ஆவணங்களை தீர ஆய்வு செய்த பிறகுதான் கண்டெய்னர்களை உள்ளே அனுப்ப முடியும் என சுங்கத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். இதே நிலைதான் இறக்குமதியாகும் கண்டெய்னர்களிலும் கடைப்பிடிக்கின்றனர்.
இதனால் லாரிகளை விடுவிக்க சுமார் 10 நிமிடங்கள் முதல் சில நேரம் 30 நிமிடங்கள்வரை நேரம் எடுத்துக் கொள்கின்றனர். இதனையடுத்து நீண்ட வரிசையில் நாள் கணக்கில் காத்திருக்க வேண்டிய அவல நிலை உள்ளது. துறைமுக இணைப்புச் சாலைகளில் சுமார் 30 கி.மீ. தூரத்திற்கு லாரிகள் வரிசை கட்டி நிற்கின்றன. இதனால் நாள் கணக்கில் உணவு, உடையின்றி அவலத்திற்கு உள்ளாகி வருகிறோம். கடந்த மூன்று வாரங்களில் மூன்று முறை வேலை நிறுத்தம் செய்துவிட்டோம். அவ்வப்போது உயர் அதிகாரிகள் தலையிட்டு சமாதானம் செய்கின்றனர். ஆனால் நிலைமையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றார் முருகன்.
அடிக்கடி வேலை நிறுத்தத்தால் பல கோடி ரூபாய் இழப்பு:
சுங்கத்துறை அதிகாரிகளின் நடவடிக்கை குறித்து வெங்காயம் ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தைச் சேர்ந்த பெரியநாயகம் பேசியது,
சென்னைத் துறைமுகத்தில் ஏற்றுமதி செய்வது என்பது குதிரைக் கொம்பாகி வருகிறது. எந்தப் பிரச்னை என்றாலும் வேலை நிறுத்தம்தான் மேற்கொள்ளப்படுகிறது. காரணம் எந்தப் பிரச்னை ஏற்பட்டாலும் யாரும் கண்டு கொள்வதில்லை. மேலும் துறைமுகம்-சுங்கத் துறை அதிகாரிகள் இடையே ஒருங்கிணைப்பு, ஒத்துழைப்பு இல்லை. சுங்க அதிகாரிகளின் போக்கு குறித்து துறைமுக அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடிவதில்லை. அதேபோல் சுங்க அதிகாரிகளும் தங்களின் பணி அதிகாரத்தில் யாரும் தலையிட முடியாது என்ற மனநிலையில்தான் உள்ளனர்.
அதிகாரிகள் இடையே ஒற்றுமை வேண்டும் என்ற அடிப்படையில் இங்கு பணிக்கு வரும் எந்த அதிகாரியும் இதே போல் சுணக்கமாகவே வேலை செய்கின்றனர். மணிக்கு இவ்வளவு கண்டெய்னர்கள் உள்ளே சென்றாக வேண்டும் என்ற நிலையில் அதற்கேற்ற வகையில் ஆவணங்களைச் சோதனையிட நேர வரம்பு நிர்ணயிக்கப்பட வேண்டும். சந்தேகம் ஏற்படும் கண்டெய்னர்கள் தனியாக நிறுத்திவிட்டு வழக்கமான பணிகளை விரைவாக மேற்கொள்ளலாம்.
அனைத்து கண்டெய்னர்களையும் சந்தேகக் கண்ணோடுதான் பார்க்க முடியும் என்றால் ஏற்றுமதியே செய்ய முடியாது. மேலும் தற்போது இப்பிரச்னையால் எந்த நேரமும் திடீர் வேலை நிறுத்தம் ஏற்படும் அபாயம் உள்ளதால் ஏற்றுமதியாளர்கள் கலக்கத்தில் உள்ளனர். கடந்த வாரம் நடைபெற்ற வேலை நிறுத்தத்தால் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள வெங்காயம், பழங்கள், கடலுணவு உள்ளிட்ட பல்வேறு வகையான பொருள்கள் அழுகி நாசமாயின. எனவே சென்னைத் துறைமுகத்தில் சுமூகமாகப் பணிகள் நடைபெற வேண்டும் எனில் அதிகாரம் மிக்க ஒருங்கிணைப்புக் குழு உடனடியாக அமைக்கப்பட வேண்டும் என்றார் பெரிய நாயகம்.
முதல்வர் தலையிடக் கோரிக்கை:
தமிழகத்தின் முக்கிய தொழில் நகரங்களான வேலூர், திருப்பூர், ஈரோடு, திருச்சி, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் அமைந்துள்ள தொழிற்சாலைகள் பெரும்பாலானவை ஏதாவது ஒருவிதத்தில் சென்னைத் துறைமுகத்தை சார்ந்தே உள்ளன. எனவே சென்னைத் துறைமுகத்தில் நிலவும் பிரச்னைகள் நிச்சயமாக தமிழக தொழில் துறையை பாதிக்கும் என்பதில் ஐயமில்லை.
இப்பிரச்னை குறித்து சுங்க அதிகாரிகளிடம் கேட்டால், தங்களுக்கு வேலைப்பளு அதிகமாக உள்ளது. மேலும் அதிகாரிகள் பற்றாக்குறையும் இருக்கிறது. சுணக்கத்திற்கு வேறு உள்நோக்கம் ஏதும் இல்லை என சுங்க அதிகாரிகள் தெரிவிக்கும் நிலையில் பூனைக்கு யார் மணி கட்டுவது என்ற நிலையே தொடர்கிறது. எனவே சுங்க அதிகாரிகளாக இருந்தாலும், துறைமுக நிர்வாகம் என்றாலும், போக்குவரத்துக் காவல்துறை அதிகாரிகள், லாரி உரிமையாளர்கள், லாரி டிரைவர்கள் உள்ளிட்ட யார் மீது தவறு இருந்தாலும் தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். விரைவில் சர்வேதேச முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடைபெற உள்ள நிலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா தலையிட்டால் மட்டுமே இப்பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என்பதே இத்துறையில் ஈடுபட்டுள்ள வர்த்தக அமைப்புகளின் கோரிக்கையாக உள்ளது.
No comments:
Post a Comment