45 நாள்கள் மீன் பிடி தடைகாலம் முடிவுக்கு வந்தது
மீன்வரத்து அதிகரித்து விலை குறையும்?
திருவொற்றியூர்,மே 29: மீன் வளத்தை மேம்படுத்தும் வகையில் வங்கக் கடலில் விசைப்படகுகளில் மீன் பிடிக்க ஏப்ரல் மாதம் 15 தேதி முதல் தொடங்கிய தடை 45 நாள்களுக்குப் பிறகு மே 29 (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவுடன் முடிவுக்கு வருகிறது. .
இதனையடுத்து தமிழகம் முழுவதும் நாளை (திங்கள்கிழமை) அதிகாலை முதல் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்கின்றனர்.
கோடை காலங்களில் வங்கக் கடல் பகுதிகளில் மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் காலம் என்பதால் இக்காலங்களில் விசைப்படகுகள் மூலம் மீன் பிடித்தால் மீன் குஞ்சுகளும் வலையில் சிக்கிவிடும். இதனால் படிப்படியாக மீன்வளம் குறையும் அபாயம் ஏற்படும் எனக் கருதி கடந்த 2000-ஆண்டு வங்கக் கடல் பகுதியில் 45 நாள்களுக்கு விசைப்படகுகள் மூலம் மீன் பிடிக்க மத்திய அரசு தடை விதித்தது. இது கடந்த 16 ஆண்டுகளாக இந்த தடை நடைமுறையில் தொடர்கிறது. இதற்கு மீனவர்களும் ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஆண்டு 61 நாள்களாக நீடிக்க மத்திய அரசு அறிவித்தது. இதற்கு மீனவர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து 45 அல்லது 61 நாள்களா என்பதை மாநில அரசுகளை முடிவு செய்து கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது. கேரளா, புதுச்சேரி மற்றும் தமிழகத்தைத் தவிர ஆந்திரா, ஒடிசா, மஹாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்கள் ஆண்டுக்கு 61 நாள்கள் தடையை ஏற்றுள்ளன. தமிழகத்தைப் பொருத்தவரை ஏற்கனவே இருந்துவந்த 45 நாள் தடையே தொடரும் என தமிழக அரசு கடந்த ஆண்டு அறிவித்தது. இந்த ஆண்டும் இதே நடைமுறை தொடர்கிறது.
இதனையடுத்து கடந்த ஏப்ரல் 15 முதல் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. தற்போது இத்தடை ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவுற்றதையடுத்து திங்கள்கிழமை அதிகாலை முதல் தமிழகம் முழுதும் மீனவர்கள் கடலுக்குச் செல்ல உள்ளனர். தமிழகம் முழுவதும் சுமார் 8,500 விசைப் படகுகள் உள்ளன. மீன் பிடி தடைகாலத்தில் மீனவர் குடும்பங்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதனை ரூ.5 ஆயிரமாக வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் அதிமுகவும், திமுகவும் குறிப்பிட்டிருந்தன. எனவே அடுத்த ஆண்டு முதல் இந்த உதவித் தொகை உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மீன் விலை குறையும்?:
விசைப்படகுகள் மூலம்தான் அதிக அளவில் மீன் பிடிக்கப்படும். பைபர் மட்டும் கட்டுமரங்கள் மூலம் குறைந்த அளவில் தான் மீன் பிடிக்க முடியும். மேலும் எடை அதிகம் கொண்ட பெரிய வகை மீன்கள், இரால் உள்ளிட்டவைகளும் விசைப்படகுகள் மூலம் தான் கிடைக்கின்றன. இந்நிலையில் விசைப்படகுகளில் மீன் பிடிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்ததால் மீன்வரத்து குறைந்து விலையும் உயர்ந்தது. தற்போது தடை நீங்கியுள்ள நிலையில் இன்னும் ஒரு வாரத்தில் மீன் விலை படிப்படையாகக் குறையும் என காசிமேடு மீன் வியாபாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment