Tuesday, 5 April 2016


டிஜிட்டல் மயமாகும் சுங்கத் துறை: ஏப்ரல் 1 முதல் புதிய நடைமுறை 

ஒற்றைச் சாளர முறையில் ஏற்றுமதி, இறக்குமதி ஆவண பரிவர்த்தனை

முறைகேடுகள், காலதாமதங்கள் குறையும்


திருவொற்றியூர், மார்ச் 30:ஏற்றுமதி, இறக்குமதிக்கான சுங்கத்துறை ஆவணப் பரிசோதனையில் ஒற்றைச் சாளர முறை ஏப்ரல் முதல் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதனால் ஏற்றுமதி, இறக்குமதியில் தேவையற்ற காலதாமதம், முறைகேடுகள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
   தற்போது ஏற்றுமதி செய்ய வேண்டும் எனி்ல் சுங்கத்துறையில் ஷிப்பில் பில் (Shipping Bill), இறக்குமதி செய்ய வேண்டும் எனில் பில் ஆப் என்ட்ரி (Bill of Entry)என்ற ஆவண பரிவர்த்தனை நடைமுறை கடைப்பிடிக்கப்படுகிறது. இவ்வாறு பதிவு செய்த ஆவணங்களை ICEGATE.gov.in என்ற இணையத்தளம் மூலம் சுங்கத்துறை அதிகாரிகள் மதிப்பீடு செய்வார்கள். பின்னர் சுங்கக் கட்டணம் செலுத்திய பிறகு சரக்குகளை நேரடியாகப் பார்வையிட்டு கள ஆய்வு செய்வார்கள். பின்னர் இறக்குமதியாளர் அல்லது அவரது அனுமதி பெற்ற முகவர்கள் மூலம் சரக்குகள் விடுவிக்கப்படும். ஏற்றுமதியிலும் மதிப்பீடு, கள ஆய்வுக்குக் பிறகு கண்டெய்னர்களில் சரக்குகளை ஏற்றி மூடி முத்திரையிட்டு பின்னர் துறைமுகங்களுக்கு அனுப்பி வைப்பார்கள். இதற்கிடையே பெரும்பாலான சரக்குகளுக்கு சுங்கத் துறை அல்லாமல் பல்வேறு அரசுத் துறைகளிடமிருந்து தடையில்லாச் சான்றிதழ்கள் (NOC-No Objection Certificates) பெறப்பட வேண்டிய கட்டாயம் உள்ளது. 
44 வகையான தடையில்லாச் சான்றிதழ்கள்: 
    இச்சான்றிதழ்கள் அனைத்தும் பன்னாட்டு ஒப்பந்த நடைமுறைகளின் அடிப்படையில் 
வழங்கப்படுகின்றன. உதாரணமாக வெளிநாடுகளிலிருந்து விவசாய விளைபொருள்கள், மரங்கள் உள்ளிட்டவைகளை இறக்குமதி செய்ய வேண்டும் எனில் அதில் வெளிநாடுகளிலிருந்து பூச்சி, நோய்க் காரணிகள் ஏதும் இந்தியாவில் ஊடுருவாமல் இருக்க தாவர பூச்சிக் கட்டுப்பாட்டுத் துறையின் (Plant Quarantine) தடையில்லாச் சான்று அவசியமானது. இதேபோல் உணவுப் பொருள்களை இறக்குமதி செய்ய வேண்டும் எனில் இந்திய உணவு பாதுகாப்புத் தரச் சான்று ஆணையத்தின் (FSSAI-Food Safety Standards Authority of India) தடையில்லாச் சான்றும் பெறப்பட வேண்டும். இதுபோல 44 துறைகளின் தடையில்லாச் சான்றுகள் வழங்கப்படுகின்றன. தற்போது 
சுங்கத் துறை ஆவண பரிவர்த்தனைகள் முடிந்துவிட்டாலும் இத்துறைகளில் தடையில்லாச் சான்றுகளைப் பெற தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும். அந்தந்தத் 
துறை அதிகாரிகள் சரக்குகளை நேரில் சென்று ஆய்வு செய்து அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் தடையில்லாச் சான்று அளிப்பார்கள். இச்சான்றுகளை முகவர்கள் சுங்கத்துறையில் ஒப்படைத்த பிறகு சரக்குகள் விடுவிக்கப்படும்.
ஒற்றைச்சாளர முறை அறிமுகம்:
      இதில் சரக்குகளை விடுவிக்க சுமார் 3 முதல் 15 நாள்கள்வரைகூட காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனைத் தவிர்க்க அனைத்து ஆவணங்களையும், ஒருங்கிணைக்கப்பட்ட உறுதிமொழிப் பத்திரத்தை (Integrated Declaration) இறக்குமதியாளர்கள் அல்லது முகவர்கள் சுங்கத்துறையில் சமர்ப்பித்தால் போதுமானது. சுங்கத்துறை மதிப்பீட்டிற்குப் பிறகு தடையில்லாச் சான்றுகளைப் பெற தொடர்புடைய துறைக்கு சுங்கத்துறையே அனுப்பி வைக்கும். பிறகு அந்தந்தத் துறைகளிலிருந்து சரக்குகளை ஆய்வு செய்தபிறகு தடையில்லாச் சான்றுகள் 
சுங்கத்துறைக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்படும். முதல் கட்டமாக தாவர நோய்த் தடுப்பு, உணவுப் பாதுகாப்பு, விலங்குகள் நோய்த் தடுப்பு, அரிய வகை விலங்கினங்கள் பாதுகாப்பு, மருந்துக் கட்டுபாட்டுத் துறை உள்ளிட்ட ஐந்து துறைகளில் இத்திட்டம் அமலாக உள்ளது.  ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ள இந்த ஒற்றைச் சாளர முறையால் தேவையற்ற காலதாமதம், முறைகேடுகள் தவிர்க்கப்படும் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர். 
வெளிப்படைத் தன்மை கடைப்பிடிக்கப்படும்: 
 இத்திட்டம் குறித்து மத்திய சுங்கம் மற்றும் ஆயத்தீர்வை வாரிய இணை ஆணையர் (ஒற்றைச்சாளர முறை திட்டம்) ராஜேந்திர மீனா கூறியது,
    இத்திட்டம் செயல்பாட்டுக்கு வருவதன் மூலம் இறக்குமதியாளர்கள் தடையில்லாச் சான்றுகளைப் பல துறைகளை நோக்கி அலைய வேண்டிய அவசியம் இல்லை. சுங்கத் துறையுடன் அனைத்து துறைகளுக்கும் தகவல் அனுப்ப சிறப்பு தொகுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போது முக்கிய துறைகளில் அமல்படுத்தப்பட்டுள்ள இத்திட்டம் படிப்படியாக அனைத்து துறைகளுக்கும் விரிவு படுத்தப்படும். மேலும் இத்திட்டம் மூலம் ஏற்றுமதி இறக்குமதி ஆவண பரிசோதனையில் வெளிப்படைத் தன்மை கடைப்பிடிக்கப்படும். மேலும் சமர்ப்பிக்கப்படும் அனைத்து ஆவணங்களும்  மின்னணு ஆவணமாக (Digital Documents) செயல்வடிவம் பெறும். இதன்மூலம் சுங்கத்துறை படிப்படியாக முழுமையான டிஜிட்டல் பயன்பாட்டுக்கு மாற்றம் பெறும். ஒற்றைச் சாளர முறையை வெற்றியடைச் செய்ய அதிகாரிகள், இறக்குமதியாளர்கள், முகவர்கள் உள்ளிட்ட அனைவரும் ஒத்துழைப்பது அவசியமானது என்றார் ராஜேந்திர மீனா.
கால அவகாசம் தேவை: முகவர்கள் கோரிக்கை
இது குறித்து சென்னை சுங்க இல்ல முகவர்கள் சங்கத்தின் தலைவர் நடராஜன், செயலாளர் கே.வி.வி.கிரி ஆகியோர் கூறியது,
    கடந்த இரண்டு ஆண்டுகளாக இத்திட்டம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வந்த நிலையில் ஒரு வாரத்திற்கு முன்புதான் இது ஏப்ரல் முதல் தேதி முதல் அமலுக்கு 
வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஏற்றுமதியாளர்கள், முகவர்கள், ஊழியர்கள் அறிந்து கொள்ள கால அவகாசம் தேவை. மேலும் சுமார் 40-க்கும் மேற்பட்ட சான்றிதழ்களைப் பெற அனைத்து துறைகளையும் ஒருங்கிணைக்க வேண்டும். தற்போதைய முறையில் காலதாமதம் குறித்தோ அல்லது வேறு காரணங்கள் குறித்தோ சுங்கத் துறையால் இதர துறைகளைக் கேள்வி எழுப்ப முடியாது. எனவே இத்திட்டத்தை சிறப்பாக அமல்படுத்த வேண்டும் எனில் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து குறை தீர்க்கும் அதிகாரி (Nodal Officer) ஒவ்வொரு அலுவலகத்திலும் 24 மணி நேரமும் இருக்க வேண்டும். இந்த அதிகாரிக்கு அனைத்து துறைகளையும் கண்காணிக்கவும், தவறுகளைச் சரிசெய்யவும் அதிகாரம் அளிக்கப்பட்டிருக்க வேண்டும். தற்போது ஐந்து துறைகள் மட்டுமே இணைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள அனைத்து துறைகளையும் இந்த ஒற்றச் சாளரமுறையில் இணைக்க வேண்டும் என்றனர்.

No comments:

Post a Comment