பழைய ரூ.1000, 500 நோட்டுக்களை மாற்றுவதில் கைமாறு
கருப்புப் பணத்தை மாற்றுவதில் தொடரும் நூதன மோசடிகள்
திருவொற்றியூர், நவ.15:செல்லாது என அறிவிக்கப்ட்ட ரூ. 1000, 500 நோட்டுக்களை வைத்திருப்போர் அவற்றை பல்வேறு நூதன முறையில் பண பரிமாற்றம் செய்து வருகின்றனர். மேலும் சுமார் 40 சதம்வரை கமிஷனாகப் பெறப்படுவதாக கூறப்படுகிறது. நாடு முழுவதும் தொடங்கியுள்ள இந்த மோசடியை எவ்வாறு தடுத்த நிறுத்தப்படும் என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது.
கடந்த நவ.8 ஆம் தேதியிலிருந்து புழக்கத்தில் இருந்து வரும் ரூ.1000, ரூ.500 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்ததையடுத்து நாடு முழுவதும் வங்கிகள், ஏடிஎம்-களில் பொதுமக்கள் குவிந்தவண்ணம் உள்ளனர்.
பொதுமக்கள் தங்களிடம் உள்ள சொற்ப தொகையை மாற்றுவதற்கே
மணிக்கணக்கில் காத்திருக்கும் நிலையில் கணக்கில் வராத பணத்தை வைத்திருக்கும் நபர்கள், நிறுவனங்கள் பல்வேறு நூதன முறையில் தங்களிடமுள்ள கோடிக்கணக்கான பழைய நோட்டுகளை பண பரிமாற்றம் செய்து வருகின்றனர். இது எப்படி சாத்தியமாகிறது? எடுத்துக்காட்டிற்கு ஓரிரண்டு இங்கே....
முன்தொகை, சம்பளம் வழங்கிய நிறுவனங்கள்:
இரும்புக் கம்பிகள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் திருவொற்றியூர் முதல் கும்மிடிபூண்டிவரை பரந்து காணப்படுகின்றன. இங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் முழுமையாகவே பீகார், உ.பி. உள்ளிட்ட வடமாநிலங்களைச் சேர்ந்தவர்களே. இவர்களுக்கு இரண்டு மூன்று மாதங்கள் சம்பளத்தைச் சேர்த்து வைத்துத்தான் சம்பளம் வழங்கப்படுமாம். ஆனால் ஏற்கனவே நிலுவையில் உள்ள சம்பளத்துடன் அடுத்த மூன்று மாதங்களுக்கான சம்பளத்தையும் சேர்த்து கடந்த நவ.9 ம் தேதி ரொக்கமாக வழங்கப்பட்டுள்ளன. இதில் ஒருசில நிறுவனங்கள் ரூ.50 ஆயிரம் முதல்ல ஒரு லட்சம் வரை முன்பணமாக வழங்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் நிறுவனத்தின் உரிமையாளரோ அல்லது அவருக்கு வேண்டப்பட்டவர்களோ சேர்த்து வைத்திருந்த கோடிக்கணக்கான பழைய ரூபாய் நோட்டுகள் மாற்றம் செய்யப்பட்டு விட்டன. இவற்றை தொழிலாளர்கள் வங்கியில் கொடுத்து படிப்படியாக மாற்றி வருகின்றனர்.
பொருள்களை வாங்கிக் குவித்த நிறுவனங்கள்:
கட்டில், மெத்தை, ஃபிரிட்ஜ், வாசிங் மெசின் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருள்கள், கட்டட சாமான்கள் உள்ளிட்ட பொருள்களை விற்பனை செய்துவரும்
பிரபல நிறுவனங்கள் இதுவரை பெருமளவில் ரஷீது போடாமல் ரொக்கப் பணம் பெற்று வாங்கியும், விற்றும் வந்தனர். இதனால் கணக்கில் வராத பணம் அதிக அளவில் புழங்கி வந்தது. தற்போது ஏற்பட்டுள்ள பிரச்னையை அடுத்து நவ.8-ம் தேதிக்கு முன்னதாகவே அதிக தொகையை பொருள்களின் விநியோகஸ்தர்களிடம் முன்பணமாக செலுத்தி பொருள்களை வாங்க ரொக்கமாகக் கொடுத்துவிட்டதாக கணக்கெழுதி விட்டனர். பல கோடி வர்த்தகம் நடக்கும் இத்தொழிலில் சில கோடி ரூபாய்களை சரிக்கட்டும் பணி வெற்றிகரமாகவே முடிந்து விட்டதாகவே கூறப்படுகிறது. இதற்கேற்ற வகையில் கொள்முதல் மற்றும் விற்பனை கணக்குகளும் தயார் செய்யப்பட்டு வருகிறது. இன்னும் குறைந்த அளவு பழைய நோட்டுகளே உள்ளன. இவற்றையும் விரைவில் மாற்றி விடுவோம் என்கிறார் இத்தொழிலில் நீண்டகாலமாக ஈடுபட்டுள்ள நிறுவனத்தின் மேலாளர் ஒருவர்.
கந்து வட்டிப் பணத்தை காப்பற்றியது எப்படி?
