Monday, 25 January 2016

கிடப்பிலுள்ள இறக்குமதி சரக்குகளை ஆன்லைன் மூலம் ஏலம் விட புதிய மென்பொருள் 

சென்னை சுங்கத் துறை அறிமுகம்

திருவொற்றியூர், ஜன.5: வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு பல்வேறு காரணங்களால் விடுவிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ள கண்டெய்னர்களை ஆன்லைனில் பதிவு செய்து ஏலம் விட புதிய மென்பொருளை சென்னை சுங்கத்துறையும், சரக்குப் பெட்டக நிலையங்களுக்கான கூட்டமைப்பும் கூட்டாகச் சேர்ந்து செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்துள்ளன.
   இதற்கான நிகழ்ச்சி சென்னை சுங்க இல்லத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் சென்னை சுங்க இல்ல முதன்மை ஆணையர் எஸ்.ரமேஷ், திருச்சி மண்டல முதன்மை ஆணையர் பி.கே.தாஸ் ஆகியோர் முன்னிலையில் மத்திய கலால் மற்றும் சுங்க வாரிய உறுப்பினர் வனஜா என். சர்னா கலந்து கொண்டு புதிய திட்டத்தைத் தொடங்கி வைத்தார். 
இப்புதிய திட்டம் குறித்து சரக்குப் பெட்டக நிலையங்களுக்கான தேசிய கூட்டமைப்பின் தலைவர் அருண் கூறியது,
    வெளிநாடுகளிலிருந்து கண்டெய்னர்கள் முலம் இறக்குமதியாகும் சரக்குகள் சுங்கத்துறை பரிசோதனைக்குப் பிறகு விடுவிக்கப்பட்ட பின்னர் இறக்குமதியாளர்கள் இச்சரக்குகளை எடுத்துச் செல்வதும் நடைமுறையில் இயல்பானது. பின்னர் காலி கண்டெய்னர்கள் கப்பல் நிறுவனங்களில் திரும்பவும் ஒப்படைக்கப்படும். பிறகு இந்த காலி கண்டெய்னர்களில் ஏற்றுமதிக்கான சரக்குகள் ஏற்றப்பட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படும். ஆனால் இவ்வாறு கண்டெய்னர்களில் இறக்குமதியாகும் சரக்குகள் பல்வேறு காரணங்களால் எடுத்துச் செல்லாமல் சரக்குப் பெட்டக நிலையங்களிலேயே இருப்பு வைக்கப்படும். தடை செய்யப்பட்டவை, கடத்தி வரப்பட்டவை, போதிய லாபமின்மையால் இறக்குமதியாளர்களால் உரிமை கோரப்படாதவை என பல்வேறு வகையில் இச்சரக்குகள் கண்டெய்னர்களிலேயே வைக்கப்பட்டு சரக்குப் பெட்டக நிலையங்களில் நீண்ட காலமாக விடுவிக்கப்படாமல்
கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதனால் சுங்கக் கட்டணம், கண்டெய்னர் வாடகை, சரக்குப் பெட்டக நிலையங்களுக்கான கட்டணம் உள்ளிட்டவை நிலுவையில் இருக்கும். இவற்றை ஏலம் விட்டும் வரும் தொகையில் இக்கட்டணங்களை வசூலிக்க இயலும். 
இதில் தாமதம் ஏற்படும் நிலையில் பொருள்கள் வீணாகி போதிய ஏலத் தொகை கிடைகாகாம்ல போய்விடும். சென்னை வட்டாரத்தில் மட்டும் சுமார் 3,500 கண்டெய்னர்கள் நிலுவையில் கிடக்கின்றன. இவற்றின் விபரங்கள் ஆன்லைனில் பதிவு செய்து ஆன்லைன் மூலம் ஏலம் விட சுங்கத்துறை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கென புதிய மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏலம் விடுவதற்கான காலதாமதம் வெகுவாகக் குறைக்கப்படும் என்றார் அருண்.
   இதில் காமராஜர் துறைமுகத் தலைவர் பாஸ்கராச்சார், சத்துவா சரக்குப் பெட்டக நிலைய இயக்குன் பத்மநாபன், சுங்கத்துறை ஆணையர்கள் பிரகாஷ் பகேரா, மயன்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment