திருவொற்றியூரில் அறிவிப்பின்றி ஜமாபந்தி நடத்திய அதிகாரிகள்
சொற்ப எண்ணி்க்கையில் மனுக்கள்
திருவொற்றியூர், ஜூன் 3:திருவொற்றியூரில் வெள்ளிக்கிழமை வருவாய்த்துறை சார்பில் ஜமாபந்தி நடைபெற்றது. ஆனால் சொற்ப எண்ணிக்கையில்தான் பொதுமக்கள் பங்கேற்றனர்.
வருவாய்த்துறை சார்பில் வழங்கப்படும் பல்வேறு சான்றிதழ்கள் மூலம்தான் அரசு வழங்கும் பல்வேறு சமூக நலத் திட்டங்களின் சலுகைகளை பொதுமக்கள் பெற முடியும். வருவாய் வரி வசூல், முதியோர் உதவித் தொகை, திருமண உதவித் திட்டங்கள், மாணவர் கல்வி உதவித் தொகை மற்றும் இலவச பட்டா வழங்குதல், பட்டா மாற்றம், சாதிச் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு உடனடியாக வருவாய்த் துறை சான்றிதழ்களை விண்ணப்பித்த இடத்திலேயே வழங்கும் திட்டம்தான் ஜமா பந்தி திட்டம். இதில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அதிகாரி, கோட்ட
வருவாய் அதிகாரி, வட்டாட்சியர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளும் பங்கேற்பதும், இதனை ஒரு வாரத்திற்கு முன்பே கிராமங்களில் தண்டோரா, நகரங்களில் ஒலிபெருக்கிகள் மூலம் பொதுமக்களுக்கு அறிவிப்பது வழக்கம்.
விளம்பரம், அறிவிப்பு இல்லை:
இந்நிலையில் திருவொற்றியூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ஜமாபந்தி நடைபெற்றது. திருவொற்றியூர் தாசில்தார் சிராஜ்பாபு முன்னிலை வகித்தார். இதில் ஐம்பதுக்கும் மேற்பட்ட அதிகாரிகள், ஊழியர்கள் பங்கேற்றனர். ஆனால் இதில் 132 பேர் மட்டுமே மனுக்களை வழங்கினார். இவர்களில் பெரும்பாலானவர்கள் வழக்கமாக தாலுகா அலுவலகம் வந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. தினமும் நூற்றுக்கணக்கானோர் பல்வேறு சான்றிதழ்களுக்காக தாலுகா அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என அலைச்சலுக்கு உள்ளாகும் நிலையில் வீடு தேடி வந்து வழங்கும் சான்றிதழ்களைப் பெற அதிகம் பேர் ஏன் வரவில்லை என
வியப்பு ஏற்பட்டது. ஜமாபந்தி குறித்து வெள்ளிக்கிழமை பிற்பகல்தான் பெரும்பாலானவர்களுக்குத் தெரியவந்துள்ளது. பின்னர் மனுக்கள் தயார் செய்து வருவதற்குள் நிகழ்ச்சியே முடிந்துவிட்டதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
விளக்கம் கேட்ட கலெக்டர்:
இது குறித்து விசாரித்தபோது ஜமாபந்தி குறித்து திருவொற்றியூர்
தாலுகா அலுவலகம் சார்பில் போதுமான விளம்பரம் மற்றும் அறிவிப்புகள் செய்யப்படவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதாக இருந்த திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சுந்தரவள்ளி பொதுமக்கள்
கூட்டம் அதிகம் இல்லாததால் இறுதிவரை நிகழ்ச்சிக்கு வரவில்லை. மேலும்
போதுமான அறிவிப்புகளை பொதுமக்களுக்குத் தெரியப்படுத்தாதது ஏன் என்பது
விளக்கமளிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment