Friday, 24 June 2016

முகவை க.சிவகுமார்,
திருவொற்றியூர் நிருபர்.

பிரச்னைகளை மூடி மறைக்கும் சென்னைத் துறைமுக நிர்வாகம் 

கேள்விக்குறியாகும் எதிர்காலம் 

திருவொற்றியூர், ஜூன் 20:சென்னைத் துறைமுகத்தில் இருந்து வரும் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை மூடி மறைக்கும் வேலையில் துறைமுக நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது, இதன் மூலம் துறைமுகத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருவதாக துறைமுக உபயோகிப்பாளர் புகார் தெரிவிக்கின்றனர். 
   இந்தியாவின் கிழக்கு நுழைவு வாயிலாகக் கருதப்படும் சென்னைத் துறைமுகம் சுமார் 130 ஆண்டுகளுக்கும் மேலான பழமை வாய்ந்தது. ஆண்டுக்கு சுமார் 6.5 கோடி மெட்ரிக் டன் சரக்குகள்வரை கையாளப்பட்டு வந்தது. பெருநகரத்தின் எல்லைக்குள் இத்துறைமுகம் அமைந்துள்ளதால் இதனை விரிவாக்கம் செய்வதில் பெரும் சிக்கல்கள் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. 
     தமிழகத்தைச் சேர்ந்த டி.ஜி.வெங்கட்ராமன், டி.ஆர்.பாலு, ஜி.கே.வாசன் ஆகியோர் கப்பல்த்துறையின் கேபினட் அமைச்சர்களாகவும்,  எஸ்.திருநாவுக்கரசர் இணை அமைச்சராகவும் இருந்துள்ளனர்.  தற்போது பொன்.ராதாகிருஷ்ணன் இத்துறையின் இணை அமைச்சராக உள்ளார். இருப்பினும் சென்னைத் துறைமுகம் இந்தியாவின் இதர துறைமுகங்களின் வளர்ச்சிக்கு ஏற்ப வளர்ச்சியடையவில்லை.  மத்திய, மாநில அரசுகளிடையே இணக்கமான போக்கு இல்லாததே இதற்கு முக்கிய காரணமாக உள்ளது. மேலும் சென்னைத் துறைமுகத்தின் தலைவர்களாக இருந்தவர்களின் பொறுப்பற்ற தன்மை, மெத்தனம் உள்ளிட்டவை இதர காரணங்களாக உள்ளன. மேலும் தொடரும் பிரச்னைகள் குறி்த்து துறைமுக நிர்வாகம் 
மூடிமறைத்து வருவதாக துறைமுக உபயோகிப்பாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர். 
ஜப்பான் நிறுவனத்தின் ஆய்வறிக்கை:
    சென்னைத் துறைமுகத்தில் இருந்து வரும் போக்குவரத்து நெரிசல் பிரச்னை குறி்த்து ஜப்பான் சர்வதேச கூட்டாண்மை ஏஜென்சி (JICA- Japan International Cooperation Agency)ஆய்வறிக்கையை துறைமுக நிர்வாகத்திடம் அளித்து வருகிறது. இதேபோல் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இந்த அறிக்கை மீதான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய துறைமுகத் தலைவர் சிரில் ஜார்ஜ் முன்பைவிட போக்குவரத்து நெரிசல் ஆச்சரியப்படத் தக்கவகையில் குறைந்துள்ளதாகவும், காசிமேடு பவானியம்மன் கோயில் எல்லையிலிருந்து துறைமுகத்தின் சரக்குப் பெட்டக முனையத்திற்கு வர 17 நிமிடங்கள் மட்டுமே ஆவதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.  ஆனால் நடைமுறையில் ஒருநாள்கூட இது சாத்தியமல்ல என்பது சாதாரண ஒரு ஓட்டுனருக்கே தெரியும் என்பது உண்மை.
பல கி.மீ. தூரத்திற்கு காத்திருக்க காரணம் என்ன?:
   இக்கூட்டத்தில் முதலாவது சரக்குப் பெட்டக முனையத்தை நிர்வகித்து வரும்  டி.பி.வேர்ல்டு நிறுவனத்தின் துணைத் தலைவர் அனில் சிங் பேசியது, இத்துறைமுகத்தில் போக்குவரத்து நெரிசல் இருப்பதாகக் கூறப்படும் புகாரை நம்பவே முடியவில்லை. துறைமுக நுழைவாயிலிருந்து சுமார் 8 கிமீ தூரம் வரை வரிசையில் காத்திருந்த கண்டெய்னர் லாாிகளை ஆய்வு செய்தபோது துறைமுகத்திற்கு நுழைவதற்காக காத்திருக்கவில்லை. ஆவணங்கள் உள்ளிட்ட வேறு காரணங்களுக்காகவே காத்திருப்பதாக லாரி ஒட்டுனர்கள் தெரிவித்தனர் என்றார் அனில் சிங். மேலும் முனையங்களின் முக்கிய அதிகாரிகளும் கண்டெய்னர் போக்குவரத்து நெரிசல் இல்லை என்பதையே வலியுறுத்திக் கூறினர். இக்கூட்டத்தில் துறைமுக உபயோகிப்பாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கப்படவில்லை என புகார் கூறப்படுகிறது.
20 கி.மீ. தூரத்திற்கு காத்திருக்கும் அவலம் ஏன்?
    சில தினங்களுக்கு முன்பு கண்டெய்னர் போக்குவரத்து நெரிசலைத் தீர்த்துவிட்டதாக பத்திரிகை செய்தி அனுப்பியது துறைமுக நிர்வாகம். ஆனால் கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னைத் துறைமுகத்திலிருந்து சுமார் 20 கி.மீ. தூரத்திற்கு பொன்னேரி நெடுஞ்சாலை, மாதவரம் உள்வட்டச் சாலை உள்ளிட்டவைகளில் ஆயிரக்கணக்கான கண்டெய்னர் லாரிகள் வரிசைகட்டி நின்றன. மேலும் இவற்றை ஒழுங்குபடுத்துவதாக் கூறி சுமார் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் போக்குவரத்து காவல் சாவடிகள் வைக்கப்பட்டு லாரிகள் பல மணி நேரத்திற்கு தடுத்து வைக்கப்பட்டிருந்தன. மேலும் லாரி ஓட்டுனர்கள் தண்ணீர், உணவு இன்றி தவித்ததை நாம் நேரில் பார்க்க முடிந்தது.மேலும் விரைவாகச் செல்வதற்கு 'சிறப்பு வரிசை'யும் அமைக்கப்பட்டிருந்தது. இதில் ஒரு லாரியை முந்திச் செல்ல முயன்ற தண்ணீர் லாரி மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற தந்தை, மகள் ஞாயிற்றுக்கிழமை இறந்து போன சம்பவம் இப்பகுதி மக்களை ஆத்திரமடையச் செய்துள்ளது. இவ்வாறு இப்பிரச்னையால் பொதுமக்கள் தொடர்ந்து இன்னலுக்கு ஆளாகி வரும் நிலையில் துறைமுக நிர்வாகம் பிரச்னையை மூடி மறைக்க வேண்டிய அவசியம் என்ன?
கேள்விக்குறியாகும் எதிர்காலம்:
      இக்கூட்டத்தில் கலந்து கொண்ட சுங்க இ்ல்ல முகவர் சங்க நிர்வாகிகள் கே.வி.வி.கிரி, நடராஜா ஆகியோர் கூறியது,
     மதுரவாயல் மேம்பாலத் திட்டம் கைவிடப்பட்டது, தொடரும் போக்குவரத்து நெரிசல் பிரச்னை, அருகில் அமைந்துள்ள தனியார் துறைமுகங்களின் போட்டி
உள்ளிட்ட பிரச்னைகளால் நாட்டின் பழமையான துறைமுகங்களில் ஒன்றான சென்னைத் துறைமுகத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருகிறது. பொதுத்துறை நிறுவனம் என்பதால் இங்கு யாருக்கும் ஆர்வமில்லை. இதனால் இத்துறைமுகத்தை நம்பியுள்ள லட்சக் கணக்கான தொழிலாளர்கள், தனியார் நிறுவனங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் பெரும்பாலான நிறுவனங்களுக்கு  
வர்த்தகப் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனையடுத்து ஆள்குறைப்பு, சிக்கன நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டிய அவசியம் தனியார் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின் தொழில் நகரங்களான திருப்பூர், ஈரோடு, கோவை, ஆம்பூர், வேலூர், வாணியம்பாடி, ஸ்ரீபெரும்புதூர், மறைமலைநகர் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள ஏற்றுமதி, இறக்குமதி சார்ந்த தொழில் நிறுவனங்கள் சென்னைத் துறைமுகத்தில் நிலவும் நெரிசல் பிரச்னையால் தொடர் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றன என்றனர்.  
தமிழக முதல்வர் தலையிட்டால் மட்டுமே சாத்தியம்:
    சென்னைத் துறைமுக நிர்வாகம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் தமிழகத் தொழில் வளர்ச்சியின் முக்கிய ஆதாரம் சென்னைத் துறைமுகம்தான். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு பிரச்னைகளில் சிக்கித் தவித்து வரும் சென்னைத் துறைமுகத்தை சீரமைக்க தமிழக முதல்வரின் உதவியை நாடவேண்டியதுதான் துறைமுக நிர்வாகத்தின் கடமையாகும். எனவே பிரச்னைகளை மூடிமறைப்பதை விட்டுவிட்டு, தமிழக முதல்வரைச் சந்தித்து துறைமுகத்தின் உண்மை நிலைமையை எடுத்துரைக்க வேண்டும். இல்லையெனில் இத்துறையின் இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்பொருமுறை கூறியது போல், பிரச்னைகளைத் தீர்க்கவில்லை எனில் எதிர்காலத்தில் சென்னைத் துறைமுகம் அருங்காட்சியகமாக மாறும் என்பதில் சந்தேகமில்லை என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.  

No comments:

Post a Comment