Wednesday, 17 June 2015

காணாமல் போன விமானத்தை கண்டுபிடிக்க வாய்ப்புள்ளதா?

 இறுதிக் கட்டத்தில் மீட்பு பணி                                                          




                                       கடந்த ஜூன் 8-ம் தேதி காணாமல் போன இந்திய கடலோரக் காவல் படையின் பி 81 ரக டோர்னியர் ரோந்து விமானம் காணாமல் போய் 8 நாள்கள் ஆன நிலையில் மீட்பு பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் ஓரிரு நாள்களில் விமானத்தை கண்டறிய வாய்ப்புள்ளதா? அல்லது இல்லையா? என்பது தெரியவரும் என கடலோரக் காவல் படை வட்டாரத்தில் கூறப்படுகிறது.  
     கடந்த ஜூன் 8, திங்கள்கிழமை மூன்று அதிகாரிகளுடன் ரோந்துப் பணியில் ஈடுபட்ட டோர்னியர் ரோந்து விமானம் காணாமல் போய் எட்டு நாள்கள் ஆகிவிட்டன. கடந்த எட்டு நாள்களாக தேடும் பணி நடைபெற்று வந்த நிலையில் கடந்த சனிக்கிழமை விமானம் காணாமல் போய் இருக்க வாய்ப்புள்ள கடல் பகுதியில் எண்ணெய் படலம் மிதப்பது கண்டறியப்பட்டது. மேலும் காணாமல் போன விமானத்திலிருந்து விட்டு விட்டு சமிஞ்சைகள் கிடைத்தது.  இதனையடுத்து இப்பகுதியில் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள சிறப்பு கப்பல்கள், விமானங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு விமானத்தை கண்டறியும் பணி தீவிரப்படுத்தப்பட்டன.  ஆனால் எண்ணெய் படலம் வெளியேறுவது நின்று போய்விட்டது, அதேபோல் விமானத்திலிருந்து கிடைத்துவந்த சமிஞ்சையும் சரிவர தொடரவில்லை.  இதனால் காணாமல் போன விமானத்தை மீட்பதில் பின்னடைவு ஏற்பட்டது.  எனவே அனைத்து வசதிகளையும் ஒருங்கிணைத்து இறுதிக் கட்டமாக  தீவிரமாகத் தேடும் பணியில் கடலோரக் காவல்படை ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 
இது குறித்து இந்திய கடலோரக் காவல் படை கிழக்கு பிராந்திய அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 
    தற்போது தேடும் பணியில் 7 ரோந்துக் கப்பல்கள், அதிவேகப் படகுகள் தொடர்ந்து ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மேலும் கடலுக்கு அடியில் தேடும் பணியில் சனிக்கிழமை இணைந்த இந்திய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பலான ஐ.என்.எஸ். சிந்துத்வாஜ், கப்பல் காணாமல் போனதாகக் நம்பப்படும் பகுதியில் தொடர்ந்து தீவிரமாகத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே ஐ.என்.எஸ். சந்தயாக் என்ற கப்பலில்  பொறுத்தப்பட்டுள்ள சோனார் (Sound Navigation and Ranging-SONAR) கருவிகள் மூலம் சமிஞ்சைகள் கிடைப்பதாக கூறப்படும் பகுதியில் நீர்மூழ்கிக் கப்பலும் பணியில் ஈடுபட்டு வருகிறது. நீர்மூழ்கிக் கப்பலில் உள்ள கருவிகள் மூலம் நடத்திய ஆய்வில் முன்பு தெரிவிக்கப்பட்டதைப் போலவே  8 முதல் 40 கிலோ ஹெர்ட்ஸ் அலைவரிசையில் அவ்வப்போது சமிஞ்சைகள் கிடைத்து வருகிறது. ஆனாலும் உறுதியாக இப்பகுதியில்தான் அது காணாமல் போன விமானத்திலிருந்துதான் வருகிறதா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை.
    மேலும் தேசிய பெருங்கடல் தொழில் நுட்பக் கழகத்தின் (National Institute of Ocean Technology) ஆய்வுக் கப்பலான 'சாகர் நிதி' இப்பகுதிக்கு வரவழைக்கப்பட்டு ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இது கடலின் அடிப்பாகத்தை (Seabed) அளவிட்டு சோதனை நடத்தி வருகிறது.  இதற்கிடையே ரிலையன்ஸ் நிறுவனத்தின் தொலைவிலிருந்து இயக்கும் கப்பலான (Remotely Operated Vessel-ROV) எம்.வி. ஒலிம்பிக் கேன்யான் தேடும் பணியில் ஈடுபட்டுள்ள பகுதிக்கு வரவழைக்கப்பட்டுள்ளது. மேலும் நிலப்பகுதியில் எங்கேனும் விமானம் விழுந்திருக்க வாய்ப்புள்ளதா? என ஹெலிகாப்டர்கள் மூலம் தேடிப்பார்க்கும் படி இந்திய விமானப் படையை மீட்பு குழுவினர் கேட்டுக் கொண்டுள்ளனர். எனவே விமானத்தை மீட்பதில் அனைத்து நவீன வசதிகளையும் ஒருங்கிணைத்து இறுதி கட்டத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளோம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
   கடந்த 8 நாள்களாகத் தேடியும் காணாமல் போன விமானம் குறித்து எவ்வித தெளிவான தகவல்களும் கிடைக்கவில்லை. தற்போது அனைத்து நவீன அறிவியல் வசதிகளையும் ஒருங்கிணைக்கப்பட்டு தேடும் பணி நடைபெற்று வருகிறது. எனவே  காணாமல் போன விமானத்தை கண்டறிய வாய்ப்புள்ளதா? இல்லையா? என்பது இன்னும் ஓரிரு நாள்களில் தெரிந்துவிடும் என்பதே தற்போதைய நிலை.

No comments:

Post a Comment