கப்பலிற்கு தரச் சான்று வழங்குவதில் அரசியல் பின்னணி ?
திருவொற்றியூர், நவ.3.: சென்னை மெரினா கடற்கரை அருகே கரை தட்டிய கப்பலில் வேலை செய்து வந்த 6 சிப்பந்திகள் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவத்தில் பல்வேறு பின்னணி தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.
கடந்த அக்.31 -ஆம் தேதி புதன்கிழமை நிலம் புயல் சென்னை அருகே கரையைக் கடந்தது. இப்புயலில் சிக்கி நடுக்கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எம்.டி. பிரதீபா காவேரி என்ற எண்ணெய் கப்பல் கடல் கொந்தளிப்பில் சிக்கித் தத்தளித்தது. அப்போது கப்பலில் இருந்து உயிர்காக்கும் படகு மூலம் தப்பிக்க முயற்சித்த 22 சிப்பந்திகளில் 6 பேர் கடலில் மூழ்கி பரிதாபமாக இறந்து போனார்கள்.
சென்னைத் துறைமுகத்தின் கடல் எல்லையில் நடந்த இச்சம்பவம் பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இத்தனைக்கும் இந்திய கடலோரக் காவல் படையின் கிழக்குப் பிராந்திய தலைமை அலுவலகம் அமைந்துள்ள இடம் சம்பவம் நடைபெற்ற இடத்திலிருந்து வெகு அருகாமையில்தான் உள்ளது. மேலும் இந்திய கடற்படையின் அலுவலகமான ஐ.என். எஸ். அடையாரும் இதற்கு அருகே தான் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் எவ்வித உதவியும் கிட்டாமல் 6 சிப்பந்திகள் இறந்து போனது வருத்தமளிக்கிறது. மேலும் மீட்கப்பட்ட 16 பேரில் 5 பேர் மட்டுமே தானாகவே நீச்சல் அடித்து தப்பி கரையை அடைந்துள்ளனர். மீதி 11 பேரை மீனவர்கள் தான் காப்பாற்றியதாகக் கூறப்படுகிறது. கடல் மிகவும் கொந்தளிப்பாக இருப்பதால் தங்களால் தற்போது வர இயலாது என துறைமுகம், கடலோரக் காவல்படை, கடல்சார் வாணிபத்துறை அதிகாரிகள் கைவிரித்திருந்த நிலையில்
துணிச்சலாகச் செயல்பட்டு உரிய நேரத்தில் 11 பேரைக் காப்பாற்றிய மீனவர்கள் பாராட்டுக்குரியவர்கள் என உயிர் தப்பிய சிப்பந்திகள் கூறினார்.
குளறுபடியில் உச்சத்தில் நடந்த கோரச் சம்பவம்: எம்.டி.பிரதீபா காவேரி கப்பல் ஒரு மாதமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தும் கப்பலில் ஏற்பட்ட கோளாறுகளைச் சரி செய்யவோ அல்லது கப்பல் பழுது பார்க்கும் தளத்திற்கு எடுத்துச் செல்லவோ கப்பல் நிறுவனம் நடவடிக்களைக் மேற்கொள்ளாமல் மெத்தனமாகச் செயல்பட்டுள்ளது. மேலும் ஊழியர்களுக்கும் 6 மாதங்களுக்கும் மேலாக சம்பளம் வழங்கப்படவில்லை, கப்பலில் பணியாற்றுவோருக்கு தேவையான உணவுப் பொருள்கள் கூட வழங்கப்படவில்லை புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில் அக்டோபர் 28 ஆம் தேதி புயல் சென்னைத் துறைமுகத்தின் புயல் எச்சரிக்கை பிரதீபா காவேரி கப்பலின் ஊழியர்களை மேலும் கவலையடையச் செய்துவிட்டது. இதனையடுத்து கப்பலைக் காப்பாற்றும் பல்வேறு முயற்சியில் கேப்டன் மற்றும் தகவல் தொடர்பு அலுவலரும் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அனைத்து வழிகளும் அடைபட்ட நிலையில்தான் கப்பல் கைவிடப்படும் அபாய நிலை குறித்து கப்பலின் கேப்டன் அறிவித்ததாகவும் அதன் பிறகே உயிர்காக்கும் படகு மூலம் தப்பிக்க முயற்சி மேற்கொண்டதாகவும் உயிர் தப்பியவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால் சென்னைத் துறைமுகம் வட்டாரத்தில் விசாரித்தபோது கிடைத்த தகவல்கள் வேறு மாதிரியாக உள்ளன. எம்.டி.பிரதீபா காவேரியிலிருந்து இழுவைக் கப்பல்களை அனுப்பும்படி உதவி கேட்டு தொடர்பு கொண்டது உண்மைதான். ஆனால் கடல் கொந்தளிப்பாகக் காணப்பட்டதால் இழுவைக் கப்பல்களை இயக்க மாலுமிகள் மறுத்துவிட்டனர். மேலும் கப்பலின் அபாய நிலை குறி்த்து கிழக்குக் கடலோரக் காவல்படையினருக்கு சென்னைத் துறைமுக அதிகாரிகள் தகவல் பரிமாற்றம் செய்துள்ளனர். மேலும் புதுடில்லியில் உள்ள கப்பல்த்துறை அமைச்சகம் சார்பில் இந்திய கடலோரக் காவல்படையின் தலைமையகத்திற்கும் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இழுவைக் கப்பல்களின் மாலுமிகள்
தெரிவித்தது போலவே கடலோரக் காவல்படையினரும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த அக்டோபர் 31-ஆம் தேதி துறைமுக அதிகாரிகளைத் தொடர்பு கொண்ட கடலோரக் காவல் படையினர், 'கடல் கொந்தளிப்பாகக் காணப்படுகிறது. இருப்பினும் பிரதீபா காவேரி கப்பலுக்கும், அதில் இருக்கும் சிப்பந்திகளுக்கும எவ்வித ஆபத்தும் இல்லை. புயல் கரையைக் கடந்தவுடன் சிப்பந்திகளை மீட்கலாம். அதுவரை சிப்பந்திகள் கப்பலிலேயே இருக்கட்டும். அதுவே பாதுகாப்பானதாக இருக்கும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இதனை மீறித்தான் சிப்பந்திகள் செயல்பட்டு ஆபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர் என துறைமுக தரப்பில் கூறப்படுகிறது.
கடல்சார் வாணிபத் துறை அலட்சியமா? இதற்கிடையே கப்பல் நிறுவனம் குறித்தும் பல்வேறு தகவல்கள் கூறப்படுகிறது. பொதுவாகவே 25 ஆண்டுகளுக்கும் மேலாக கப்பல்களை தொடர்ந்து இயக்க பல்வேறு கட்டுப்பாடுகளை கடல் சார் வாணிபத்துறை விதித்துள்ளது. எம்.டி.பிரதீபா காவேரி கப்பல் 31 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில் இக்கப்பலின் உறுதித் தன்மை குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. இது குறித்து மும்பையில் உள்ள கடல்சார் வாணிபத்துறை உயர் அதிகாரி கூறுகையில்,
'விபத்தில் சிக்கிய இக்கப்பலின் உறுதித் தன்மை குறி்த்து ஆய்வு செய்ய கடந்த 6 மாதங்களாகவே முயற்சி செய்து வந்தோம். ஆனால் கப்பல் நிறுவனத்தினர் பல்வேறு சாக்குப் போக்குகளைச் சொல்லியே கப்பலை ஆய்வுக்குக் கொண்டு வராமல் காலம் தாழ்த்தி வந்தனர். ஆனால் கப்பலை ஆய்வு செய்ய உரிய உத்தரவினையும் எங்கள் துறை உயர் அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை. இதற்கு கப்பல் நிறுவனத்தின் பின்னணியில் அரசியல் உள்ளதாகக் கூறப்படுகிறது.
ஒரு வேளை இக்கப்பலை உரிய நேரத்தில் முறையாக ஆய்வுக்கு உட்படுத்தி இருந்தால் இந்த கோரச் சம்பவத்தையும், 6 சிப்பந்திகளின் உயிரிழப்பையும் தவிர்த்திருக்க முடியும் ' என்றார் அந்த அதிகாரி.
No comments:
Post a Comment