Friday, 24 June 2016

முகவை க.சிவகுமார்,
திருவொற்றியூர் நிருபர்.

ரூ.3,000 டிக்கெட் ரூ.15,000-க்கு விற்பனை

திடீரென எகிறும் விமானக் கட்டணங்களால் பயணிகள் கடும் அவதி

மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமா?

திருவொற்றியூர், ஜூன் 23:திடீரென எகிறும் விமானக் கட்டணங்களால் விமானப் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். ஆனால் இது குறித்து மத்திய அரசு எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என பல்வேறு தரப்பினரும் வேதனை தெரிவிக்கின்றனர். 
   ஒரு காலத்தில் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானங்களை மட்டுமே நம்பியிருந்த உள்நாட்டு விமானப் போக்குவரத்தில் இன்டிகோ, கோஏர், ஸ்பைஸ்ஜெட், ஏர்கோஸ்டா, ஜெட் ஏர்வேஸ், ஏர்ஆசியா உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் விமானங்களை இயக்கி வருகின்றன. தொடக்கத்தில் பொதுத்துறை விமானங்களை விட தனியார் விமானங்கள் சிறப்பான சேவைகளை அளித்து வருவதாக 
பயணிகள் நம்பியதையடுத்து இந்நிறுவனங்களை நோக்கி மக்கள் பயணிக்கத் தொடங்கினர். மேலும் மிகவும் குறைவான கட்டணங்கள் அறிவிக்கப்பட்டதால் ரயிலில் 
முதல், இரண்டாம் வகுப்பில் பயணம் செய்பவர்களில் குறிப்பிடத் தகுந்த சதவீதத்தினர்  ரயிலிருந்து விமானப் பயணத்திற்கு மாறி வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் இதன் எண்ணிக்கை மூன்று மடங்காக வளர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
பயண நேரம் குறையும் என்பதால் மும்பை, டெல்லி, கல்கத்தா, ஹைதராபாத், பெங்களூர், சென்னை உள்ளிட்ட நகரங்களிடையே இயக்கப்படும் விமானங்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது.  பயணிகளின் ஆர்வம், அவசரத்தைப் பயன்படுத்தி விமானக் கட்டணங்களில் எவ்வித வரைமுறையும் இன்றி விமான நிறுவனங்கள் செயல்படுதாக பல்வேறு தரப்பினரும் புகார் தெரிவிக்கின்றனர்.
சென்னை-கோவைக்கு ரூ.15 ஆயிரம்:
   இது குறித்து தனியார் நிறுவனம் ஒன்றில் உயர் பொறுப்பில் உள்ள விஜயகுமார் தனக்கு ஏற்பட்ட அனுபவம் குறித்து கூறியது,
    எனக்கு சொந்த ஊர் கோவை வடவள்ளி. நான் வேலை நிமித்தமாக நெல்லூர் சென்றிருந்தேன். இந்நிலையில் வியாழக்கிழமை அதிகாலை எனது தந்தையார் இறந்துவிட்டதாகத் தகவல் கிடைத்தது. உடனே பேருந்து மூலம் சென்னை புறப்பட்டேன். இதற்கிடையே சென்னையிலிருந்து கோவை செல்லும் காலை 10.55 மணி விமானத்தில் டிக்கெட் பதிவு செய்திருந்தேன். ஆனால் போக்குவரத்து நெரிசலில் 
விமான நிலையத்தை சென்றடைவதற்குள் விமானம் போய்விட்டது. ரூ.6,600 டிக்கெட் கட்டணத்தில் பாதியளவுக்கே பணம் திரும்பக் கிடைத்தது. இதனையடுத்து பிற்பகல் 1.20 மணிக்கு புறப்படும் விமானத்தில் செல்ல விமான நிறுவனத்தை அனுகினேன். 
முதலில் டிக்கெட் இல்லை என மறுத்த ஊழியர்கள் பின்னர் ரூ.15 ஆயிரம் 
கட்டணத்தில் ஒரு டிக்கெட் இருப்பதாகக் கூறினர். என் தந்தையின் இறுதிச் சடங்கில் 
கலந்து கொள்ள வேறு வழியில்லை என்பதால் அதனை ஏற்றுக்கொண்டு கோவை சென்றடைந்தேன். எனக்குப் பக்கத்து இருக்கையில் பயணித்தவர் செலுத்திய கட்டணம்  ரூ.3,099 மட்டுமே என்றார் ஜெயக்குமார். 
டெல்லியிலிருந்து திரும்ப முடியாமல் தவித்தோம்:
      இப்பிரச்னை குறித்து அடிக்கடி வழக்கு விசயமாக டெல்லி சென்று வரும் 
வழக்குரைஞர் எஸ்.அம்பிகைதாஸ் கூறியது,
     நாங்கள் 6 வழக்குரைஞர்கள் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ஒரு முக்கிய வழக்கு சம்மந்தமாக கடந்த வாரம் டெல்லி சென்றோம். வழக்கு நிலவரம் எப்படி இருக்கும் என்பதை திட்டமிட முடியாததால் ஒரு வழிப் பயண டிக்கெட் எடுப்பதுதான் எங்கள் வழக்கம். செவ்வாய்க்கிழமை இரவு திரும்ப திட்டமிட்டு விமான டிக்கெட் எடுக்க முனைந்தபோது டெல்லி-சென்னை விமான குறைந்தபட்சக் கட்டணம் ரூ. 18,500 என இருந்தது. இங்கிருந்து சென்றபோது கட்டணம் ரூ.6 ஆயிரம் மட்டுமே.
வேறு ஊர்களுக்குப் பார்த்தபோது பெங்களூருவுக்கு ரூ.5 ஆயிரம் என இருந்தது. எனவே செவ்வாய்க்கிழம இரவு விமானத்தில் பெங்களூரு வந்து பின்னர் ரயில் மூலம் 
சென்னைக்கு வந்தடைந்தோம். ஒரு இடத்திற்குச் சென்றுவிட்டால் அங்கிருந்து விமானத்தில் திரும்பி வருவது என்பது குதிரைக் கொம்பாகவே உள்ளது. முன்பே திட்டமிட்டால் மட்டுமே குறைந்த கட்டணத்தில் செல்ல முடியும். அதுவும பயணத்தை ரத்து செய்தால் கட்டணம் பெரும்பாலான நேரங்களில் திரும்பக் கிடைக்காது. இயற்கை விதிமுறைகளுக்கு முரணாக விமான நிறுவனங்கள் செயல்படுவது அப்பட்டமான உண்மை என்றார் அம்பிகைதாஸ்.
சென்னை-அந்தமான் கட்டணம் ரூ.28 ஆயிரம்:
    இந்தியாவின் யூனியன் பிரதேசங்களில் ஒன்று அந்தமான். இங்கு வசிப்பவர்கள் பெரும்பாலும் இங்கிருந்து குடியேறியவர்கள்தான். குறிப்பாக போர்ட் பிளைரில் அதிகமான தமிழர்கள் வசிக்கின்றனர். இவர்கள் ஆண்டுக்கு ஒரு முறையாவது தமிழகம் வந்து திரும்புவார்கள். மேலும் ரத்த உறவுகள் எவரும் இறந்து போனால் உடனடியாக வரவேண்டியதிருக்கும். முன்பெல்லாம் கப்பல் மூலம்தான் பயணம் செய்வார்கள். மிகக் குறைந்த கட்டணம்தான் என்றாலும் சென்றடைய சுமார் 56 மணி நேரங்கள் பயணம் செய்ய வேண்டும். ஆனால் விமானத்தில் 2 மணி நேரத்தில் சென்றுவிடலாம் என்பதால் அவசரம் கருதி விமானப் பயணத்தை விரும்புகின்றனர்.
சாதாரணமாக ஒரு மாதத்துக்கு முன்பு பதிவு செய்தால் சென்னை-போர்ட்பிளைர்  கட்டணம் ரூ. 4,896 மட்டுமே. ஆனால் ஜூன் 24-ல் பயணம் செய்ய முதல்நாள் பதிவு செய்தால் ரூ.24 ஆயிரம் முதல் ரூ.28 ஆயிரம்வரை கட்டணமாகச் செலுத்தினால் மட்டுமே பயணிக்க முடியும். இதே நாளில் போர்ட்பிளைர்-சென்னை விமானக் கட்டணம் ரூ.6,865 மட்டுமே. அதே தூரம்... அதே பயண நேரம்... அதே வசதிகள்.. ஆனால் கட்டணம் மட்டும் பல மடங்கு உயர்வு. இது சிறிதும் நியாயம் அல்ல என்கிறார் மதுரையைப் பூர்வீகமாகக் கொண்டு போர்ட்பிளையரில் தொழில் செய்துவரும் கே.மாணிக்கவாசகம். 
சூதாட்டம்போல் மாறி வருகிறது:
   இது குறித்து சென்னையைச் சேர்ந்த சி.எஸ். டிராவல்ஸ் உரிமையாளர் சுப்பிரமணி, கிரிஸ்டல் டிராவல்ஸ் இயக்குனர் சீனிவாசன் ஆகியோர் கூறியது,
   முன்பெல்லாம் IATA- International Air Transport Association ஏஜென்சி இருந்தால் மட்டுமே விமான டிக்கெட் வழங்க முடியும். ஆனால் தற்போது ஆன்லைன் மூலம் 
நுகர்வோர் நேரடியாக டிக்கெட் பெற முடியும். நாங்கள் 25 ஆண்டுகளுக்கும் மேலாக 
நிறுவனத்தை நடத்தி வருகிறோம்.  அரை மணி நேரத்திற்கு கட்டணங்கள் மாற்றப்படுகின்றன. அவர்கள் வைத்ததுதான் விலை. வார இறுதி நாள்களில் கட்டணத்தை பன்மடங்கு உயர்த்துகின்றனர். ஒரே விமானத்தில் பயணிக்க பல்வேறு கட்டணங்களில் டிக்கெட் விநியோகம் செய்ய வேண்டியதிருப்பதால் எங்கள் மீதான நம்பகத்தன்மையை வாடிக்கையாளர்கள் இழக்கின்றனர். டிக்கெட் ரத்து செய்தால் குறைந்த அளவு பணமே திரும்பப் பெற முடியும். சிங்கப்பூர், மலேசியா சென்று 3 நாள்கள் தங்கிவிட்டு வர ரூ.30 ஆயிரம் மட்டுமே ஒட்டுமொத்தக் கட்டணமாக செலவிடப்படும் நிலையில் அந்தமானுக்கு ஒருவழி பயணத்திற்கே ரூ.28 கட்டணம் என்பது ஏற்க முடியாதது. ஒரே பயணத்திற்கு பல்வேறு ஏஜென்சிகளில் பல்வேறு கட்டணங்கள். மொத்தத்தில்  விமானக் கட்டணங்கள் சூதாட்ட வியாபாரம்போல் ஆகிவிட்டது. இந்த ஏமாற்றுவேலையை உடனடியாகத் தடுத்தாக வேண்டும். சில தினங்களில் காலியாக விமானங்களை இயக்க வேண்டியது உள்ளது. இதனை ஈடுகட்டவே அதிக கட்டணம் வசூலிக்கிறோம் என விமான நிறுவனங்கள் கூறுவது நொண்டிச் சாக்குதான்.  முக்கிய தினங்களில்  ஆம்னி பேருந்தில் இருநூறு ரூபாய் அதிகம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கும் அரசு அதே ஊருக்கு விமானத்தில் செல்ல ரூ.15 ஆயிரம் அதிகம் வசூலிப்பதைத் தடுக்காதது ஏன்? என்றனர்.
    ஒரு காலத்தில் வசதியானவர்குகளுக்கு மட்டுமே உரியதாக இருந்து வந்த விமானப் பயணம் தற்போது ஊர் வீட்டு ஊர் சென்று தொழில், வேலையில் ஈடுபட்டுள்ள நடுத்தர வர்க்கத்தினருக்கும் உரியதாக மாறி வருகிறது. எனவே எதிர்காலத்தில் இத்துறை மேன்மேலும் வளர வேண்டும் எனில் இத்துறையை மத்திய அரசு  உடனடியாக ஒழுங்குபடுத்த வேண்டிய காலம் வந்துவிட்டது என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.  

No comments:

Post a Comment