திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலில் ஆகம விதிகள் மீறப்படுகிறதா?
நம்பூதிரிகள்-சிவாச்சாரியார்கள் இடையே வலுக்கும் உரிமை போராட்டம்
திருவொற்றியூர், ஜன.22:திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலில் நீண்ட காலமாக பூஜை செய்து வந்த நம்பூதிரிகள் வியாழக்கிழமை திடீரென கேரளா திரும்பிச் சென்றதையடுத்து வெள்ளிக்கிழமை இங்கு பூஜை செய்யும் பணியி்ல் சிவாச்சாரியார்கள் ஈடுபட்டுள்ளனர். இதன் மூலம் நீண்ட காலமாக இரு தரப்பினரிடையே இருந்து வந்த உரிமைப் போராட்டம் உச்சகட்டத்தை அடைந்துள்ளது.
திருவொற்றியூர் தியாகராஜர்சுவாமி கோயில் என அழைக்கப்பட்டாலும் வடிவுடையம்மன் கோயில் என்றால்தான் உடனடியாக நினைவுக்கு வரும். சிவன் கோயிலான இங்கு அனைத்து பிரகாரங்களிலும் பூஜை, வழிபாடு செய்யும் பணியில் சிவாச்சாரியார்கள் உள்ளனர். ஆனால் வடிவுடைம்மன் கோயிலில் மட்டும் கேரளாவைச் சேர்ந்த நம்பூதிரிகள் பூஜை, வழிபாடு செய்யும் வழக்கம் நீண்ட காலமாக இருந்து வருகிறது. அதுவும் திருமணமாகதவர்கள் மட்டுமே தீட்சை பெற்று வடிவுடையம்மன் கோயிலில் பூஜை செய்ய முடியும். ஆதிசங்கரர் காலத்திலிருந்தே இவ்வாறான வழக்கம் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் பணியில் இருந்த மூன்று நம்பூதிரிகளும் வியாழக்கிழமை திடீரென கேரளாவிற்கு புறப்பட்டுச் சென்றுவிட்டனர். இதனையடுத்து வெள்ளிக்கிழமை வடிவடையம்மனுக்கு பூஜை செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதனையடுத்து வடிவுடையம்மன் கோயிலில் சிவாச்சாரியார்களைக் கொண்டு வழக்கமான பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பிரச்னை திருவொற்றியூர் பகுதி ஆன்மீகவாதிகள், பக்தர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆகம விதிகள் புறக்கணிப்பு: பக்தர்கள் கருத்து
இங்குள்ள சிவாச்சாரியார்கள் யாகம் வளர்த்து, தீட்சை வழங்கினால் மட்டுமே புதிய நம்பூதிரிகளைச் சேர்க்க முடியும் என்ற நிலையில் இதற்கும் இங்குள்ள சிவாச்சாரியார்கள் தடையாக இருந்துள்ளனர். இதனால் நம்பூதிரிகளுக்கும், சிவாச்சாரியார்களுக்கும் தொடர்ந்து பிரச்னை இருந்து வந்துள்ளது. இதற்கு காரணம் அதிகமான பக்தர்கள் வடிவுடையம்மன் கோயிலுக்குத்தான் வரும் வழக்கம் உள்ளதால் தங்களுக்கு முக்கியத்துவம் இல்லை என சிவாச்சாரியார்கள் கருதுகின்றனர். மேலும் வருவாய் ஈட்டுவதில் நம்பூதிரிகளுக்கும், சிவாச்சாரியார்களுக்கும் இடையே ஏற்ற தாழ்வுகள் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நம்பூதிரிகள் பூஜை செய்யும் நடைமுறை நீண்ட நெடுங்காலமாக வழக்கத்தில் இருக்கும் நிலையில் இரு தரப்பினரையும் இணக்கமாகச் செயல்பட வைப்பதில் கோயில் நிர்வாகம் போதிய முயற்சி மேற்கொள்ளவில்லை. இதன் மூலம் நீண்ட காலமாக இருந்து வரும் ஆகம விதிகள் கோயில் நிர்வாகத்தால் புறக்கணிக்கப்பட்டுள்ளது என பக்தர்கள் சிலர் தெரிவித்தனர்.
ஆகக விதி மீறல் இல்லை:கோயில் நிர்வாகம்
கோயில் செயல் அலுவலர் ந.லதா கூறியது,
வடிவுடையம்மன் கோயிலில் நம்பூதிரிகள் மட்டுமே பூஜை செய்யும் வழக்கம் நீண்ட காலமாக இருந்து வருவது உண்மைதான். தற்போது அவர்களுக்கு வயதாகிவிட்டதால் சொந்த ஊருக்குத் திரும்பிச் செல்வதாகக் கூறிவிட்டு திடீரென சென்றுவிட்டனர். கோயில் பூஜை நடைமுறைகளில் கோயில் நிர்வாகம் தலையிடுவதில்லை. இருப்பினும் ஊருக்குச் செல்லவிருந்த நம்பூதிரிகளை அழைத்து சமாதானப்படுத்தினோம். ஆனால் நம்பூதிரிகள் தங்கள் முடிவினை மாற்றுவதாக இல்லை. புதிய நம்பூதிரிகளை அழைத்துவரவும் இல்லை. தீட்சை வழங்க மறுக்கப்படவும் இல்லை. கும்பாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு விழாக்களில் வடிவுடையம்மன் கோயிலில் சிவாச்சாரியார்கள்தான் சிறப்பு பூஜைகள் செய்துள்ளனர். எனவே பூஜை செய்ய ஒரு நம்பூதிரியும் இல்லாத நிலையில் சிவாச்சாரியார்களைக் கொண்டு பூஜை செய்வதில் என்ன தவறு? இதில் எவ்வித ஆகம விதி மீறலும் இல்லை. தெப்பத் திருவிழா நடைபெற உள்ள நிலையில் சிலர் வேண்டுமென்றே பிரச்னையை திசை திருப்புகின்றனர் என்பதே உண்மை என்றார் லதா.
நிர்வாக நடைமுறையில் ஏற்பட்ட மாற்றம் என கோயில் நிர்வாகம் தெரிவித்தாலும் ஆகம விதிகள் மீறப்படுவதாக சந்தேகம் எழுந்துள்ள நிலையில் பக்தர்கள், ஆன்மீகவாதிகளின் நம்பிக்கையைக் காப்பாற்றும் வகையில் அறநிலையத்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.
No comments:
Post a Comment