கண்டெய்னர்களை விடுவிக்க ரூ.50 ஆயிரம் கூடுதல் கட்டணம்
நூதன முறையில் லாபம் ஈட்டும் கப்பல் நிறுவனங்கள், பெட்டக நிலையங்கள்
பாராமுகத்தில் சென்னைத் துறைமுக நிர்வாகம்
திருவொற்றியூர், ஜன.2:சென்னைத் துறைமுகம் வழியாக இறக்குமதி செய்யும் கண்டெய்னர்களுக்கு கூடுதலாக ரூ.50 ஆயிரம் வரை செலுத்தும் வகையில் நூதனமுறையில் கப்பல் நிறுவனங்கள், சரக்குப் பெட்டக முனையங்கள் கூடுதல் செலவினங்களை ஏற்படுத்துகிறது. இது குறித்து துறைமுக நிர்வாகம் எவ்வித
நடவடிக்கையும் எடுக்காமல் பாராமுகத்தில் இருந்து வருவதாக இறக்குமதியாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
சென்னைத் துறைமுகத்தின் வழியாகக் கையாளப்படும் இறக்குமதி, ஏற்றுமதிக்கான
கண்டெய்னர்களை சுங்கப் பரிசோதனை செய்து விடுவிக்கும் வசதிகள் கொண்ட
சுமார் 30 சரக்குப் பெட்டக நிலையங்கள அமைந்துள்ளன. சென்னைத் துறைமுகத்தில் இறக்குமதியாகும் கண்டெய்னர்கள் 10 ஆண்டுகளுக்கு முன்புவரை துறைமுகத்தின் உள்ளேயே சுங்கப் பரிசோதனை செய்து பிறகு எடுத்துச் செல்ல முடியும். பிறகு கண்டெய்னர்களால் நெரிசல் ஏற்படுவதாகக் கூறி இறக்குமதியாகும் கண்டெய்னர்களை சரக்குப் பெட்ட நிலையங்களுக்கு கப்பல் நிறுவனங்களே எடுத்துச் செல்வது என முடிவு செய்யப்பட்டது. அப்போது இறக்குமதியாளர்கள் தங்களுக்கு வசதியான பெட்டக நிலையங்களுக்கு எடுத்துச் செல்லவும் அனுமதியளிக்கப்பட்டது. இதிலிருந்து குளிர்பதன கண்டெய்னர்களை (Refrigirated Containers) துறைமுகத்திலேயே சுங்கத்துறை சோதனைக்குப் பிறகு இறக்குமதியாளர்கள் நேரடியாக எடுத்துச் செல்லும் வகையில் விலக்கு அளிக்கப்பட்டது.
குளிர்பதன கண்டெய்னர்கள்:
ஆனால் பழங்கள், வேளாண் விளைபொருள்கள், மாமிச வகைகள், உணவு பொருள்கள் குளிர்பதன கண்டெய்னர்களில் இறக்குமதியாகின்றன. இவற்றின் அழுகும் தன்மை, அவசரம் கருதி துறைமுகத்திலேயே விடுவிக்க அளிக்கப்பட்டிருந்த சலுகையை நீக்கி கப்பல் நிறுவனங்கள் இறக்குமதியாளர்களின் விருப்பத்திற்கு மாறாக தனியார் பெட்டக நிலையங்களுக்கு எடுத்துச் செல்கின்றனர். மேலும் அத்தனை செலவுகளும் கணக்கிடப்பட்டு கூடுதலாக ரூ.50 ஆயிரம் வரை அதிகம் செலவிட வேண்டிய அவலம் இறக்குதியாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. உதாரணமாக