ஆய்வுச் சான்று வழங்குவதில் அசாதாரண நிலை: அமைச்சகம் தலையிடக் கோரிக்கை
திருவொற்றியூர், நவ.25.: சென்னைத் துறைமுகம் வழியாக நடைபெற்று வரும் வேளாண் விளைபொருள் ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு வர்த்தகர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இதற்கு காரணம் வேளாண் பொருள்களை ஏற்றுமதி, இறக்குமதி செய்வதற்கு ஆய்வு செய்து சான்று வழங்க வேண்டிய இந்திய வேளாண் அமைச்சகத்தின் கீழ் உள்ள தாவரப் பாதுகாப்புத் துறையினர் தேவையற்ற கால தாமதம் செய்வதே இதற்குக் காரணம் எனவும் அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
ஆண்டுக்கு 2 லட்சம் கண்டெய்னர்கள்:
சென்னைத் துறைமுகத்தில் சுமார் ஆண்டுக்கு 20 லட்சம் கண்டெய்னர்கள் கையாளப்படுகின்றன. இதில் வேளாண் வேளாண் விளைபொருள்களின் பங்கு கணிசமான அளவில் உள்ளது. இதில் மக்காச்சோளம் ஏற்றுமதி ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. மக்காச்சோளம், வெங்காயம், அரிசி, மிளகாய், வேர்க்கடலை உள்ளிட்டவை மட்டும் ஆண்டுக்கு சுமார் 2 லட்சம் கண்டெய்னர்கள் வரை சென்னைத் துறைமுகம் மூலம் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இதேபோல் மரங்கள், மரக் கட்டைகள், ஆப்பிள், ஆரஞ்சு உள்ளிட்ட பழ வகைகள், உளுந்து, துவரை, பட்டாணி, சுண்டக் கடலை உள்ளிட்ட பருப்பு வகைகள், அலங்காரப் பூக்கள் என ஆண்டுக்கு சுமார் 60 ஆயிரம் கண்டெய்னர்கள் வரை உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. மொத்தத்தில் வேளாண் வர்த்தகம் மூலம் ஆண்டுக்கு பல ஆயிரம் கோடிக்கு வெளிநாட்டு வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
ஆய்வுச் சான்று வழங்கும் தாவரப் பாதுகாப்புத் துறை
இவ்வாறு வேளாண் பொருள்களை ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் முன்பு மத்திய வேளாண் அமைச்சகத்தின் கீழ் உள்ள தாவரப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை செய்து சான்று அளிக்கப்பட வேண்டும். இச்சான்றில் விளைபொருளின் பொதுவான தாவரவியல் பெயர், தரம், கிருமி, பூச்சி ஏதும் இல்லை, அளவு, காலம் உள்ளிட்ட விதிமுறைகள் குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த சட்டப்பூர்வமான சான்றிதழ் சமர்ப்பிக்கப்படாமல் எந்த கண்டெய்னரையும் எடுத்துச் செல்ல சுங்கத்துறை அதிகாரிகள் அனுமதிக்கமாட்டார்கள். நான்கு மாநிலங்களுக்கான பூச்சிக் கட்டுப்பாட்டு மண்டல அலுவலகம் இதற்கென சென்னை மீனம்பாக்கத்தில் இயங்கி வருகிறது.
தேவையற்ற தாமதம்:
ஏற்றுமதி செய்யப்பட வேண்டிய வேளாண் விளை பொருளை ஏற்றுமதி செய்ய சென்னைக்குக் கொண்டு வந்தபிறகு நேரில் வந்து ஆய்வு செய்ய விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தை ஆய்வு செய்யும் அதிகாரிகள் பிறகு சரக்குகள் இருப்பு வைக்கப்பட்டிருக்கும் கிடங்குகளுக்கு நேரில் சென்று சோதனையிடுவர். பின்னர் அலுவலகத்திற்கு வந்து பல்வேறு விபரங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும் வரிசை எண்களுடன் கூடிய சான்றிதழ்களை முத்திரையிட்டு அளிப்பார்கள். பிறகு இதனை சுங்கத் துறை அதிகாரிகள் காண்பித்த பிறகு ஏற்றுமதிக்கு அனுமதிக்கப்படும். இதே போன்ற நடைமுறைதான் இறக்குமதியாகும் பொருள்களுக்கும் பெரும்பாலும் கடைப்பிடிக்கப்படுகின்றன.
இந்த நடைமுறைகளில்தான் தற்போது தேவையற்ற கால தாமதம் ஏற்படுவதாகவும், முன்பு ஓரே நாளில் வழங்கப்பட்ட சான்றிதழ்கள் தற்போது ஐந்து நாள்கள் வரை கால தாதம் ஆகின்றன. இதற்கு அதிகாரிகள் தரப்பில் தெளிவான பதில் இல்லாத நிலையில் வேளாண் விளைபொருள் ஏற்றுமதி விரைவில் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது வர்த்தகர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
ஏற்றுமதி முடங்கினால் விவசாயிகள் பாதிக்கப்படுவர்:
இது குறித்து சென்னை மக்காச் சோளம் ஏற்றுமதியாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறியது,
மக்காச் சோளம் ஏற்றுமதி ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. மானாவாரி பயிரான மக்காச்சோளம் ஏழை விவசாயிகளின் வரப்பிரசாதம் என்ற அளவிற்கு தற்போது உள்ளது. இதற்கு காரணம் ஏற்றுமதி மூலம் விவசாயிகளுக்கு லாபகரமான விலை கிடைத்து வருவதேயாகும். ஏற்றுமதியில் லாபம் குறைவுதான் என்றாலும் அதிக அளவில் ஏற்றுமதி செய்வதால் பரவாயில்லை என்ற நிலை இருந்து வந்தது. ஏற்கனவே கண்டெய்னர் போக்குவரத்து நெரிசல் பிரச்னையால் இத்தொழில் நலிவடைந்து விட்டது. இந்நிலையில் தாவரப் பாதுகாப்புத் துறையினர் தற்போது மேற்கொண்டுள்ள நடைமுறைகளால் இத்தொழில் முற்றிலும் முடங்கிவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
'அனைத்தும் ஆன்லைன்' என்ற கணிணி வளர்ச்சி ஏற்பட்டுவிட்ட நிலையில் ஒரு சான்று வழங்கவே மூன்று முதல் ஐந்து நாள்கள் என்பது நடைமுறைக்கு ஒத்து வராது. ஏற்றுமதி வெற்றிகரமாக நடைபெறவேண்டும் என்றால் தேவையான சரக்குகள், லாரிகள், இருப்பு வைக்க கிடங்குகள், கண்டெய்னர்கள் லாரிகள், இணைப்புக் கப்பல்கள், தொடர்புடைய துறைகள் உள்ளிட்ட அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே சாத்தியமாகும். இதில் ஒன்றில் தடங்கல் ஏற்பட்டாலும் இழப்பு ஏற்றுமதியாளருக்குத்தான். கண்டெய்னருக்கு சராசரியாக ரூ. 5 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரை லாபம் கிடைத்து வந்த நிலையில், தற்போதைய பிரச்னையால் இந்த லாபத்தையும் இழந்து விட வேண்டியதுதான். பிறகு நட்டத்திற்கா வியாபாரம் செய்ய முடியும்?. எனவே இது குறி்த்து வர்த்தக் துறை அமைச்சகம் உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும் என்றனர்.
சென்னை என்றாலே அலட்சியம்தான்:
இப்பிரச்னை குறித்து வெங்காயம் ஏற்றுமதி செய்யும் கிருபாகரன் கூறியது,
இப்பிரச்னைக்குக் காரணம் அதிகாரிகளின் அலட்சியம்தான். தாமதத்தினால் வெங்காயம் அழுகிவிடும், அதிகரிக்கும் செலவினங்களால் மக்காச்சோளம் உள்ளிட்ட ஏற்றுமதி, இறக்குமதி முடங்கும் அபாயம் உள்ளது என விளக்கமாக எடுத்துரைத்தாலும் பயன் இல்லை. அதைப் பற்றி தங்களுக்கு கவலை இல்லை. தங்ளது பணி அதிகாரத்தைச் செயல்படுத்துவது மட்டுமே. இங்கு கேள்வி கேட்பதற்கு இடமில்லை என்ற மனப்பான்மைதான் இந்த அதிகாரிகளிடம் நிலவுகிறது. கொச்சி, தூத்துக்குடி, மங்களூர், விசாகபட்டினம், கிருஷ்ணபட்டனம், கல்கத்தா, மும்பை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள இதே தாவரப் பாதுகாப்புத் துறை அலுவலங்களில் தற்போதும் ஒரே நாளில் சான்றிதழ் வழங்கப்படும்போது சென்னையில் மட்டும் தாமதம் ஏன்? இதன் பின்னணி என்ன? இரண்டு மாதங்கள் முன்புவரை இல்லாத பிரச்னைகள் இப்போது மட்டும் ஏன்? இதற்கான 'காரண காரியங்கள்' தாவரப் பாதுகாப்புத் துறை மண்டல அதிகாரிகளுக்கு நன்றாகவே தெரியும். இப்பிரச்னை குறித்து இத்துறையின் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினால் பல்வேறு 'விசயங்கள்' வெளிச்சத்திற்கு வரும் என்பதே உண்மை என்றார் கிருபாகரன்
கண்டெய்னர் லாரிகள் நெரிசல், போதிய கிடங்கு வசதிகள் இல்லாமை, சர்வதேசப் போட்டி உள்ளிட்ட பிரச்னைகளால் சென்னைத் துறைமுகம் மூலம் நடைபெற்று வந்த வேளாண் விளைபொருள்கள் ஏற்றதி படிப்படியாகக் குறைந்து வருகிறது. இதில் தாவரப் பாதுகாப்பத் துறையும் தனது பங்களிப்பை அளிக்க உள்ளது என்பதே தற்போதைய நிலை. விவசாயப் புரட்சியே நாட்டின் வளர்ச்சிக்கு உத்தரவாதம், விவசாயம்தான் நாட்டின் முதுகெலும்பு என்தெல்லாம் மேடைப் பேச்சுக்குதானோ?. அலைக்கற்றைப் பிரச்னையை பற்றியே பேச நேரமில்லாதபோது.... இதில் வேளாண்மை செழித்தால் என்ன? செத்தால் என்ன?
No comments:
Post a Comment