Friday, 24 June 2016

முகவை க.சிவகுமார்.
திருவொற்றியூர் செய்தியாளர் 

சீர்கேடுகளின் விளிம்பில் திருவொற்றியூர் தியாகராஜர் கோயில் 

முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா?


திருவொற்றியூர், ஜூன் 9:தமிழகத்தின் பழமையான கோயில்களில் ஒன்றான திருவொற்றியூர் தியாகராஜர் கோயில் தற்போது சீர்கேடுகளின் விளிம்பில் உள்ளது. இது குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  
    திருவொற்றியூர் தியாகராஜர் உடனுறை வடிவுடையம்மன் கோயில் 1,500 ஆண்டுகளுக்கும் மேலான பழமை கொண்டது. மிகப் பெரிய திருக்குளம், திருத்தேர், ராஜகோபுரம் உள்ளிட்ட அனைத்து சிறப்பு அம்சங்களும் கொண்ட இக்கோயிலுக்கு ஆண்டு முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். ஆனால் ஆண்டுதோறும் அதிகரித்து வரும் பக்தர்களின் வசதிக்கேற்ப கோயிலில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படுவதில்லை என பெரும்பாலானோர் புகார் தெரிவிக்கின்றனர். பு
ஆக்கிரமிப்புகளால் அவதி:
   கோயிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்களை நிறுத்துவதற்காக கோயிலின் வாசல் அருகே இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் இவை போதுமானதாக இல்லாததால் விசேஷ தினங்களில் தேரடியெங்கும் வாகனங்கள் குறுக்கும் நெடுக்குமாக நிறுத்தி வைக்கப்படுகின்றன. கோயில் மதில் சுவரைச் சுற்றிலும் நூற்றுக்கனக்கான இருசக்கர, கார்கள், வேன்களை நிறுத்தி வைக்க முடியும். ஆனால் இப்பகுதி முழுவதும் அருகில் வசிக்கும் உள்ளூர்வாசிகள் வாகனங்களை நிரந்தரமாக நிறுத்தி வைக்கின்றனர். இதனைத் தடுக்க வேண்டிய போக்குவரத்து காவல்த்துறை, கோயில் நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் உள்ளிட்டவை எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. திருமணத்தை தவற விட்ட பொதுமக்கள்:
   வியாழக்கிழமை சுபமுகூர்த்த தினம் என்பதால் சுமார் 25 திருமணங்கள் இக்கோயிலில் நடைபெற்றன. இதனையடுத்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கோயிலுக்கு திரண்டு வந்திருந்தனர். நூற்றுக்கணக்கான வாகனங்களும் தேரடியில் நிறுத்தி வைக்கப்பட்டன. இதனையடுத்து இப்பகுதி முழுவதும் போக்குவரத்து முழுமையாகத் தடைபட்டது. இதனையடுத்து திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் வாகனங்களை நிறுத்திவிட்டு பெரும்பாலானோர் நடந்தே கோயிலுக்கு வந்தனர். 
ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பார்கள் என்பதற்கேற்ப கூடுதல் வசதிகளைச் செய்ய 
எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வியாழக்கிழமை மணமக்கள் கூட மிகுந்த சிரமத்திற்கிடையேதான் உள்ளே வர முடிந்தது. மேலும் ஏராளமானோர் திருமணம் முடிந்த பின்னர்தான் வரமுடிந்தது. 
பராமரிக்கப்படாத திருக்குளங்கள்:
    இக்கோயிலின் அழகே திருக்குளம்தான். ஆனால் பல ஆண்டுகளாக இக்கோயில் குளம் சீரமைக்கப்படவில்லை. தூர்வாருவதாகக் கூறி ஜேசிபி இயந்திரங்களை இறக்கியபோது படிக்கட்டுகள் சேதமடைந்தன. ஆனால் இரண்டு ஆண்டுகளைக் கடந்தும் இதனைக் கூட சீரமைக்கவில்லை. திருக்குளத்தின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் மாட்டுவண்டிகள், ஆட்டோக்கள் நிரந்தரமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. ஈமச்சடங்கு மண்டபத்தின் அருகிலேயே குப்பைகள் கொட்டப்படுகின்றன. குளத்தின் தென் பகுதியில் 
