சக்திய வாய்ந்த கேமரா பொருத்திய கருவி கடலுக்குள் செலுத்தப்பட்டது
திருவொற்றியூர், ஜூன், 19: கடந்த ஜூன் 8-ம் தேதி காணாமல் போன இந்திய கடலோரக் காவல் படையின் பி 81 ரக டோர்னியர் ரோந்து விமானத்தைக் கண்டறிவதற்காக காக்கிநாடாவிலிருந்து வரவழைக்கப்பட்டுள்ள அதி நவீன ஆழ்கடல் ஆய்வுக் கப்பலான எம்.வி. ஒலிம்பிக் கேன்யான் விமானம் காணாமல் போனதாக நம்பப்படும் பகுதிக்கு வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு வந்தடைந்தது.
தற்போது முதல்கட்ட ஆய்வுகளை மேற்கொண்டுள்ள இக்கப்பல் ஆயிரம் மீட்டர் ஆழம் வரை ஆய்வு செய்யும் நவீன கேமராக்கள் அடங்கிய தொலைவிலிருந்து இயக்கும் கருவியை (Remotely Operated Vessel) கடலுக்குள் இறக்கி ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ளது என கடலோரக் காவல்படை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஜூன் 8, திங்கள்கிழமை மூன்று அதிகாரிகளுடன் ரோந்துப் பணியில் ஈடுபட்ட டோர்னியர் ரோந்து விமானம் காணாமல் போய் வெள்ளிக்கிழமையுடன் 12 நாள்கள் ஆகிவிட்டன. விமானத்தைத் தேடும் பணியில் ஈடுபட்ட ஐ.என். எஸ் சந்தயாக் என்ற கடற்படை கப்பல் காணாமல் போன விமானத்திலிருந்து விட்டு விட்டு சமிஞ்சைகள் வருவதை ஒலி அலைகளைக் கொண்டு இருப்பிடம் அறியும் கருவி (Sonar Locating Beacon-SLB) மூலம் கடந்த ஜூன் 12-ம் தேதி கண்டறிந்தது. இதனையடுத்து சமிஞ்ச் கிடைத்த பகுதி சென்னையிலிருந்து சுமார் 95 கடல் மைல் தூரத்திலும், சிதம்பரம் கடலோரப் பகுதியிலிருந்து சுமார் 16 கடல் மைல் தூரத்திலும் மையமாகக் கொண்டிருந்தது. இதனையடுத்து கடற்படை நீர் மூழ்கி்க் கப்பல் ஐ.என்.எஸ். சிந்துத்வாஜ், இதேபோல் எதிரொலி முறையில் இயங்கும் (Echo Sound) கருவி பொருத்தப்பட்ட தேசிய பெருங்கடல் தொழில் நுட்பக் கழகத்தின் (National Institute of Ocean Technology) ஆய்வுக் கப்பலான 'சாகர் நிதி' உள்ளிட்டவை இப்பகுதிக்கு வரவழைக்கப்பட்டு தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. மேலும் பத்துக்கும் மேற்பட்ட ரோந்துக் கப்பல்கள், விமானங்கள் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
எம்.வி.ஒலிம்பிக் கேன்யான்:
மேலும் விமானப் படை ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணியும் நடைபெற்றது. ஆனாலும் காணாமல் போன விமானத்தின் இருப்பிடம் அறிவதிலும் தொடர் முன்னேற்றம் காணப்படவில்லை. இதற்கு காரணம் இக்கடல் பகுதி சுமார் 700 முதல் 1000 மீட்டர்வரை ஆழமானது. எனவே கடலின் அடிப்பகுதிவரை சென்று ஆய்வு நடத்துவதற்கான வசதிகள் ஏற்கனவே பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள கப்பல்களில் இல்லை. எனவே ஆயிரம் மீட்டர் ஆழம்வரை ஆய்வு செய்யக்கூடிய ரிலையன்ஸ் நிறுவனத்தின் பல்நோக்கு கப்பலான எம்.வி.ஒலிம்பிக் கேன்யான்-ஐ வரவழைக்க முடிவு செய்யப்பட்டது. இக்கப்பல் ஏற்கனவே கடந்த ஆண்டு விசாகபட்டனம் அருகே மூழ்கிய கடற்டை கப்பலின் இருப்பிடத்தை அறிவதில் வெற்றிகரமாக் செயல்பட்டுள்ளது கவனத்தில் கொள்ளப்பட்டது. இதனையடுத்து கடலோரக் காவல்படையின் அழைப்பின் பேரில் இக்கப்பல் வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு விமானம் காணாமல் போனதாகக் கூறப்படும் பகுதிக்கு வந்த சேர்ந்தது.
தொலைவிலிருந்து இயக்கும் கருவி செலுத்தப்பட்டது:
இது குறித்து கடலோரக் காவல்படை அதிகாரிகள் கூறியது,
எம்.வி. கேன்யான் காமெட் இப்பகுதிக்கு வந்தவுடன் இதில் உள்ள நிபுணர்கள் இப்பகுதியில் கடலின் ஆழம், கடல் அலையின் வேகம், புவியியல் அமைப்பு, ஏற்கனவே பெறப்பட்ட தகவல்கள் உள்ளிட்டவைகள் குறித்து முதல்கட்ட ஆய்வில் ஈடுபட்டனர். பின்னர் அதிக பகுத்தறியும் திறன் கொண்ட கேமராக்கள் (High Resolution Cameras) அடங்கிய தொலைவிலிருந்து இயக்கும் கருவியை (Remotely Operated Vessel) கடலுக்குள் செலுத்தி வருகின்றனர். மேலும் ஏற்கனவே பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த கப்பல்கள் இதே பகுதியில் தொடர்ந்து நிலை நிறுத்தப்பட்டுள்ளன. தேவைபட்டால் இவற்றின் உதவி மீண்டும் நாடப்படும். எனவே எந்த நேரமும் காணாமல் போன விமானம் குறி்த்து தகவல்கள் கிடைக்கப் பெறலாம் என தெரிவித்தனர்.
No comments:
Post a Comment