Friday, 12 June 2015

சென்னைத் துறைமுகத்தில் கண்டெய்னர் லாரி டிரைவர்கள் மீண்டும் வேலை நிறுத்தம்

ஏற்றுமதி, இறக்குமதியாளர்கள் கடும் அதிருப்தி

திருவொற்றியூர், ஜூன் 10: சென்னைத் துறைமுகத்தில் சுணக்கமாக நடைபெற்றுவரும் பணிகளை கண்டித்து கண்டெய்னர் லாரி டிரைவர்கள் புதன்கிழமை திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.  கடந்த ஒரே மாதத்திற்குள் மூன்று முறை திடீர் வேலை நிறுத்தம் நடைபெற்ற நிலையில் நான்காவது முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ள வேலைநிறுத்தம் ஏற்றுமதி, இறக்குமதியாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
    சென்னைத் துறைமுகத்தின் உள்ளே வெளிநாட்டைச் சேர்ந்த இரண்டு சரக்கு பெட்டக முனையங்கள் உள்ளன. இம்முனையங்களிலும் தினமும் சுமார் 6 ஆயிரம் 20 அடி அளவிலான கண்டெய்னர்கள் கையாளப்படுகின்றன.
ஆனால் இதற்கேற்ற கட்டமைப்பு வசதிகள் முழுமையாக அமைக்கப்படவில்லை. மேலும் இங்கு தொடர்ந்து இருந்து வரும் பல்வேறு பிரச்னைகளால் கண்டெய்னர் போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. ஒரு கண்டெய்னரை துறைமுகத்தின் உள்ளே கொண்டு செல்வதற்கு சுமார் 3 நாள்கள்வரை காத்திருக்க வேண்டிய அவல நிலை உள்ளது.  இதனால் ஏற்றுமதி, இறக்குமதியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் மட்டுமன்றி லாரி டிரைவர்களும் கடுமையாகப் பாதிக்கபபடுவதாகக் கூறி ஏற்கனவே பலமுறை வேலை நிறுத்தம் நடைபெற்றுள்ளன.  இந்நிலையில் புதன்கிழமை லாரிகளை குறுக்கே நிறுத்தி லாரி டிரைவர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சுங்கத் துறை அதிகாரிகள் அலட்சியம்:
போராட்டம் குறி்த்து லாரி டிரைவர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுவது, 
பல ஆண்டுகளாக நீடித்து வரும் இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்பதில் அனைத்து தரப்பிலுமே போதிய அலட்சியம் 
இருந்து வருகிறது. பல முறை வேலை நிறுத்தம் செய்தும் எவ்வித முன்னேற்றமும் இல்லை.  நான்கைந்து நாள்கள் தொடர்ந்து வீ்ட்டிற்குக் கூட செல்ல முடிவதில்லை. மேலும் உணவு, இயற்கை உபாதை உள்ளிட்ட பல இடர்பாடுகளை நாங்கள் தொடர்ந்து சந்தித்து வருகிறோம். வழியில் கிடைப்பதை மட்டுமே வாங்கிச் சாப்பிட இயலும். அரை மணி நேரத்திற்கு ஒரு முறையாவது லாரியை ஓட்டி சில அடி தூரம் சென்றபிறகு மீண்டும் நிறுத்த வேண்டும். இதனால் லாரியிலும் தூங்க முடியாது. குறைந்த அளவு சம்பளமே கிடைக்கும். இவ்வாறான சூழ்நிலையைப் பொறுத்துக் கொண்டுதான் வேலை செய்து வருகிறோம். திடீர் வேலை நிறுத்தம் செய்ய வேண்டும் என்பது எங்கள் நோக்கம். ஒட்டுமொத்த டிரைவர்களும் சேர்ந்து வேலை நிறுத்தத்தை அறிவிக்க வேண்டியதில்லை. ஒரு சிலர் லாரியை நிறுத்திவிட்டு வேலை நிறுத்தம் செய்ய முடியும் என்ற அவல நிலை சென்னைத் துறைமுகத்தில் உள்ளது. தற்போதைய போராட்டத்திற்கு சுணக்கமான பணிகள் குறித்து சுங்கத்துறை அதிகாரிகள் புதன்கிழமை அளித்த அலட்சியமான பதிலை வேலை நிறுத்தத்திற்கு காரணம் ஆகும் டிரைவர்கள் கூறினர்.
முனையங்களின் அலட்சியமே காரணம்: சுங்கத்துறை அதிகாரிகள்
 இப்போராட்டம் குறித்து சுங்கத் துறை துணை ஆணையர் அறிவழகன் கூறியது,
தற்போதைய பிரச்னைக்கு சுங்கத் துறை மட்டமே காரணம் அல்ல.  சி.பி.ஐ. நடத்திய சோதனையில் சிக்கிய சுங்க அதிகாரிகளின் தனிப்பட்ட பிரச்னையாகும். அதற்காக சுணக்கமாக வேலை செய்வார்கள் என்பதை சுங்கத்துறை அனுமதிக்காது. அதே நேரம் இங்கு நிலவும் ஒட்டுமொத்த நெரிசல் பிரச்னைக்கு மூல காரணம் இங்குள்ள வெளிநாட்டு நிறுவனங்கள் நிர்வகிக்கும் சரக்குப் பெட்டக முனையங்கள்தான். கடந்த 20 நாள்களாக மட்டும் இப்பிரச்னை இல்லை. மாறாக பல ஆண்டுகளாக இது நீடிப்பதற்கு முனையங்களின் செயல்பாடுகள்தான் காரணம். இந்த உண்மை டிரைவர்களுக்கும் தெரியும். குறைந்த அளவு வசதிகளை வைத்துக் கொண்டு முனையங்களை இயக்குகின்றனர். இது குறித்து சுங்கத்துறை சார்பில் முனையங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்படும். கப்பல்கள் தளங்களில் கட்டப்படும்போது கண்டெய்னர்களை லாரிகளில் ஏற்றி இறக்கும் பணிகளை முனையங்கள் மேற்கொள்ளாததே நெரிசலுக்கு முக்கிய காரணம் ஆகும்.  பல்வேறு தரப்பினர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டங்களில் இது வெளிக்கொணரப்பட்டுள்ளது. எனவே சுங்கத்துறை மீது புகார் என்பதை ஏற்க முடியாது. இருப்பினும் எங்களது பணிகளை விரைவாக மேற்கொள்ளும் வகையில் கூடுதல் அதிகாரிகளை உடனே நியமிக்க உள்ளோம் என்றார் அவர்
கண்காணிப்புக் குழு அமைக்கப்படும்: துறைமுக துணைத் தலைவர்       
சென்னைத் துறைமுகத்தில் அடிக்கடி வேலை நிறுத்தம் நடைபெறுவது குறித்து சென்னைத் துறைமுகத் துணைத் தலைவர் ஐ.ஜெயக்குமார் கூறியது,
   துறைமுகத்தில் நீண்ட நாள்களாக இருந்து வரும் இருந்து வரும் கண்டெய்னர் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காண்பதில் சென்னைத் துறைமுகம் முனைப்பாக ஈடுபட்டு வருகிறது. இப்பிரச்னை குறித்து முன்னர் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டங்களில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி எந்தவிதமாக குறைகளாக இருந்தாலும் துறைமுக நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு வரும்படிதான் கூறியதை அனைத்து தரப்பினரும் ஒப்புக் கொண்டுள்ள நிலையில் இது போன்று முன்னறிவிப்பின்றி போராட்டத்தில் ஈடுபடுவது துறைமுகத்திற்கு மட்டுமல்ல அனைத்து தரப்பினருக்கும் இழப்புதான் ஏற்படும். மேலும் டிரைவர்களின் பல்வேறு கோரிக்கைகளை செயல்படுத்த திட்டமிடப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. மேலும் முனையங்களின் செயல்பாடுகள் குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். முனையங்களில் கிரேன் உள்ளிட்ட  கூடுதல் வசதிகளை ஏற்படுத்தும்படியும், லாரிகளில் கண்டெய்னர்களை கையாள்வது, கப்பல்களில் கண்டெய்னர்களைக் கையாள்வது உள்ளிட்டவைகளின் நேர மேலாண்மையைக் கடைப்பிடிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. 
    மேலும் கண்டெய்னர் போக்குவரத்து நெரிசல் பிரச்னையை மட்டும் பிரத்யேகமாகக் கண்காணிக்கும் வகையில் துறைமுக போக்குவரத்து மேலாளர் தலைமையில் சுங்கத்துறை, சரக்குப் பெட்டக முனைய அதிகாரிகள், டிரைவர்கள், லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளை உள்ளடக்கிய சிறப்பு குழு உடனே அமைக்கப்படும். இக்குழு இப்பிரச்னையை நிரந்தரமாகத் தீர்க்க வேண்டிய பணிகளைச் செய்யும். எனவே எதிர்காலத்தில் அடிக்கடி வேலை நிறுத்தம் ஏற்படாது. தற்போதைய வேலை நிறுத்தம் வியாழக்கிழமை காலைக்குள் முடிவுக்குக் கொண்டு வரப்படும் என்றார் ஜெயக்குமார்.

No comments:

Post a Comment