Monday, 25 January 2016

வெளிநாட்டு வர்த்கக் கொள்கையில் திருத்தம் 

சென்னை வழியாக ஆப்பிள் இறக்குமதி செய்ய மீண்டும் அனுமதி 

திருவொற்றியூர், ஜன.13:சென்னை, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட இடங்களில் அமைந்துள்ள துறைமுகங்கள் வழியாக ஆப்பிள் பழங்களை இறக்குமதி செய்ய மீண்டும் அனுமதி அளிக்கும் வகையில் வெளிநாட்டு வர்த்தகக் கொள்கையில் (Foreign Trade Policy 2015-20) திருத்தம் செய்யப்படுவதாக மத்திய வர்த்தக அமைச்சகம் 
செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.
    ஆஸ்திரேலியா, அமெரிக்கா, சீனா, சிலி உள்ளிட்ட நாடுகளிலிருந்து ஏராளமான ஆப்பிள் பழங்கள் குளிரூட்டப்பட்ட சரக்குப் பெட்டகங்களில் இந்தியாவிலுள்ள அனைத்து துறைமுகங்கள் வழியாகவும் இறக்குமதி செய்யப்பட்டு வந்தது. இருப்பினும் மும்பை, சென்னைத் துறைமுகங்கள்தான் அதிக அளவில் ஆப்பிள் பழ இறக்குமதியில் முக்கிய வகித்தன. இந்நிலையில் மும்பையிலுள்ள நவசேவா துறைமுகம் வழியாக மட்டுமே இனி ஆப்பிள் இறக்குமதி செய்ய முடியும். இதர மற்ற இந்திய துறைமுகங்கள் வழியாக ஆப்பிள் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்படுகிறது என வர்த்தக அமைச்சகம் அறிவித்தது. சர்வதேச சந்தையின் போட்டியிலிருந்து இந்திய ஆப்பிள் விவசாயிகளை காப்பாற்றும் விதமாக இத்தடை விதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டு வந்த நிலையில் 
சென்னையிலுள்ள ஆப்பிள் இறக்குமதியாளர்கள் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஒரு துறைமுகத்திற்கு மட்டும் அனுமதி என்பதில் மிகுந்த பாரபட்சம் இருக்கிறது, இதனால் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் ஆப்பிள் விலை கடுமையாக உயரும், எனவே உடனடியாக இத்தடையை விலக்க வேண்டும் என வர்த்தக அமைச்சர் நிர்மலா சீதாராமன், நெடுஞ்சாலைகள் மற்றும் கப்பல்த் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரை நேரில் சந்தித்து தடையை விலக்குமாறு கோரிக்கை மனு அளித்தனர். 
தடைநீக்கம்:
   இந்நிலையில் வர்த்தக அமைச்சகத்தின் வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் (Director General of Foreign Trade) செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிக்கையில்  கூறியிருப்பதாவது,
     வெளிநாட்டு வர்த்தகக் கொள்கையில் செய்துள்ள புதிய திருத்தங்களின் படி சென்னை, மும்பை, கொல்கத்தா, கொச்சின் உள்ளிட்ட இடங்களில் உள்ள துறைமுகங்கள், டெல்லி விமான நிலையம் வழியாக ஆப்பிள் பழங்கள் இறக்குமதி செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. மேலும் இந்திய எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகள் வழியாகவும் இறக்குமதிக்கு அனுமதி அளிக்கப்படுகிறது எனக் கூறப்பட்டுள்ளது. 
தமிழ் வர்த்க சங்கம் வரவேற்பு:
இது குறித்து தமிழ் வர்த்தக சங்கத் தலைவர் சோழநாச்சியார் ராஜசேகரன் கூறியது,
     நாட்டின் ஒரு பகுதி மக்களுக்கு சாதகமாகவும், இதர பகுதி மக்களுக்குப் பாதகமாகவும் இருந்த தடை தற்போது விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. இத்தடை விதித்த உடனேயே இறக்குமதியாளர்களை அழைத்துக் கொண்டு டெல்லி சென்று வர்த்தக அமைச்சர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களைச் சந்தித்து தமிழ் வர்த்தக சங்கம் முறையிட்டது. மேலும் நான்கு மாதங்களாக இது குறித்து தடையை நீக்க வலியுறுத்தி வந்தோம். இப்புதிய திருத்தத்தின் மூலம் சென்னையில் ஆப்பிள் பழ இறக்குமதி வர்த்தகம் தடையின்றி நடைபெறும். மத்திய அரசின் முடிவினை வரவேற்கிறோம் என்றார் ராஜசேகரன்.

No comments:

Post a Comment