Friday, 24 June 2016

திருவொற்றியூரில் புதிய வணிக அஞ்சல் வளாகம் 

தனியார் போட்டியைச் சமாளிக்க அஞ்சல் துறை தீவிர நடவடிக்கை 

பொது மேலாளர் மெர்வின் அலெக்ஸாண்டர் 

திருவொற்றியூர், ஜூன் 22:தனியார் நிறுவனங்களின் போட்டியைச் சமாளிக்கும் வகையில் அஞ்சல்துறை தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என தமிழ்நாடு அஞ்சல்துறை பொது மேலாளர் மெர்வின் அலெக்ஸாண்டர் வெள்ளிக்கிழமை சென்னையில் தெரிவித்தார்.
     இந்திய அஞ்சல் துறை சார்பில் திருவொற்றியூரில் வணிக அஞ்சல் வளாகம் திறப்புவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அஞ்சலக பணிகளுக்கான இயக்குனர் ஏ.கோவிந்தராஜன் தலைமை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட தமிழ்நாடு அஞ்சல்துறை பொது மேலாளர் மெர்வின் அலெக்ஸாண்டர் கலந்து கொண்டு புதிய வளாகத்தைத் திறந்து வைத்தார்.
அப்போது மெர்வின் அலெக்டாண்டர் பேசியது, 
      இந்தியாவின் பழமையான துறைகளின் ஒன்றான அஞ்சல் துறையில் முன்பு சுமார் 65 சதவீதம் தபால் போக்குவரத்து மட்டுமே நடைபெற்றது. ஆனால் தற்போது நிதிசார்ந்த பரிமாற்றங்கள்தான் 65 சதவீதங்கள் உள்ளன. வெறும் 25 பைசாவில் செய்தித்தாள்களை எடுத்துச் செல்கிறது அஞ்சல் துறை. அஞ்சல் அட்டை வெறும் 50 பைசா மட்டுமே. இதுபோன்ற சேவைகளையும் அளித்துகொண்டு தனியார் நிறுவனங்களின் போட்டியைச் சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். இதற்கேற்ற வகையில் நவீன அலுவலக கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் அஞ்சல் துறை ஊழியர்கள் அனைவருமே விற்பனைப் பிரிவு ஊழியர்களாக மாற்றம் பெற்று வருகின்றனர். இத்துறையின் வளர்ச்சியில்தான் ஊழியர்களின் எதிர்காலமே உள்ளது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். வாடிக்கையாளர்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும். 
புதிய வளாகத்தை பயன்படுத்த கோரிக்கை:
   திருவொற்றியூரில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள வணிக அஞ்சல் வளாகத்தை இப்பகுதியில் 
அமைந்துள்ள வணிக நிறுவனங்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மொத்தமாக அனுப்ப வேண்டிய கடிதங்களை அப்படியே கொடுத்தாலே அஞ்சல்துறை ஊழியர்கள் 
அவற்றை மடித்து, உறையில் அடைத்து, முத்திரையிட்டு அனுப்பிவிடுவார்கள். மேலும் பார்சல் சர்வீஸ் உள்ளிட்ட சேவைகளும் இங்கு உண்டும். வாடிக்கையாளர்கள் அழைத்தால் அவர்கள் இருக்குமிடத்திற்குச் சென்றே தபால்களைச் சேகரிக்கும் பணியில் அஞ்சலக ஊழியர்கள் செயல்படுவார்கள் என்றார் அலெக்ஸாண்டர்.
     இந்நிகழ்ச்சியில் திருவொற்றியூர் அஞ்சலக முதுநிலை மேலாளர் டி.நீலகண்டன், அஞ்சல்துறை ஊழியர்கள் சங்க நிர்வாகி ஆண்ட்ரூ தம்பா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பெட்டிச் செய்தி:

மோசடி குறித்து பதில் அளிக்க முடியாது

சில ஆண்டுகளுக்கு முன்பு திருவொற்றியூர் அஞ்சலகத்தில் சேமிப்புக் கணக்கில் 
பொதுமக்கள் செலுத்திய சுமார் ரூ.4 கோடி ரூபாய் வரவு கணக்கில் வைக்காமலேயே மோசடி செய்யப்பட்டது. இது குறித்த புகாரில் அஞ்சல ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டு
சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் இதுவரை பணத்தைப் பறிகொடுத்த பொதுமக்களுக்கு தங்களது பணம் இதுவரை திரும்பக் கிடைக்கவில்லை. இது குறித்து பொதுமேலாளர் 
அலெக்ஸாண்டரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். உடனே கோபம் அடைந்த அவர், இப்போது நடைபெற்ற நிகழ்ச்சி குறித்து மட்டுமே நீங்கள் கேள்வி எழுப்ப வேண்டும். திருமண வீட்டில் அமங்கல விசயங்களைப் பேசுவது கூடாது என்றார். பணத்தை பறிகொடுத்த மக்களின் கேள்விக்கு பதில் என்ன? என்று மீண்டும் கேட்டபோது, உங்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை என கோபத்துடன் பதில் அளித்தார் அலெக்ஸாண்டர். அப்போது குறுக்கிட்ட அஞ்சலக சேவைகளுக்கான இயக்குனர் கோவிந்தராஜன், வழக்கு நடைபெற்று வருகிறது. பொதுமக்களின் பணம் நிச்சயமாகத் திரும்பக் கிடைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார். ஊழியர்களை வாடிக்கையாளர்களிடம் கணிவுடன் சேவையாற்ற வேண்டும் என அறிவுரை கூறிய பொதுமேலாளர் பணத்தை இழந்த வாடிக்கையாளர்கள் குறித்த ஒரு கேள்விக்கு இவ்வளவு கோபம் ஏன்? அதுதான் உயர்தான் அதிகாரியாக இருக்கிறாரோ?

No comments:

Post a Comment