Monday, 25 January 2016


எண்ணூரில் கடல் சீற்றம்: 300 அடி நீளத்திற்கு கடலரிப்பு 

திருவொற்றியூர், டிச.29:எண்ணூரில் கடல் சீற்றத்தால் சுமார் 300 அடி நீளத்திற்கு கடலரிப்பு ஏற்பட்டுள்ளது. 
   காசிமேடு முதல் எண்ணூர் வரை தொடர்ந்து கடலரிப்பு இருந்து வந்தது. இதனைத் தடுக்கும் வகையில் பெரும்பாலான கருங்கற்களாலான தடுப்புச் சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் தடுப்புச் சுவர்கள் சரியாக அமைக்கப்படாத இடங்களில் அவ்வப்போது கடலரிப்பு ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் எண்ணூர் முகத்துவாரப் பகுதியை ஒட்டிய நெட்டுக்குப்பம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட கடல் சீற்றத்தால் சுமார் 300 அடி நீளத்திற்கு கடலரிப்பு ஏற்பட்டுள்ளது. முகத்துவாரப் பகுதி என்பதால் மணல் மேடு மலைபோல் குவிந்திருக்கும். ஆனால் திங்கள்கிழமை பார்த்தபோது இம்மணல் திட்டுக்கள் முழுதும் கடல் சீற்றத்தால் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. மேலும் முகத்துவாரப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் சேதமடைந்தன. இதனால் இப்பகுதியில் வசிக்கும் மக்கள் 
அச்சத்துடன் உள்ளனர். 
இது குறித்து இப்பகுதி மீனவ மக்கள் கூறியது,
    எண்ணூர் முகத்துவாரப் பகுதியில் முறையாகப் பராமரிப்பு செய்யப்படாததாலும், 
கடல் சீற்றத்தாலும் மணல்மேடுகள் திடீரென கடலுக்குள் சென்றுவிட்டன. இதே நிலை நீடித்தால் இன்னும் சில நாள்களில் இங்குள்ள பெரும்பாலான வீடுகள் கடலரிப்பில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் சுமார் 300 அடி நீளத்திற்கு கடலரிப்பு ஏற்பட்டும் எவ்வித தடுப்பு பணிகளிலும் அதிகாரிகள் ஈடுபடவில்லை. மேலும் இது குறித்து தகவல் தெரிவித்தும் திங்கள்கிழமைவரை முக்கிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வரவில்லை. எண்ணூர் முகத்துவாரத்தில்தான் குசஸ்தலை ஆறு, பக்கிங்காம் கால்வாய் தண்ணீர் கலக்கிறது. எனவே இதனை முறையாகத் தூர்வாரி பராமரிக்க வேண்டும். இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண சிறப்புத் திட்டத்தை 
தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என்றனர். 

No comments:

Post a Comment