Friday, 24 June 2016


திருவொற்றியூரில் ரூ.20 லட்சம் மீன்பிடி படகுகள் தீ வைத்து எரிப்பு

திருவொற்றியூர், மே 26:திருவொற்றியூரில் 9 மீன்பிடி பைபர் படகுகள் புதன்கிழமை தீவைத்து எரிக்கப்பட்டன. இச்சம்பவத்தால் இப்பகுதியில் தொடர் பதட்டம் இருந்து வருகிறது. 
   திருவொற்றியூர் காசிவிஸ்வநாதர் கோயில் குப்பத்தைச் சேர்ந்தவர் மீனவர்கள் ராமகிருஷ்ணா நகர் அருகே உள்ள கடற்கரையிலிருந்து பைபர் படகுகள் மூலம் 
மீன்பிடித்து வருகின்றனர். அதிகாலையில் கடலுக்குச் சென்று காலை சுமார் 10 மணியளவில் கரைக்குத் திரும்புவார்கள். இவர்களின் படகுகள், வலைகளை கடற்கரையிலேயே விட்டுச் செல்வது வழக்கம். இந்நிலையில் புதன்கிழமை அதிகாலை மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல கடற்கரைக்கு வந்த சிலர் இங்கு வைக்கப்பட்டிருந்த படகுகளில் பெரும்பாலானவை தீ வைத்து எரிக்கப்பட்டிருந்தது கண்டு 
அதிர்ச்சிடைந்தனர்.  இது குறித்து காசி விஸ்வநாதர் கோயில் குப்பத்தைச் சேர்ந்த கலியமூர்த்தி என்பவர் எண்ணூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் விசாரணை நடத்தினார். மேலும் தடய அறிவியல் சோதனை நடத்தப்பட்டது. சேதமதிப்பு சுமார் ரூ.20 லட்சம் இருக்கக் கூடும் எனக் கூறப்படுகிறது. இச்சம்பவத்தில் ஈடுபட்டோர் குறித்த தகவல்களை போலீஸார் திரட்டி வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு சிறையில் உள்ளபிரபல ரவுடி ஒருவரின் ஆதரவாளர்கள் இங்கு வந்து மது அருந்தியதாகவும்,  இதனை இங்கிருந்த மீனவர்கள் தட்டிக் கேட்டதையடுத்து இரு தரப்பினருக்கும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் இருதரப்பிலும் 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக இச்சம்பவம் நடைபெற்றிருக்கக் கூடும் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். இதனையடுத்து மேலும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 
      தீ வைத்து எரிக்கப்பட்ட படகுகளை திருவொற்றியூர் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் கே.பி.பி.சாமி, மாமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர், அதிமுக பகுதி செயலாளர் கே.கிருஷ்ணன் உள்ளிட்டோர் பார்வையிட்டனர். இது குறித்து எண்ணூர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

No comments:

Post a Comment