காப்பீட்டு நிறுவனங்கள் இழப்பீட்டுத் தொகையை விரைந்து வழங்க வேண்டும்
சென்னை தொழில் வர்த்தக சங்கம் கோரிக்கை
திருவொற்றியூர், டிச.11:வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க காப்பீட்டு நிறுவனங்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை தொழில் வர்த்தக சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறி்த்து இச்சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:
சமீபத்திய வெள்ளதால் சென்னையிலுள்ள தொழில் நிறுவனங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் 20 லட்சம் மணித்துளிகள் மனித உழைப்பு பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏற்றுமதி, இறக்குமதி தொழில்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. இதனால் வெளிநாட்டிலிருந்து பெறப்பட்ட ஆர்டர்களை குறித்த காலத்திற்குள் பூர்த்தி செய்யப்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தொழில் துறையை மீட்டெடுக்க மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும். அனைத்து வகை வரி செலுத்துவதற்கான கால அளவு நீடிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.
ஏற்றுமதி, இறக்குமதிக்காக கொண்டு வரப்பட்டு துறைமுகங்கள், விமான நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ள பொருள்களுக்கு சுணக்க கட்டணங்களிலிருந்து (Demurage Charges) விலக்கு அளிக்க வேண்டும். நிறுவனங்கள், தொழிலகங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து உடனடியாக கள ஆய்வு செய்து இழப்பீட்டுத் தொகையை முடிந்தவரை விரைவாக வழங்க காப்பீட்டு நிறுவனங்கள் முன்வர வேண்டும்.
நிவாரணம் வழங்கிய செலவுகளுக்கு நூறு சதவீத வருமான வரி விலக்கு வழங்க வேண்டும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தொழிலாளிகள், ஊழியர்களுக்கு பிணையம் இன்றி ஒரு லட்சம் ரூபாய் தனிநபர் கடன்களை வழங்க வேண்டும்.
பாதிப்பிற்கு உள்ளான தொழிலகங்களை சீரமைக்க தேவையான அளவு வங்கிக் கடன்களை வழங்கி மீண்டும் தொழில்துறையை இயல்புநிலைக்கு கொண்டு வர
நடவடிக்கை எடுக்க வேண்டும் என இச்சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
No comments:
Post a Comment