வடசென்னையில் தினசரி வட்டி முதல் மீட்டர் வட்டிவரை வழங்கும் நபர்கள்
ஏராளமாக உள்ளனர். இவர்களை நம்பித்தான் சிறு தொழில்கள் முதல் பெருந்தொழில்கள்வரை உள்ளன. பல கோடி புழக்கத்தில் விட்டுள்ள இவர்கள் வங்கியில் செலுத்தினால் கணக்கு காட்ட வேண்டும் என்பதால் எப்போதும் பல லட்ச ரூபாய்களை ரொக்கமாகவே வைத்திருப்பார்கள். மேலும் அதிக அளவு வட்டி சேர்ந்துவிட்டால் ஏதாவது மனை, வீடு உள்ளிட்டவைகளை வாங்கி முதலீடு செய்து விடுவார்கள். இப்படியாக ஏராளமான சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளவர்கள் ஏராளமாக உள்ளனர். இவர்களை இடிபோல் தாக்கிய மோடியின் அறிவிப்பால் முதலில் செய்வதறியாது திகைத்தாலும் தற்போது வட்டிப் பணமாகச் சேர்ந்த பழை நோட்டுகளை மாற்றுவதில், காப்பாற்றுவதில் வெற்றிடைந்து விட்டதாகவே பெருமிதப்படுகின்றனர்.
இதன்படி இவர்களிடம் வாடிக்கையாளராக உள்ள மொத்த வியாபாரிகள் மூலம் அரிசி, பருப்பு, மளிகைச் சாமான்களை வாங்குவதற்கு முன்பணம் கொடுத்துள்ளதாக பண பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் தற்போது பணம் வட்டிக்கு விடுபவர்களிடமிருந்து வியாபாரிகளின் கைகளுக்குச் சென்று பல்வேறு வங்கிகளில் பிரித்து டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. கள்ளப் பணம் வைத்திருப்பவர்களைக் காப்பாற்ற வியாபாரிகள் முன்வந்ததிற்கு காரணம் ஏதும் கூற வேண்டியதில்லை. இவ்வாறான வியாபாரிகளுக்கு பணம் முதலீடே இவர்கள்தானே? எந்த வங்கி கொடுக்கிறது? என்பதே பண பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் கருத்தாக உள்ளது.
வங்கி அதிகாரிகள் காட்டில் மழை?:
இவ்வாறாக கோடிக் கணக்கில் செல்லாத பணம் கைமாறுவதற்கு வங்கிகளில் சிலர் உடந்தையாக இருப்பதாகக் கூறப்படுகிறது. உதாரணமாக தினமும் லட்சக் கணக்கில் வங்கியில் பண பரிமாற்றம் செய்யும் வியாபாரிகளுக்கு காசாளர் முதல் மேலாளர்வரை அத்தனை பேரும் நல்லுறவுடனே இருப்பார்கள். தற்போதைய சூழ்நிலையைப் பயன்படுத்தி தினமும் பல கோடி பண பட்டிவாடாா நடைபெறும் வங்கிகளில் சில கோடி ரூபாய்களை பொதுமக்களுக்கு மாற்றித் தரப்படும் கணக்கில் சரிக்கட்டும் பணி நடப்பதாகக் கூறப்படுகிறது. பொதுமக்கள் வரிசையில் நின்று அடையாள அட்டை மூலம் பணம் வாங்குகின்றனர். அவர்களிடம் பணம் இருப்பு குறைவாக உள்ளதாகக் கூறும் வங்கி ஊழியர்கள் 4 ஆயிரத்திற்குப் பதிலாக 2 அல்லது ஆயிரம் ரூபாய்
மட்டுமே சில வங்கிகளில் வழங்கப்படுகிறது. இதில்தான் வியாபாரிகளின் கருப்புப் பணம் கச்சிதமாகச் சரிக்கட்டப்படுகிறது. மாலை 5 மணிக்குப் பிறகு இரவு வரை
நடைபெறும் வழக்கமாக பணியின் போது இந்த இடைச் செருகலும் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. இதற்கு கைமாறாக சுமார் 15 சதவீதம் வரை வங்கி அதிகாரிகளுக்குச் சென்றடைவதாகவும், திருவொற்றியூரில் உள்ள ஒரு வங்கியில் திங்கள்கிழமை மட்டும் ரூ.30 லட்சம்வரை கமிஷன் பணம் கைமாறியதாக அடித்துச் சொல்கிறார் இச்செயலில் ஈடுபட்ட வியாபாரி ஒருவர்.
இந்தியாவைப் பொருத்தவரை கட்டமைக்கப்பட்ட, கட்டமைக்கப்படாத வணிகம் என்பது தொன்றுதொட்டு இருந்து வருகிறது. மளிகை, வேளான் விளைபொருள் சந்தை போன்றவை கட்டமைக்கப்படாத வணிகத்தில்தான் பெருமளவில் நடைபெறுகிறது. தற்போது எழுந்துள்ள சிக்கல் மூலம் இது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. முற்றிலுமாக பணம் முடக்கப்படும் போது இத்தொழிலே பாதிக்கப்படும் நிலை உள்ளது. இதனைப் பயன்படுத்தி எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் பல்வேறு தரப்பினரும் மோசடி பேர்வழிகளிடம் பணத்தை இழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே முறையான, தேவையான பணப்புழக்கத்திற்கு வங்கிகள் கடன்களை அளித்து தொழில் பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.
No comments:
Post a Comment