பூக்கடைகள் ஆக்கிரமித்துள்ளன. பூக்கடைகள் என்று கூறப்பட்டாலும் இங்கேயே சமையல் செய்து சாப்பிடும் அளவிற்கு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இவற்றை அகற்றி சிறிய அளவிலான வரிசைக் கடைகளை அமைக்க கோயில் நிர்வாகம் முன்வர வேண்டும் என பக்தர்கள் கோரிக்கைவிடுத்து பல ஆண்டுகளாகிவிட்டது. 
புற்கள், பிளாஸ்டிக் குப்பைகள்:
     கடந்த ஆண்டு பெய்த கனமழையில்கூட திருக்குளம் நிரம்பாத நிலையில் இனி வரும் கனமழைக்காவது குளத்திற்கு மழைநீர் வருவதற்கான முன்னேற்பாடுகளைச் செய்ய அறநிலையத்துறை, மாநகராட்சி நிர்வாகங்கள் இதுவரை எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை. திருக்குளம் முழுவதும் கோரைப்புற்கள் வளர்ந்துள்ளன. வெளியில் உள்ள குளத்தில் இருந்த மீன்கள் சேகரிக்கப்பட்டு கோயில் உள்பிரகாரத்தில் உள்ள குளத்தில் விடப்பட்டன. ஆனால் இங்கும் தண்ணீர் குறைவாகவே உள்ளது. மேலும் இக்குளம் முழுவதும் பிளாஸ்டிக் குப்பைகளால் நிரம்பியுள்ளன. 
சீர்கேட்டின் விளிம்பில்...:
    கோயில் ஒவ்வொரு பகுதியும் ஆகம விதிப்படி பராமரிக்கப்பட வேண்டும் என்பது 
கட்டாயம் ஆகும். ஆனால் இங்குள்ள கோசாலை, நந்தவனம், திருப்பள்ளியறை உள்ளிட்டவை முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை. கோசாலையில் பக்தர்களால் காணிக்கையளிக்கப்பட்ட சுமார் 15 மாடுகள் உள்ளன. இவற்றுக்கு தினமும் தீனி போடுவது முதல் சாணங்கள் அப்புறப்படுத்துவதைவரை முறைகேடுகள் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. திருப்பள்ளியறை முழுதும் பழைய சாமான்கள் போட்டவைக்கப்படுகிறது. நந்தவனம் பராமரிப்பதிலும் போதிய கவனிப்பு இல்லை. இங்கு கோயிலில் புரோகிதர்கள் முதல் கடைநிலை ஊழியர்கள்வரை அனைத்து தரப்பினரும் தங்களது சக்திகேற்ப முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர். ஆனால் இவை அனைத்திற்கும் கோயில் நிர்வாகம் உடந்தையாகவே உள்ளது வேதனையாக உள்ளது. ஒட்டுமொத்த கோயிலும் சீர்கேட்டின் விளிம்பில்தான் உள்ளன. 
விசாரணைக்கு உத்தரவிடுவாரா முதல்வர்?:
     பழமையான கோயில் என்றாலும் திருவொற்றியூரில் வசிப்போர் பெரும்பாலானவர்கள் வெளியிலிருந்து வந்து குடியேறியவர்கள்தான். மேலும் இக்கோயிலுக்கு வெளியிலிருந்து வரும் பக்தர்களே மிகவும் அதிகம். எனவே கோயிலில் இருந்து வரும் பல்வேறு பிரச்னைகள் குறித்து இப்பகுதி மக்களுக்கு போதிய
விழிப்புணர்வு இல்லை. இதுதான் சீர்கேடுகளுக்கு மூல காரணமாக உள்ளது. திருவொற்றியூர் கோயில் மீது தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு தனிப் பக்தி எப்போதும் உண்டு. தங்கத் தேர், திருத்தேரோட்டம், கும்பாபிஷேகம் உள்ளிட்ட அனைத்தும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவால்தான் நடைபெற்றது என நினைவு கூறும் இக்கோயில் பக்தர்கள் தற்போதை நிலை குறித்து விரிவான விசாரணைக்கு முதல்வர் உத்தரவிட வேண்டும் என்பதே கோரிக்கையாக உள்ளது. 

No comments:

Post a Comment