திருவொற்றியூர் கலை, அறிவியல் கல்லூரி முதல் பட்டமளிப்பு விழா
மாணவர்கள் தங்களது பலம், பலவீனத்தை அறிந்து கொள்ள வேண்டும்
துணை வேந்தர் ஆர்.தாண்டவன்
திருவொற்றியூர், டிச.31:மாணவர்கள் தங்களது பலம், பலவீனம் குறித்து முதலில் அறிந்து கொள்ள வேண்டும் என சென்னை பல்கலைக் கழக துணை வேந்தர் ஆர். தாண்டவன் வியாழக்கிழமை சென்னையில் கூறினார்.
திருவொற்றியூரில் உள்ள சென்னை பல்கலைக் கழக கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல் பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவிற்கு தலைமை வகித்த சென்னை பல்கலைக் கழக துணை வேந்தர் ஆர்.தாண்டவன், இக்கல்லூரியில் பயின்ற 115 மாணவ, மாணவியருக்கு பட்டங்களை வழங்கி விழா பேருரையாற்றினார்.
அப்போது தாண்டவன் பேசியது,
இப்பகுதியைச் சார்ந்த மாணவர்களுக்கு அனைத்து துறைகளிலும் தரமான கல்வியை அளித்து அவர்களை திறமையானவர்களாக மாற்ற ஏதுவாக இக்கல்லூரியை கடந்த 2012-ம் ஆண்டு தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். உலக அமைதி தற்போதைய தேவையாக உள்ள நிலையில் மாணவர்களிடையே இத்தகைய பண்புகள், பெருந்தன்மைகளை பயிற்றுவிப்பது என்பது ஆசிரியர்களிடம்தான் உள்ளது. இது மழலையர் வகுப்புகளிலிருந்து தொடங்கப்படவேண்டும். தரமான கல்வி மூலம் அனைத்து நிலைகளிலும் நிரந்தரமான அறிவு பரவலாக்கம் நடைபெறுகிறது.
மா்ணவர்களுக்கு வெறும் படிப்பறிவு மட்டுமன்றி பட்டறிவும் வேண்டும். நமது கலாச்சாரமானது பெற்றோர்கள், ஆசிரியர்கள், பெரியவர்களை மாணவர்கள் மதிக்க வேண்டும். அவர்கள் மீது மரியாதை செலுத்த வேண்டும் என்பதாகும். இத்தகைய
கலாச்சாரத்துடன் கூடிய கல்வியை மாணவர்கள் பெற வேண்டும். மேலும் படிப்பு என்பதை வாழ்நாள் இறுதிவரை படித்துக் கொண்டே இருக்கவேண்டும்.
மாணவர்கள் முதலில் தான் என்னவாக விரும்புகிறோம், தன்னால் என்ன முடியும் என்பதை முடிவு செய்திட வேண்டும். இதற்கு தங்களின் பலம், பலவீனங்கள் என்பதை முதலில் பட்டியலிடவேண்டும். பலத்தை மேலும் பலப்படுத்த வேண்டும். பலவீனங்களைத் தூக்கியெறிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். ஆங்கிலத்தில் பேசும் ஆற்றல் இல்லை அது ஒரு பலவீனமாகக் கருதாமல் கடுமையான பயிற்சிகள் மூலம் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசக் கற்றுக் கொள்ளலாம் என்றார் தாண்டவன்.
நிகழ்ச்சியில் பல்கலைக் கழக பதிவாளர் பி.டேவிட் ஜவஹர், தேர்வு கட்டுப்பாட்டு
அதிகாரி எஸ்.திருமகன், கல்லூரி முதல்வர் முனைவர் கே.பழனிசாமி உள்ளிட்டோர்
கலந்து கொண்டனர்.
பெட்டிச் செய்தி:
நிரந்தர கட்டடத்திற்கு விரைவில் அடிக்கல் நாட்டப்படும்?
இப்பகுதி மக்களின் நீண்ட காலக் கோரிக்கையை அடுத்து திருவொற்றியூரில் கல்லூரி
அமைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். மேலும் இக்கல்லூரிக்கான இடம்
எர்ணாவூரில் தேர்வு செய்யப்பட்டு நிரந்தரக் கட்டடம் அமைக்க சுமார் ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடும் செய்தார். ஆனால் இந்த இடத்தை சென்னப் பல்கலைக் கழகம் வசம் ஒப்படைபதில் தமிழ்நாடு கனிம வள நிறுவன அதிகாரிகள் தொடர்ந்து தடங்கல்களை ஏற்படுத்தி வந்தனர். இதனால்தான் மூன்று ஆண்டுகள் படித்தும் தாற்காலிக வளாகத்திலேயே பட்டமளிப்பு விழா நடத்திட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாக பட்டம் பெற்ற மாணவர்கள் தெரிவித்தனர். வியாழக்கிழமை பட்டம் பெற்றவர்களில் சுமார் 70 சதவீதம்பேர் முதல்தலைமுறை பட்டப் படித்தவர்களாவார்கள். இந்நிலையில் விரைவில் எர்ணாவூரில் கட்டடம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கும். இதற்கான அடிக்கல்நாட்டுவிழா ஜனவரியில் இருக்கக் கூடும் என உயர்கல்வித் துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment