ஏழாவது நாளாவது தேடும் பணி தொடர்கிறது
திருவொற்றியூர், ஜூன் 14:கடந்த திங்கள்கிழமை காணாமல் போன இந்திய கடலோரக் காவல் படையின் பி 81 ரக டோர்னியர் ரோந்து விமானம் காணாமல் போய் 7 நாள்கள் ஆன நிலையில் சனிக்கிழமை விமானம் காணாமல் போனதாகக் கூறப்படும் பகுதியில் புதிய எண்ணெய் படலம் மிதப்பதாகவும், சமிஞ்சைகள் கிடைத்திருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் ஞாயிற்றுக்கிழமை இதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
கடந்த திங்கள்கிழமை மூன்று அதிகாரிகளுடன் ரோந்துப் பணியில் ஈடுபட்ட டோர்னியர் ரோந்து விமானம் காணாமல் போய் கடந்த ஏழு நாள்கள் ஆகிவிட்டது. சனிக்கிழமை விமானம் காணாமல் போய் இருக்க வாய்ப்புள்ள கடல் பகுதியில் எண்ணெய் படலம் மிதப்பது கண்டறியப்பட்டது. மேலும் காணாமல் போன விமானத்திலிருந்து விட்டு விட்டு சமிஞ்சைகள் கிடைத்தது. இதனையடுத்து இப்பகுதியில் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள சிறப்பு கப்பல்கள், விமானங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு விமானத்தை கண்டறியும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. அதற்குள் இரவு நேரமாகிவிட்டதால் பணியில் சுணக்கம் ஏற்பட்டது. ஞாயிற்றுக்கிழமை எண்ணெய் படலம் வெளியேறுவது நின்று போய்விட்டதாகவும், விமானத்திலிருந்து கிடைத்துவந்த சமிஞ்சையும் சரிவர தொடரவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனால் காணாமல் போன விமானத்தை மீட்பதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தேடும் பணி தொடரும் என கடலோரக் காவல்படை அறிவித்துள்ளது.
இது குறித்து ஞாயிற்றுக்கிழமை கடலோரக் காவல்படை கிழக்கு பிராந்திய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தற்போது தேடும் பணியில் 8 ரோந்துக் கப்பல்கள், அதிவேகப் படகுகள் தொடர்ந்து ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
மேலும் கடலுக்கு அடியில் தேடும் பணியில் இந்திய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பலான ஐ.என்.எஸ். சிந்துத்வாஜ் சனிக்கிழமை இரவு 10 மணியளவில் காரைக்கால் பகுதிக்கு வந்து சேர்ந்தது. ஏற்கனவே பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள சோனார் (Sound Navigation and Ranging-SONAR) கருவிகள் பொருத்தப்பட்ட ஐ.என்.எஸ். சந்தயாக் ஆகிய ஆழ் கடல் பகுதியில் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளது. இதில் பொருத்தப்பட்டுள்ள இருப்பிடம் அறியும் கருவி மூலம் 37.5 கிலோ ஹெர்ட்ஸ் அலைவரிசையில் காணாமல் போன விமானத்தின் சமிஞ்சை
கிடைத்து. இதனையடுத்து கடலோரக் காவல் படையின் ரோந்து கப்பலான ஐ.சி.ஜி.எஸ் விக்ராவில் தேசிய கடல்சார் தொழில் நுட்பக் கழகத்தின் (National Institute of Ocean Technology) தொழில் நுட்பக்குழுவினர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இக்குழு கொண்டு செல்லும் சிறப்புக் கருவி மூலம் காணாமல் போன விமானத்திலிருந்து வெளி வரும் சமிஞ்சையை ஆய்வு செய்யும்.
இதற்கிடையே ஹைதராபாத்தில் உள்ள தேசிய தொலை உணர்வு மையத்தின் உதவியை நாடியதில், விமானம் காணாமல் போனதாக நம்பப்படும் பகுதியில் மேகமூட்டமாக இருப்பதால் தெளிவான செயற்கை கோள் படங்கள் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளனர். இதற்கிடையே கடலில் சிக்கித் தவித்த 10 மீனவர்களை அபிசேக் என்ற கடலோரக் காவல்படை மீட்டு புதுச்சேரி அழைத்துவந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment