இயற்கை பேரிடர் மீட்பு பணிகள் ஒத்திகை பயிற்சி
மணலி அருகே ஏரியில் நடைபெற்றது
திருவொற்றியூர், அக்.13:வெள்ளத்தில் சிக்கியோரை மீட்பது குறித்த இயற்கை பேரிடர் பணிகள் ஒத்திகைப் பயிற்சி மணலி அருகே கடப்பாக்கம் ஏரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கடந்த ஆண்டு பெய்த கனமழையின் போது பூண்டி, புழல் ஏரிகளில் உபரி நீர் திறக்கப்பட்டதையடுத்து மணலி, திருவொற்றியூர் பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. மேலும் ஐம்பதுக்கும் மேற்பட்ட கிராமங்கள் முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டன. போக்குவரத்து வசதிகள் அடியோடு நிறுத்தப்பட்டன. மீட்பு குழுவினர் படகுகள் மூலம் ஆயிரக்கணக்கானோரை மீட்டு கரை சேர்த்தனர். இந்நிலையில் மழைக்காலத்தில் இவ்வாறு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் பொதுமக்களைக் காப்பாற்றுவது எப்படி என்பது குறித்த இயற்கை பேரிடர் மீட்பு பணிகள் ஒத்திகை பயிற்சி வருவாய்த்துறை சார்பில் வியாழக்கிழமை நடைபெற்றது. மணலி அருகே உள்ள கடப்பாக்கம் ஏரியில் இப்பயிற்சி ஒத்திகை நடைபெற்றது. அப்போது வெள்ளத்தில் சிக்கிய இரண்டு பள்ளி மாணவர்களை தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் ரப்பர் படகுகளில் விரைந்து சென்று மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர். இதேபோல் கிராமத்தில் வெள்ளத்தில் சிக்கித் தவித்தவர்களும் மீட்கப்பட்டனர்.
இப்பயிற்சி பேரிடர் காலங்களில் உதவியாக இருக்கும் என பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்தனர்.
அம்பத்தூர் கோட்டாட்சியர் வி.வீரப்பன் முன்னிலையி்ல் நடைபெற்ற இந்த ஒத்திகையில் திருவொற்றியூர் வட்டாட்சியர் மணிமேகலை, சிறப்பு வட்டாட்சியர் ராஜ்குமார், தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை அதிகாரிகள் தர்மலிங்கம், விஜயசந்திரன் மற்றும் வருவாய்த்துறை ஊழியர்கள், தீயணைப்பு வீரர்கள் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment