அனல் மின் நிலைய கொதிநீர், சாம்பலால் கடும் சுற்றுச் சூழல் சீர்கேடு
எண்ணூர் முகத்துவாரத்தை சீர்படுத்த சிறப்பு நடவடிக்கை தேவை
நீதியரசர் டி.ஹரிபரந்தாமன்
திருவொற்றியூர், மார்ச் 26:வடசென்னையில் அமைந்துள்ள அனல் மின் நிலையங்களிலிருந்து வெளியேற்றப்படும் கொதிநீர், சாம்பலால் எண்ணூர் முகத்துவாரம் பகுதி சீர்கேடு அடைந்துள்ளது. இதனைச் சீர்படுத்த சிறப்பு நடவடிக்கை தேவை என சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி டி.ஹரிபரந்தாமன் கோரிக்கை விடுத்துள்ளார்.
எண்ணூர் முகத்துவாரம், பழவேற்காடு, பக்கிங்காம் கால்வாய் உள்ளிட்ட பகுதிகளில் நிலவும் சுற்றுச் சூழல் சீர்கேடுகள் குறித்த பொதுமக்கள் கலந்தாய்வுக் கூட்டம் எண்ணூரில் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு எண்ணூர் அனைத்து மீனவர் கிராமங்களின் கூட்டமைப்பு மற்றும் கோஸ்டல் ரிசோர்ஸ் சென்டர் என்ற தன்னார்வ அமைப்பு ஆகியன இணைத்து செய்திருந்தன. இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களைத் தெரிவித்தனர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி டி.ஹரிபரந்தாமன் கலந்து கொண்டார்.
அப்போது நீதிபதி ஹரிபரந்தாமன் பேசியது,
தமிழகத்தில் சுமார் ஆயிரம் கி.மீ.க்கும் அதிகமான நீளமுள்ள கடற்கரை உள்ளது.
ஆனால் எண்ணூர் முகத்துவாரத்திற்கென்று தனிச் சிறப்பு உண்டு. குசஸ்தலை ஆறு, பழவேற்காடு ஏரி, பக்கிங்காம் கால்வாய், வெளியேறித் திரும்பும் கடல் நீர் (Back water), அலையாத்தி காடுகள் (Mangroves) என ஒரு காலத்தில் எழில் மிகுந்த பகுதியாக இப்பகுதி இருந்துள்ளது. ஆதிகாலத்தில் நீர்வழிப்பயணம்தான் முக்கிய இடம் வகித்துள்ளது. எனக்கு சொந்த ஊர் திருவள்ளூர் அருகே ஒரு கிராமம். எனது தந்தையார் காலத்தில் திருப்போரில் உள்ள முருகன் கோயில் செல்வதற்கு இங்கு வந்து பக்கிங்காம் கால்வாயில் படகு மூலம் பயணித்ததாகக் கூறுவார். 65 அடி நீளமுள்ள படகுகள் இக்கால்வாயில் பயணித்துள்ளன. இதனை நம் தலைமுறையிலேயே அனுபவிக்க முடியாமல் போய்விட்டது. இதுவே வெளிநாடுகளில் இருந்திருந்தால் பொக்கிஷமாகப் போற்றி பாதுகாத்து இருப்பார்கள்.
தொழில் வளர்ச்சிக்காக நிலம் கையகப்படுத்தப்படுகிறது. அதற்காக இழப்பீடும், வேலை வாய்ப்பும் அளிக்கப்படுகிறது. ஆனால் இது சரியல்ல. நிலம் கையகப்படுத்தினால் அதற்கு பதிலாக மாற்று நிலம் வழங்கப்பட வேண்டும். வேலைவாய்ப்பு என்பது ஒரு தலைமுறையோடு முடிந்துவிடும். நிலம்தான் தலைமுறையைக் கடந்தும் இருக்கும்.
எண்ணூர் பகுதியில் மூன்று அனல் மின் நிலையங்கள். அனைத்தும் மத்திய, மாநில அரசுகளுக்குச் சொந்தமானவை. இங்கிருந்து வெளியேற்றப்படும் கொதிநீர், சாம்பலால் முகத்துவாரம், ஆற்றுப் பகுதி, கால்வாய் என அனைத்தும் பாழடைந்துவிட்டன. நேரில் சென்று பார்த்தபோது சாம்பல் மேடுகள் பல அடி உயரத்திற்கு தேங்கி நிற்கின்றன. சில இடங்களில் நீர்மட்டத்திற்கு மேலே சாம்பல் மேடுகள் உயர்ந்துள்ளன என்றால் சுற்றுச் சூழல் எந்த அளவிற்கு சீர்கெட்டுள்ளது என்பதை அறியலாம். இது தவிர காமராஜர் துறைமுகம் ஆற்றுப் படுகைகளை மண்ணைக் கொட்டி பெரிய அளவில் அபகரித்து வருகிறது. இதனால் ஆற்றின் போக்கே திசைமாறிவிடும் அபாயம் உள்ளது. வடசென்னை பகுதியின் மலக்கழிவுகள், கழிவுநீர் உள்ளிட்டவை பக்கிங்காம் கால்வாய் மூலம் இப்பகுதியே நாற்றம் வீசுகிறது. இது தவிர
மணலி ரசாயனத் தொழிற்சாலையின் ரசாயனக் கழிவுகள் இங்குதான். எவ்வளவுதான்
தாங்கும் இந்த முகத்துவாரம். தனியார் தவறு செய்தால் தண்டிக்கும் அதிகாரம் பெற்ற அரசுகளே இந்தச் சீரழிவுகளுக்கெல்லாம் காரணமாக இருந்தால் இவர்களை யார் கேட்பது என்பதுதான் வேதனை. எனக்குத் தெரிந்தவரை இச்சீரழிவுகளை சீர்படுத்துவது எளிதல்ல. நீண்ட கால சிறப்புத் திட்டங்கள் மூலம் மட்டும்தான் இப்பகுதியைச் சீரமைக்க முடியும்.
எனவே எண்ணூர் முக்த்துவாரத்தை பாதுகாக்கும் போராட்டத்தை இப்பகுதி மக்கள்தான் முன்னெடுக்க வேண்டும். பிறகு தமிழகமெங்கும் இதன் சீரழிவு குறித்து விழிப்புணர்வு ஆதரவு திரட்ட வேண்டும் என்றார் ஹரிபரந்தாமன்.
இந்நிகழ்ச்சியில் சுற்றுச் சூழல் ஆர்வலர் டாக்டர் ஹிசாமுதின் பாப்பா, பொருளாதார பேராசிரியர் டாக்டர் எஸ்.ஜானகிராமன், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சரவணன், மீனவ கிராம பிரதிநிதிகள் ஆனந்தன், பார்த்தசாரதி, திருநாவுக்கரசு, வனம், சிவகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.
மிக நல்ல தீர்ப்பு . நீதிபதிகள் ஹரிபரந்தாமன்,சந்துரு போன்றவர்கள்
ReplyDeleteமீண்டும் மக்களைக் காக்க வரவேண்டும்.மற்ற நிதிபதிகளால் மக்களுக்கு பயன் இல்லை. முகவைக்குப் பாராட்டு. மா.கி