Friday, 24 June 2016

எண்ணூரில் படகு கவிழ்ந்து மீனவர் சாவு

எண்ணூர் முகத்துவாரம் ஆபத்து நிறைந்த பகுதியா?

திருவொற்றியூர், ஜூன் 21:எண்ணூரில் படகு கவிழ்ந்து குப்பன் (50) என்ற மீனவர் செவ்வாய்க்கிழமை பரிதாபமாக உயிரிழந்தார். 
    எண்ணூர் தாழங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் குப்பன். மீனவரான இவர் இதே பகுதியைச் சேர்ந்த பாண்டியன், ராஜூ ஆகியோருடன் செயற்கை இழை படகில் செவ்வாய்க்கிழமை மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.  எண்ணூர் முகத்துவாரப்பகுதியில் படகு சென்றபோது திடீரென ஏற்பட்ட சுழற்சியில் சிக்கி படகு கவிழ்ந்தது. இதில் குப்பன் மாயமானார். பாண்டியனும், ராஜுவும் நீந்திக் கரை சேர்ந்தனர். இதனையடுத்து குப்பனைத் தேடும் பணி நடைபெற்றது. ஆனால் எங்கும் கண்டுபிடிக்க முடியாத நிலையில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் குப்பனின் சடலம் இதே பகுதியில் கரை ஒதுங்கியது. இது குறித்து தகவல் அறிந்த எண்ணூர் காவல் நிலைய போலீஸார் 
குப்பனின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆபத்து நிறைந்த பகுதியா?
   இதே பகுதியில் கடந்த ஆறு மாதங்களுக்கும் நான்கு மீனவர்கள் உயிரிழந்துள்ளனர். அனுபவம் வாய்ந்த மீனவர்கள் கூட இப்பகுதியில் சிக்கி உயிரிழக்கும் சம்பவம் 
இப்பகுதி மீனவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதற்கு காரணம் கடலில் ஏற்படும் சுழல்தான் என மீனவர்கள் தெரிவிக்கின்றனர். பங்கிங்காம் கால்வாய் 
வங்கக் கடலில் இங்குதான் சங்கமமாகிறது. மேலும் முகத்துவாரப் பகுதியில் அடிக்கடி தூர்வாரும் பணிகளும் தொடர்ந்து நடைபெறுகிறது. இந்நிலையில் இப்பகுதியில் சுழலில் படகுகள் சிக்குவதற்கான காரணங்கள் குறித்து கடலாராய்ச்சி துறையினர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அதுவரை ஆபத்து நிறைந்த பகுதி என எச்சரிக்கை மிதவை 
வைக்கப்பட வேண்டும் என மீனவர்கள் தெரிவித்தனர். 

No comments:

Post a Comment