அரசியல் பயணத்தில் தொடர் குழப்பம்: தத்தளிக்கும் த.மா.கா.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இணையத் தளத்தை திறந்தால் புதிய நம்பிக்கை, வளர்ச்சியை நோக்கிய பாதை என்பதுதான் முதலில் ஒளிருகிறது. இதன் தலைவர் ஜி.கே.வாசன் இரண்டு கட்டை விரல்களையும் முன்னோக்கிச் சவால் விடும் படமும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் முக்கிய கட்சிகளெல்லாம் கூட்டணியைத் தேர்வு செய்து வேட்பாளர்களை அறிவித்து களத்தில் இறங்கியுள்ள நிலையில் த.மா.கா மட்டும் இன்னும் எந்தக் கூட்டணியில் சேர்வது என்றே தடுமாறி நிற்கிறது. காரணம் என்ன?
1996-ம் ஆண்டு அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேரக்கூடாது என ஜி.கே.மூப்பனார் தலைமையில் பெரும்பாலானோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் தலைமை இதனை ஏற்க மறுத்து கூட்டணி அமைத்ததால் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி உதயமானது. வளமான தமிழகம், வலிமையான பாரதம் என்ற முழக்கம் தமாகாவின் கொள்கையாக அறிவிக்கப்பட்டதுு. மேலும் தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்து த.மா.கா. 40 சட்டப் பேரவைத் தொகுதிகளில் போட்டியிட்டு 39 தொகுதிகளில் வென்றது. இதேபோல் போட்டியிட்ட 20 மக்களவைத் தொகுதிகளையும் த.மா.கா வென்றது. இதனையடுத்து தி.மு.க., அ.தி.மு.க.,விற்கு அடுத்து பெரிய சக்தியாக த.மா.கா உருவெடுத்தது.
2001-ம் ஆண்டு பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தி.மு.க. சேர முடிவெடுத்ததையடுத்து அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்தது த.மா.கா. அப்போது கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம் ஜனநாயகப் பேரவை என்ற கட்சியைத் தொடங்கினார். இதுவரை த.மா.கா.வலுவாக இருந்து வந்தது.
மூப்பனார் மறைவு: த.மா.கா. இணைப்பு
இந்நிலையில் ஆக.2001-ல் த.மா.க. நிறுவனர் ஜி.கே.மூப்பனார் மறைந்ததையடுத்து த.மா.கா.வின் எதிர்காலம் கேள்விக் குறியான நிலையில்
முக்கியத் தலைவர்கள் ஆலோசனையின் பேரில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஜி.கே.வாசன் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் கட்சியைத் தொடர்ந்து வழி நடத்துவதில் வாசனுக்கு விருப்பம் இல்லாத நிலையில் தலைவராகப் பொறுப்பேற்ற பதினோறே மாதங்களில் த.மா.கா.வை தாய்க் கட்சியான காங்கிரஸ் கட்சியோடு இணைத்தார் வாசன். இதனையடுத்து தமிழக காங்கிரஸ் கட்சி தலைவராகவும் பொறுப்பேற்றார். பின்னர் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட வாசன் புள்ளிவிபரங்கள் துறை, திட்ட அமலாக்கத் துறை இணை அமைச்சராகவும் பொறுப்பேற்றார். இதனைத் தொடர்ந்து கடந்த முறை கப்பல் போக்குவரத்துத் துறை கேபினட் அமைச்சராக ஐந்தாண்டுகள் பதவி வகித்தார் வாசன்.
மீண்டும் த.மா.கா. உதயம்:
தமாகா இணைக்கப்பட்டுவிட்டாலும் தமிழக காங்கிரஸ் கட்சியில் தனி அணியாகவே தமாகாவினர் செயல்பட்டு வந்தனர். முன்னாள் தமாகாவினரல்லாதவர் மாநில, மாவட்டத் தலைவராக இருந்தாலும் ஒத்துழைப்பு அளிப்பதில்லை. மேலும்
வாசனும் மத்திய தலைமையுடன் தொடர்ந்து தனது ஆதரவாளர்கள் பதவிகளைப் பெறுவதற்காகவே வலியுறுத்தி வந்தார். இது காங்கிரஸ் தலைமையை எரிச்சலூட்டத் தொடங்கியது. குறிப்பாக கட்சியின் துணைத் தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்ட பின்னர் வாசனை புறக்கணிப்பதில் வெளிப்படையாகவே நடந்து கொண்டார். இதனை வாசன் பொறுத்துக் கொண்டே வந்தாலும் அவரது ஆதரவாளர்கள்
மீண்டும் தமாகாவை தொடங்க வேண்டும் என வலியுறுத்தியே வந்தனர். இருப்பினும் வாசன் அசைந்து கொடுக்கவில்லை. ஆனால் இலங்கை தமிழர் பிரச்னை, தமிழக மீனவர்கள் பிரச்னை, காவிரி நீர் பிரச்னை உள்ளிட்டவைகளில் தன்னிச்சையாகவே கருத்துக்களை தெரிவித்து வந்தார் வாசன்.
தொடங்கியதில் தொடங்கிய சறுக்கல்:
காங்கிரஸ் தலைமையிலான அரசுக்கு தமிழகத்தில் தொடர்ந்து கடும் எதிர்ப்பு இருந்து வந்த நிலையில் அமைச்சரவையில் தொடர்ந்த வாசன் ஆட்சியை இழந்த பிறகு
கடந்த செப்.2014-ம் ஆண்டு திருச்சியில் தமாகாவை மீண்டும் தொடங்கினார்.
இங்குதான் வாசனின் அரசியல் அனுபவமின்மை வெளிப்படத் தொடங்கியது. காங்கிரஸ் கட்சி ஆட்சியிலிருக்கும்போதே எதிர்ப்பை தெரிவித்து மக்களவைத் தேர்தலுக்கு முன்பாகவே வாசன் வெளியேறி இருக்க வேண்டும். ஆனால்
காங்கிரஸ் கட்சியோடு வாசனும் தமிழக மக்களால் துடைத்தெறியப்பட்ட பின்னர்
அதிகார பலம் இழந்த காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறியது முதல் சறுக்கல்.
தொண்டர்களின் பலத்த கரகோசத்திற்கிடையே பேச்சைத் தொடங்கிய ஜி.கே.வாசன் புதிய தமாகாவின் பாதை காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளை ஒட்டியே இருக்கும்.
காங்கிரஸ் தலைவர்களையோ, காங்கிரஸ் கட்சியையோ தமாகா ஒருபோதும் விமர்சிக்காது. மேலும் காங்கிரஸ் கட்சியின் சொத்துக்களை சொந்தம் கொண்டாட மாட்டோம் எனப் பேசியது வந்திருந்த தொண்டர்களை சோர்வடையச் செய்தது.
பிறகு எதற்கு புதிய கட்சி. இது வாசனின் இரண்டாவது சறுக்கல்.
அ.தி.மு.க. கூட்டணி கனவு, மழுப்பலான பதில்கள்:
இதன்பிறகும் கட்சியினரை ஈர்க்கும் வகையில் வாசன் செல்படவில்லை. கட்சியின் முக்கியப் பிரமுகர்களின் பிடியிலிருந்து வெளியேற முடியாத வாசன் அவர்களின் கோரிக்கைகளை ஏற்று அதிமுக கூட்டணிக்கு அடிப்போட்டார். ஜெயலலிதாவின் எவ்வித உத்தரவாதமும் இன்றி தொடர்ந்து அதிமுக கூட்டணி
கட்சியினரை நம்ப வைத்தது மூன்றாவது சறுக்கல். இவரது தந்தை மூப்பனாரோ 1996-ல் தி.மு.கவிடம் கூட்டணி பேசி முடித்துவிட்டுத்தான் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறினார். ஒரே வாரத்தில் கட்சியைப் பதிவு செய்து சைக்கிள் சின்னத்தையும்
கைப்பற்றினார் மூப்பனார். ஆனால் ஜி.கே.வாசனோ கட்சி ஆரம்பித்து கடந்த ஒன்றறை ஆண்டுகளான நிலையில் கூட்டணி குறித்தும் முடிவெடுக்க முடியவில்லை.
சைக்கிள் சின்னத்தையும் பெற முடியவில்லை. பல மாதங்களாக பத்திரிகையாளர்களுக்கு தொடர்ந்து பேட்டியளிக்கும் ஒரே தலைவர் வாசன்தான். ஆனால் அவர் எந்தக் கேள்விக்கும் வெளிப்படையாகப் பதில் அளிக்கமாட்டார். இதனால்
குழப்பம் அடைந்தது பத்திரிகையாளர்கள் மட்டுமல்ல. கட்சியினரும், பொதுஜனங்களும்தான். இன்றுவரை இந்த நடை மாறவில்லை... எங்கோ சென்றிருக்க வேண்டிய கட்சி.... இன்று கேள்விக்குறியில்... புதிய நம்பிக்கை...
வளர்ச்சிக்கான புதிய பாதை.... வெறும் இணையத் தளத்தில் மட்டுமே ஒளிர்கிறதோ?.....
No comments:
Post a Comment