ஆப்பிள்கள் ஏற்றப்பட்ட சுமார் 5 கண்டெய்னர் கப்பலில் சென்னைத் துறைமுகம் வருகிறது. இதனை துறைமுகத்திலேயே சோதனை செய்து விடுவித்தால் இரண்டே நாளில் சுமார் ரூ.5 ஆயிரம் துறைமுகக் கட்டணத்தைச் செலுத்திவிட்டு கோயம்பேடு எடுத்துச் சென்று விடலாம். ஆனால் இக்கண்டெய்னர்களை கப்பல் நிறுவனங்கள் தங்களுக்குச் சொந்தமான அல்லது வசதியான பெட்டக நிலையங்களுக்குச் எடுத்துச் சென்று விடுவார்கள். இவ்வாறு அங்கு போய்விட்டால் 5 கண்டெய்னர்களுக்கும் சேர்த்து சுமார் ரூ.2.50 லட்சம் கூடுதலாக இறக்குமதியாளர் செலவிட வேண்டிய நிலை ஏற்படும். இது குறித்து இறக்குமதியாளர்களின் கோரிக்கையையும் கப்பல் நிறுவனங்கள்
கவனத்தில் கொள்வது இல்லை. மேலும் கண்டெய்னர்களை விடுவிப்பதற்காக அதிக நாள்கள் காத்திருக்க வேண்டிய அவலமும் உள்ளது. இவ்வாறு நூதன முறையில் கூடுதல் லாபம் ஈட்டுவதில் கப்பல் நிறுவனங்களும், தனியார் சரக்குப் பெட்டக நிலையங்களும் கூட்டாகச் செயல்படுவதாக இறக்குமதியாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இருப்பு வைக்க வசதி இருந்தும் இடம் மாற்றுவது ஏன்?
இது குறித்து சுங்கத்துறை முகவர் சதீஷன் கூறியது,
சென்னைத் துறைமுகத்தில் உள்ள இரண்டு முனையங்களிலும் ஒரே நேரத்தில் சுமார் 900 குளிர்சாதன கண்டெய்னர்களை இருப்பு வைப்பதற்கான வசதிகள் உள்ளன. இதில் பாதியளவு கூட தற்போது முழுமையாகப் பயன்படுத்தப்படுவதில்லை. பிறகு எதற்கு கண்டெய்னர்களை வேண்டுமென்றே இங்கிருந்து 40 கி.மீ. தூரத்தில் உள்ள பொன்னேரிக்கு எடுத்து செல்ல வேண்டும்?. இறக்குமதியாளர்களை, முகவர்களை அவதிக்குள்ளாக்க வேண்டும்?. இதில் கூட்டாகச் சேர்ந்து நியாயமற்ற கூடுதல் லாபம் ஈட்டுவதைத் தவிர வேறு என்ன காரணங்கள் இருக்க முடியும்?. இதன் மூலம் வெளிநாடுகளைச் சேர்ந்த கப்பல் நிறுவனங்களும், தனியார் சரக்குப் பெட்டக நிலையங்களும் மாதம் சுமார் ரூ.10 கோடிக்கும் மேல் கூடுதல் லாபம் ஈட்டுகின்றன. மேலும் இறக்குமதியாளர்களின் கருத்துக்களையோ, கோரிக்கைகளையோ கப்பல் நிறுவனங்கள் சிறிது கூட மதிப்பது இல்லை. இதனால் சென்னைத் துறைமுகத்தின் நம்பகத்தன்மைதான் பாதிக்கப்படுவது மட்டுமல்லாது இங்கிருந்து இறக்குமதியாளர்கள் வேறு துறைமுகங்களுக்கு இடம்பெயருவது நிச்சயம் நடக்கும் என்றார் சதீஷன்.
இறக்குமதியாளர்களை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை:
இது குறித்து குன்னூரைச் சேர்ந்த தோட்டக் கலை நிறுவன மேலாளர் நம்பியார் கூறியது,
எங்கள் நிறுவனத்திற்கு நெதர்லாந்து நாட்டிலிருந்து தொடர்ச்சியாக லில்லி மலருக்கான விதைகள் இறக்குமதியாகின்றன. இதேபோல் கடந்த வாரம்
ஒரு கண்டெய்னர் மார்க்ஸ் என்ற கப்பல் நிறுவனம் மூலம் கொண்டுவரப்பட்டது. இதனை சென்னைத் துறைமுகத்திலேயே எடுத்துக் கொள்கிறோம் என கடிதம் அளித்திருந்தோம். இதற்கான கட்டணம் ஒன்றையும் செலுத்திவிட்டோம். ஆனால்
அடுத்த நாளே எங்களது கண்டெய்னரை இதே நிறுவனத்திற்குச் சொந்தமான ஏ.பி.எம்.
சரக்குப் பெட்டக நிலையத்திற்கு எடுத்துச் சென்றுவிட்டனர். இது குறித்து பலமுறை
தொடர்பு கொண்டும் இக்கப்பல் நிறுவனம் ஒரு பொருட்டாக நினைத்து எவ்வித பதிலையும் கூட அளிக்கவில்லை. பிறகு வேறு வழியின்று நான்கு நாள்களுக்குப் பிறகு ரூ.49 ஆயிரம் கூடுதல் கட்டண் செலுத்தி கண்டெய்னரை விடுவித்து சரக்குகளை குன்னூர் எடுத்துவந்தோம். இதுபோல பலரும் அவஸ்தைக்கு உள்ளாகி வருவதாகத் தெரிகிறது. எனவே இனி சென்னைத் துறைமுகத்தைத் தவிர்த்து கொச்சி துறைமுகத்திலிருந்து இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளோம் என்றார் நம்பியார்.
இதே கருத்துக்களை கோயம்பேடு மார்க்கெட்டைச் சேர்ந்த பழவியாபாரிகளும்
தெரிவித்துள்ளனர். இது குறித்து கப்பல்த் துறை அமைச்சகம் தீவிர விசாரணை நடத்தினால் உண்மை வெளிவரக் கூடும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
பெட்டிச் செய்தி.....
அதானியின் போட்டியை சென்னைத் துறைமுகம் சமாளிக்குமா?
ஏற்கனவே கண்டெய்னர் போக்குவரத்து நெரிசல், கட்டமைப்பு குறைபாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் சென்னைத் துறைமுகம் தள்ளாடி வரும் நிலையில் இதனை தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்ள அதானி துறைமுக நிர்வாகம் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. முதற்கட்டமாக எல் அன் டி நிறுவனத்திடமிருந்து காட்டுப் பள்ளி துறைமுக சரக்குப் பெட்டக முனையத்தை ஒப்பந்த அடிப்படையில் அதானி இயக்கி வருகிறது. மேலும் எண்ணூர் துறைமுகத்தில் ரூ.1,270 கோடி மதிப்பீட்டில் மிகப் பெரிய சரக்குப் பெட்ட முனையத்தை அதானி அமைத்து வருகிறது. இந்த இரண்டு முனையங்களில் கண்டெய்னர்களை நேரடியாக இறக்குமதியாளர்கள் எடுத்துச் செல்ல அதானி நிர்வாகம் வசதிகளை ஏற்படுத்திவருகிறது. எனவே செலவினங்கள் குறையும்போது இறக்குமதியாளர்கள் அதானி துறைமுக முனையங்களுக்கு இடம்பெயர்வது என்பது தவிர்க்க முடியாதது ஆகும். இது சென்னைத் துறைமுகத்தை மேலும் சிக்கலாக்கும். ஆனால் போக்குவரத்து நெரிசலாகட்டும், ஏற்றுமதி, இறக்குமதியாளர்களின் பிரச்னைகளாகட்டும் தங்களுக்கு எவ்வித தொடர்பும் இல்லாதபோல்தான் துறைமுகம் செயல்பட்டு வருவதாக பல்வேறு தரப்பினரும் புகார் தெரிவிக்கின்றனர். இது குறித்து கப்பல் போக்குவரத்து இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நடவடிக்கை எடுப்பாரா?
No comments:
Post a Comment