Friday, 24 June 2016

நாடு முழுவதும் மறைமுக வரியாக ரூ.7 லட்சம் கோடி வசூல்

மத்திய கலால் மற்றும் சுங்க வாரிய தலைவர் நஜிப் ஷா பேட்டி

திருவொற்றியூர், ஜூன் 1:கடந்த நிதியாண்டில் சுங்கம், கலால், சேவை வரி உள்ளிட்ட மறைமுக வரிகள் மூலம் 7.09 லட்சம் கோடி வசூலிக்கப்பட்டது என மத்திய கலால் மற்றும் சுங்க வாரியத் (CBEC-Central Board of Excise and Customs) தலைவர் நஜிப் ஷா புதன்கிழமை சென்னையில் தெரிவித்தார். 
    சென்னைத் துறைமுகத்தில் ஏற்றுமதிக்கான ஆவணப் பரிசோதனையில் ரேடியோ அதிர்வெண்கள் மூலம் கண்டறியும் சாதன முறை (RFID-Radio Frequency Identified Device) புதன்கிழமை நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. இப்புதிய திட்டத்தை மத்திய கலால் மற்றும் சுங்க வாரியத் தலைவர் நஜீப் ஷா தொடங்கி வைத்தார். 
அப்போது நஜீப் ஷா கூறியது,
 சட்டங்களை அமலாக்குவதில் இது போன்ற புதிய நடைமுறைகளை நிச்சயமாக நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும். இதன்மூலம் தேவையற்ற கால விரயம் தவிர்க்கப்படும். மேலும் இப்புதிய நடைமுறை மூலம் பல்வேறு நிலைகளில் இருந்து வரும் அலுவலர் பற்றாக்குறைக்கு தீர்வு காண முடியும். இப்புதிய நடைமுறையை அனைத்து துறைமுகங்கள் மற்றும் முனையங்களிலும் செயல்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும். 
ஒற்றைச் சாளர முறை:
     மேலும் சுங்கத்துறையில் சமீபத்தில் அறி்முகம் செய்யப்பட்ட ஒற்றைச் சாளர முறையில் அனைத்து ஏஜென்சிகளும் இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ஏற்றுமதி, இறக்குமதிக்காக பல்வேறு இடங்களுக்கு அலைய வேண்டிய அவசியம் இல்லை. இதன் தலைமை ஏஜென்சியாக சுங்கத்துறை விளங்குகிறது. இருப்பினும் தொடக்கத்தில் உள்ள பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும். தற்போது 99 சதவீத ஆவணப் பரிசோதனைகள் மின்னணு முறையில் செயல்படுத்தப்படுகிறது. எந்த ஒரு துறையிலும் அடிமட்டத்தில் என்ன பிரச்னை இருக்கிறது என்பதை கண்டறிவது மிகவும் அவசியமானது. அப்போதுதான் உயர் அதிகாரிகள் சிறந்த கொள்கை முடிவு எடுக்க முடியும்.
மறைமுக வரியாக ரூ.7.09 லட்சம் கோடி வசூல்:
    நாடு முழுவதும் கலால், சுங்கம், சேவை வரிகள் (மறைமுக வரிகள்) மூலம் ரூ.7.09 லட்சம் கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இதில் சென்னை மண்டலம் மூலம் 
10 சதவீதம் வசூலிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது என்றார் நஜீப் ஷா. 
    இந்நிகழ்ச்சியில் சென்னைத் துறைமுகத் தலைவர் சிரில் ஜார்ஜ், சுங்கத்துறை முதன்மை ஆணையர் எஸ்.கே.தாஸ், சரக்குப் பெட்டக முனைய செயல் அதிகாரிகள் கிரிஷ்ணதாஸ், சிவகுமார், சுங்க இல்ல முகவர் சங்கத் தலைவர் கே.வி.வி.கிரி, செயலாளர் நடராஜன், வர்த்தக சங்க நிர்வாகிகள் சோழநாச்சியார், ஜெ.கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பெட்டிச் செய்தி:
புதிய நடைமுறை நாட்டிலேயே முதல் முறை:
கண்டெய்னர் போக்குவரத்து நெரிசலைத் தீர்க்கும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள RFID என்ற புதிய நடைமுறை குறித்து சரக்குப் பெட்டக நிலையங்களின் தேசிய சங்க நிர்வாகிகள் அருண், பத்மநாபன் கூறியது,
   தொடர்ச்சியான பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு இப்புதிய முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. சரக்குப் பெட்டக நிலையங்களிலிருந்து புறப்படும் கண்டெய்னர்கள் குறித்த ஆவணங்கள், ஓட்டுனர் பெயர் உள்ளிட்ட அனைத்தும் 
ஸ்கேன் செய்யப்பட்டு சேகரிக்கப்படும். பின்னர் மின்னணு எண் வழங்கப்படும். இந்த கண்டெய்னர் சென்னைத் துறைமுகத்தின் நுழைவு வாயிலுக்கு வந்தவுடன் இங்கு பொருத்தப்பட்டுள்ள சிறப்புக் கருவு இந்த மின்னணு எண்ணை ஆய்வு செய்யும். அனைத்து விபரங்களும் சரியாக இருக்கும்பட்சத்தில் மேற்கொண்டு எவ்வித பரிசோதனையும் இன்றி உடனடியாக் கண்டெய்னர் விடுவிக்கப்படும். இதன் மூலம் 
நுழைவு வாயிலில் காத்திருக்கும் நேரம் குறையும். இதனையடுத்து கண்டெய்னர் லாரிகள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. பல ஆண்டுகளாக இருந்து கண்டெய்னர் போக்குவரத்து நெரிசலுக்கு இப்புதிய முறைமூலம் 
விடிவு காலம் ஏற்படும் என்றனர்.

No comments:

Post a Comment