வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றியதில் திருவொற்றியூர் தொகுதி முன்னிலை
கே.குப்பன் எம்.எல்.ஏ
திருவொற்றியூர், ஏப்.3:கடந்த ஐந்து ஆண்டுகளில் திருவொற்றியூர் தொகுதியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள், அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் வளர்ச்சி பெற்ற தொகுதிகளில் ஒன்றாகத் திருவொற்றியூர் முன்னேறியுள்ளது என திருவொற்றியூர் சட்டப் பேரவை உறுப்பினர் கே.குப்பன் தெரிவித்துள்ளார்.
கடந்த 2011 சட்டப் பேரவை தேர்தலில் திருவொற்றியூர் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டப் பேரவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டவர் கே.குப்பன். 1991-ல் இதே தொகுதியில் வெற்றிபெற்றவர் இவர். இந்நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் இத்தொகுதியில் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து கே.குப்பன் எம்.எல்.ஏ கூறியது,
தேர்தலில் வெற்றி பெற்றவுடன் திருவொற்றியூர் தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என உறுதி அளித்திருந்தேன். இதில் 90 சதவீத பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
திருவொற்றியூரில் அரசு கலைக் கல்லூரி புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளது. மாதவரத்திலிருந்து பிரிந்து திருவொற்றியூரில் புதிய தாலுகா செயல்பட்டு வருகிறது. திருவொற்றியூர் நெடுஞ்சாலை 65 அடி சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
சுமார் ரூ.63 கோடி செலவில் கடலரிப்புத் தடுப்புச் சுவர், தூண்டில் வளைவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. திருச்சினாங்குப்பத்தில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் 492 மீனவ குடும்பங்களுக்கு அடுக்கு மாடி வீடுகள் கட்டப்பட்டு பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது. சுனாமி மறுவாழ்வுத் திட்டத்தின் கீழ் எர்ணாவூரில் 139 கோடி செலவில் சுமார் 3,600 அடுக்கு மாடி குடியிருப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. ரூ.88 கோடியில் மேல்நிலை குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு வீடுதோறும் குடிநீர் விநியோகம் சீராகியுள்ளது. சுமார் ரூ.162 கோடி மதிப்பீட்டில் புதிய பாதாளச் சாக்கடைத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு அன்னை சிவகாமி நகர், கத்திவாக்கம், சின்னச் சேக்காடு, மணலி உள்ளிட்ட பகுதிகளில் பணிகள் நடைபெற்று வருகின்றன. ரூ.33 கோடியில் மணலி, சின்னச் சேக்காடு சிறப்புக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
13,650 பேருக்கு மனைப்பட்டா:
அரசு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கும் திட்டத்தை விரைவாகச் செயல்படுத்த இரண்டு சிறப்பு தாசில்தார் நியமனம் செய்யப்பட்டு திருவொற்றியூரில் சுமார் 8 ஆயிரம், கத்திவாக்கத்தில் 3 ஆயிரம், மணலியில் 2 ஆயிரம், சின்னச் சேக்காட்டில் 650 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா கடந்த ஐந்து ஆண்டுகளில் வழங்கப்பட்டுள்ளன. திருவொற்றியூர் மண்டலத்தில் மட்டும் சுமார் 1,350 தெருக்கள், சாலைகள் உள்ளன. இதில் ஒருசிலவற்றைத் தவிர அனைத்து சாலைகளும் மாநகராட்சி சார்பில் போடப்பட்டுள்ளன. இதில் 360 சாலைகள் கான்கிரீட் சாாலைகளாக மாற்றப்பட்டுள்ளன. திருவொற்றியூர், மணலி மண்டலங்களில் 17 ஆயிரம் நவீன மின்விளக்குகள் மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ளன. எழில் மிகுந்த பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
75 ஆண்டுகளுக்குப் பிறகு தேரோட்டம்:
திருவொற்றியூர் தியாகராஜர் சன்னதிக்கு புதிய தேர் அமைக்கப்பட்டு 75 ஆண்டுகளுக்குப் பிறகு தேரோட்டம் சமீபத்தில் நடைபெற்றது. மேலும் தியாகராஜர் திருக்கோயில், பட்டினத்தார் கோயில் கும்பாபிஷேகங்கள் நடைபெற்றுள்ளன. காலடிப்பேட்டை கல்யாண வரதராஜப் பெருமாள் கோயிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.
இத்தொகுதியில் தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் சுமார் 3 ஆயிரம் பேருக்கும், இரு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் சுமார் 6 ஆயிரம் பேரும் பயனடைந்துள்ளனர். 92 ஆயிரம் குடும்பங்களுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர், பேன் வழங்கப்பட்டுள்ளன. சுமார் 65 குடும்பங்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்கப்பட்டுள்ளன.
மின் திட்டங்கள்:
எண்ணூர் அனல் மின் நிலையத்தில் சுமார் ரூ.9,800 கோடி மதிப்பீட்டில் இரண்டு புதிய அலகுகள் கட்டப்பட்டு வருகின்றன. இதன் மூலம் இப்பகுதியில் சுமார் 10 ஆயிரம் பேருக்கு மறைமுகமாகவும், நேரடி வேலை வாய்ப்பும் உருவாகும். ரூ.22 கோடி செலவில் எர்ணாவூர், மணலி, சாத்துமாநகர் ஆகிய 3 இடங்களில் துணை மின் நிலையங்கள் ஏற்படுத்தப்படுள்ளன. மேலும் மணலியில் ரூ.325 கோடி செலவில்
420 மெகாவாட் திறன் கொண்ட மிகப்பெரிய துணை மின் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது என்றார் குப்பன்.
நிறைவேறாத, கிடப்பில் உள்ள திட்டங்கள்:
இந்நிலையில் நீண்டகால கிடப்பில் உள்ள திட்டங்கள் குறித்து தொகுதி மக்கள் கூறியது,
10 ஆண்டுகளைக் கடந்தும் திருவொற்றியூர் பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகள் முழுமையாக முடிக்கப்படவில்லை. இன்னும் சுத்திகரிப்பு நிலையங்கள் கட்டப்படவில்லை. திருவொற்றியூர் ரயில்வே மேம்பாலம் ஆண்டுக் கணக்கில் நடைபெற்று வருகிறது. விம்கோ நகர் விளையாட்டு மைதானம் இன்னும் மீ்ட்கப்படாமல் உள்ளது. எண்ணூர், விம்கோ நகர், திருவொற்றியூர் உள்ளிட்ட இடங்களில் நவீன மீன் மார்கெட் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படவில்லை. வீட்டு வசதி கோரி 20 ஆண்டுகளாக போராடி வரும் சலவைத் தொழிலாளர்களின் கோரிக்கை இன்னும் முடிந்தபாடில்லை. மீன்பிடித் துறைமுகக் கோரிக்கை, எண்ணூர் முகத்துவாரப் பகுதியில் அனல் மின் நிலையங்களால் தொடரும் சுற்றுச் சூழல் பிரச்னை, ராஜீவ்காந்தி நகர்
ரயில்வே சுரங்கப்பாதை உள்ளிட்ட கோரிக்கைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை என பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கே.குப்பன் எம்.எல்.ஏ. பதில்:
இத்திட்டங்கள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்படவில்லை. அதே நேரம் இவற்றைச் செயல்படுத்தும் வகையில் பூர்வாங்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. மீன்பிடித் துறைமுகம் அமைப்பது குறித்து ரூ.1.40 கோடி செலவில் திட்ட மதிப்பீடு தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அனல் மின் நிலையங்களால் ஏற்படும் சுற்றுச் சூழல் மாசு குறித்தும் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விம்கோ விளையாட்டுத் திடலில்
மெட்ரோ ரயில் நிலையம் அமைய உள்ளது என்றார் குப்பன்.
No comments:
Post a Comment