முகவை க.சிவகுமார்,
திருவொற்றியூர் செய்தியாளர்
சர்வதேச முதலீட்டாளர்கள் சந்திப்பை முன்னிட்டு
திருவொற்றியூர், ஜூன்.15:தமிழத்தின் தொழில் வளர்ச்சியை பெருக்குவதற்காக சர்வதேச முதலீட்டாளர்கள் சந்திப்பு (Global Inverstors Meet-2015) வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக கிடப்பில் உள்ள மதுரவாயல் உயர்மட்ட விரைவுச் சாலை திட்டத்தை தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
சென்னைத் துறைமுக வளர்ச்சிக்கான முக்கிய திட்டம்:
135 ஆண்டுகள் பழமையான சென்னைத் துறைமுகம் மாநகரை ஒட்டி அமைந்துள்ளதால் இத்துறைமுகத்திற்கு வரும் கனரக வாகனங்கள் நகர போக்குவரத்து நெரிசலைத் தாண்டியே வந்து சேர வேண்டும். 10 ஆண்டுகளுக்கு முன்புவரை துறைமுகத்திற்கு வாகனங்கள் சென்னை மாநகரத்தின் முக்கிய சாலைகள் அனைத்திலும் அனுமதிக்கப்பட்டன. ஆனால் கனரக வாகனங்களால் பொதுமக்களின் வாகனங்கள் நெரிசலில் சிக்குவதைத் தவிர்க்கும் வகையில் துறைமுகத்திற்குச் செல்லும் வாகனங்கள் மாதவரம், மணலி, திருவொற்றியூர், ராயபுரம் வழியாக மட்டுமே செல்லும் வகையில் திருப்பி விடப்பட்டன. இதனால் இப்பகுயில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதையடுத்து துறைமுகத்தின் கட்டமைப்பு வசதிகளைப் பெருக்க மத்திய அரசு திட்டமிட்டது.
பிரதமர் அடிக்கல் நாட்டிய திட்டம்:
இதனையடுத்து ரூ.600 கோடி மதிப்பீட்டில் துறைமுக இணைப்புச் சாலைத் திட்டமும்(EMRIP-Ennore Manali Road Improvement Project), ரூ.1,885 கோடி மதிப்பீட்டில் சென்னைத் துறைமுகம்-மதுரவாயல் உயர்மட்ட விரைவுச்சாலை (Chennai Port-Maduravoyal Elevated Expressway) திட்டமும் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டன. அறிவிக்கப்பட்டன. இதன்படி 19 கிலோ மீட்டர் நீளம் கொண்ட மதுரவாயல் உயர்மட்ட விரைவு சாலை அமைக்கும் திட்டத்திற்கு ஜன.9, 2009 அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் அடிக்கல் நாட்டினார். இதனையடுத்து பணிகள் தொடங்கப்பட்டு மொத்தமுள்ள 889 தூண்களில் 120 தூண்கள் அமைக்கப்பட்டன, மேலும் 15 தூண்களில் சாலை அமைப்பதற்கான மேற்பரப்பும் கட்டப்பட்டது.
பணிகளை நிறுத்தி வைக்க தமிழக அரசு ஆணை:
இந்த நிலையில் சேத்துப்பட்டு அருகே கூவம் ஆற்றுக்குள் ஏற்கெனவே திட்டமிட்டபடி பணிகள் நடக்காததால், ஆற்றுநீரின் போக்கு தடைபடும் என்று கூறி, இந்தத் திட்டப் பணிகளை உடனடியாக நிறுத்தும்படி கடந்த மார்ச் 29, 2012 மாதம் தமிழக அரசின் நீர்வள ஆதாரத் துறை உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து உயர்மட்ட எக்ஸ்பிரஸ் சாலைப் பணிகள் அப்படியே நிறுத்தப்பட்டன. மேலும் இத்திட்டத்திற்கு புதிய அனுமதியும், கடலோர ஒழுங்குமுறை மண்டலத்தின் ஒப்புதலை மீண்டும் பெற வேண்டும் என நெடுஞ்சாலை ஆணையத்தை தமிழக நீர்வள ஆதாரத் துறை கேட்டுக்கொண்டது. ஆனால் திட்டத்தின் வழித்தடத்தில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படாததால், புதியதாக அனுமதிகள் தேவையில்லை. மேலும் சாலைக்காக தூண்கள் அமைக்கப்படும் பகுதிகளில் தண்ணீர் போக்கில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என ஆணையம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
ஆணையை ரத்து செய்த உயர்நீதிமன்றம்: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு:
இந்த விளக்கங்களை தமிழக அரசு ஏற்றுக் கொள்ளாததையடுத்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த உயர்நீதிமன்றம் கடந்த பிப்.20, 2014 அன்று அளித்த தீர்ப்பில் தமிழக அரசின் தமிழக அரசின் உத்தரவை நிறுத்தி வைப்பதாக தெரிவித்தது. இதற்கிடையே திட்டபணிகள் பாதியில் நிறுத்தப்பட்டதால் தங்களுக்கு
ரூ.600 கோடிக்கும் மேல் நட்டம் ஏற்பட்டுவிட்டதாகக் கோரி ஆணையத்திற்கு நோட்டீசு அளித்தனர். இந்நிலையில் சிக்கல் தீர்ந்து பணிகள் மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தமிழக அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் கடந்த மார்ச் 4, 2014-ல் மேல் முறையீடு செய்யப்பட்டது. தற்போது இவ்வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
மத்திய-மாநில அரசுகளிடையே புரிந்துணர்வு தேவை: ஏ.சக்திவேல்
இத்திட்டம் குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவரும், இந்திய ஏற்றுமதியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு (Federation of Indian Exporeters Organisations-FIEO) தெற்கு மண்டலத் தலைவருமான ஏ.சக்திவேல் கூறியது,
திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 10 மணி நேரத்தில் சென்னைக்குத் செல்லும் சரக்குகள் அங்கிருந்து துறைமுகத்தை அடைய 4 நாள்கள் வரை காத்திருக்கும் அவலம் பல ஆண்டுகளாக நீடிக்கிறது. இதற்கு காரணம் போக்குவரத்து நெரிசல்தான். இதனால் திட்டமிட்டபடி குறிப்பிட்ட நேரத்திற்குள் சரக்குகளை கப்பலில் அனுப்ப இயலாத நிலை உள்ளது. இன்றைக்கு பெரும்பாலான தொழில்கள் ஏதாவது ஒரு விதத்தில் ஏற்றுமதி, இறக்குமதியுடன் தொடர்புடையதாகவே உள்ளன. எனவே மாநிலத்தில் தொழில் வளர்ச்சி தொடர வேண்டும் எனில் சென்னைத் துறைமுகத்தின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியாக வேண்டும். இதில் முக்கியமானது மதுரவாயல் உயர்மட்ட விரைவுச் சாலைத் திட்டம்தான் .
எனவே இத்திட்டத்தை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்படும் பட்சத்தில் ஏற்றுமதி, இறக்குமதி பாதிக்கப்பட்டு தமிழகத்தின் தொழில் வளர்ச்சியே நிச்சயம் பாதிப்புக்கு உள்ளாகும். எனவே தமிழக முதல்வர் ஜெயலலிதா நேரடியாகத் தலையிட்டு இத்திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். சுணக்கமின்றி தொழில் வளர்ச்சி ஏற்பட வேண்டும் எனில் மத்திய, மாநில அரசுகளிடையே புரிந்துணர்வு கொண்ட இணக்கமான சூழல் இருக்க வேண்டும். எனவே இத்திட்டம் நிறைவேற இதுவே சரியான தருணம் என்பதே உண்மை நிலைமை என்றார் சக்திவேல்
துறைமுகத்தை மூடும் நிலை ஏற்படும்:
இது குறி்த்து தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சுகுமார் கூறியது,
சென்னைத்துறைமுகத்திற்கு தினமும் சுமார் 6 ஆயிரம் கனரக வாகனங்கள் வந்து செல்ல வேண்டும். இதற்கான கட்டமைப்பு வசதிகள் தற்போது இல்லை. இதற்காகவே
இந்த இரண்டு திட்டங்களும் அறிவிக்கப்பட்டன. இதில் துறைமுக இணைப்புச் சாலைத் திட்டப்பணிகள் 90 சதவீதம்வரை நிறைவு பெற்றுள்ளது. ஆனாலும் துறைமுகம் செல்ல
நாள் கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை தொடர்கிறது. இதனால் ஆந்திர மாநிலத்தில் உள்ள கிருஷ்ணபட்டனம், கேரளாவின் கொச்சி துறைமுக உள்ளிட்ட
தமிழத்திற்கான ஏற்றுமதி இறக்குமதி சரக்குகள் திருப்பிவிடப்படுகின்றன. சென்னைத் துறைமுகம் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த வேளாண் விளைபொருள்கள், கிராணைட் கற்கள், ஆயத்த ஆடைகள், துணிமணிகள் உள்ளிட்டவைகள் அண்டை துறைமுகங்களுக்கு இடம் பெயர்ந்து வருகிறது. இதுவரை சுமார் 40 சதவீத சரக்குகள் இங்கு சென்று சென்றுவிட்டன. இதே நிலை நீடித்தால் சென்னைத் துறைமுகம் விரைவில் மூடப்படும் அபாயம் உள்ளது. எனவே துறைமுகம் என்பது மத்திய அரசின் வரம்புக்கு உட்பட்டது எனக் கருதாமல் மாநிலத்தின் வளர்ச்சிக்கு இக்கட்டமைப்பு வசதிகள் அவசியமானது என்பதை அனைத்து தரப்பினரும் உணர வேண்டும். எனவே
மதுரவாயல் உயர்மட்ட விரைவுச் சாலை திட்டத்தை நிறைவேற்ற பிரதமர் நரேந்திர மோடியும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் நேரடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை என்றார் சுகுமார்.
19 கி.மீ. நிளம் கொண்ட இச்சாலை துறைமுகத்திற்கு மட்டுமே செல்லும் என்பது அல்லாமல் சிவானந்தா சாலை, கல்லூரி சாலை ஆகிய இடங்களில் பொதுமக்களின் வாகனங்கள் ஏறிக் கொள்ளும் வசதியும், ஸ்பர்டாங் சாலை, போர் நினைவுச் சின்னம் ஆகிய இரண்டு இடங்களில் இறங்கிக் கொள்ளும் வசதிகள் இத்திட்டத்தில் அடங்கும். மேலும் இந்தியாவிலேயே ஒரு நகரின் மத்தியில் இவ்வளவு நீளமான மேம்பாலச் சாலை இதுதான் என்பது இத்திட்டத்தின் முக்கிய அம்சமாகும். எனவே இத்திட்டத்தை விரைந்து நிறைவேற்ற அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
No comments:
Post a Comment