திருவொற்றியூர் மேற்கு-வள்ளலார் நகர் இடையே சிற்றுந்து போக்குவரத்து தொடக்கம்
திருவொற்றியூர், நவ.8:திருவொற்றியூர் மேற்கு பகுதியிலிருந்து வள்ளலார் நகருக்கு சிற்றுந்து போக்குவரத்து வசதியை முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் கே.குப்பன் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.
திருவொற்றியூர் மேற்கு பகுதியில் ராஜாஜி நகர், கார்கில் நகர், பாலகிருஷ்ணா நகர் கலைஞர் நகர் என சுமார் இருபதுக்கும் மேற்பட்ட குடியிருப்பு கிராமங்கள் உள்ளன. இங்கு சுமார் ஒரு லட்சம் பேருக்கும் மேல் வசித்து வருகின்றனர். திருவொற்றியூரின் கிழக்கு, மேற்கு பகுதிகளிடையே கல்கத்தா, டெல்லி செல்லும் ரயில்வே இருப்புப் பாதை அமைந்துள்ளதால் மேற்கு பகுதிக்கு போதுமான போக்குவரத்து வசதிகள் இல்லை. இதனால் சுமார் 3 கி.மீ. தூரம் வரை நடந்துதான் இப்பகுதியில் வசிக்கும் ரயில்நிலையம், பேருந்து நிலையத்திற்கு வந்து செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. இந்நிலையில் இப்பகுதியிலிருந்து சிற்றுந்து வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும் என பொதுமக்கள் நீண்ட காலமாகக் கோரி வந்தனர்.
இதனையடுத்து மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் திருவொற்றியூர் மேற்கு பகுதியிலுள்ள ராஜாஜி நகரிலிருந்து வள்ளலார் நகர்வரை சிற்றுந்து போக்குவரத்து வசதி
செய்து தரப்பட்டுள்ளது. சிற்றுந்து தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில் சிற்றுந்துவை முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் கே.குப்பன் தொடங்கி வைத்தார். அப்போது மேலும் இரண்டு சிற்றுந்துகள் விரைவில் இயக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் கவுன்சிலர் என்.கலையரசன், மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment