வர்தா புயல் பாதிப்படைந்த காசிமேடு மீனவர்களுக்கு நிவாரணம்
அமைச்சர் டி.ஜெயக்குமார் வழங்கினார்
திருவொற்றியூர்,ஜன.3:வர்தா புயலால் பாதிப்பிற்கு உள்ள சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகம் பகுதி மீனவர்களுக்கு நிவாரண உதவித் தொகையை மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் செவ்வாய்க்கிழமை வழங்கினார்.
அப்போது அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியது,
கடந்த டிச.12 அன்று சென்னை மற்றும் புறநகரை உலுக்கியெடுத்த வர்தா புயலால்
சென்னை மாநகரமே கடும் பாதிப்பிற்கு உள்ளானது. மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். நூற்றுக்கணக்கான விசைப்படகுகள், பைபர் படகுகள் முற்றிலும் சேதமடைந்தன, ஆயிரக்கணக்கான விசை, பைபர் படகுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன. மேலும் மீன்பிடி வலைகளும் சின்னாபின்னமாயின. இப்புயலால் பாதிப்பிற்குள்ளான மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில் அரசு சார்பில்
நிவாரணம் அளிக்க முடிவு செய்யப்பட்டது.
வர்தா புயலால் மீனவர்கள், மீன்பிடித் தொழில்களுக்கு ஏற்பட்டுள்ள
பாதிப்புகள் குறித்து மூன்று மாவட்டங்களிலும் கணக்கெடுக்கும் நடைபெற்றது. இதன் அடிப்படையில் நிவாரணம் வழங்க தமிழக அரசு சார்பில் ரூ.19 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை எடுக்கப்பட்டுள்ள கணக்கெடுப்பின்படி சென்னை மாவட்டம் - 3,172, திருவள்ளூர்-9,976, காஞ்சிபுரம்- 3,680 பயனாளிகளுக்கு நிவாரணம் வழங்கும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியுள்ளது. செவ்வாய்க்கிழமை மட்டும் காசிமேடு மீன்பிடித்துறைமுகம் பகுதியைச் சேர்ந்த சுமார் 2 ஆயிரம் பேருக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி முற்றிலும் சேதமடைந்த விசைப்படகிற்கு ரூ.5 லட்சமும், பகுதி சேதமான படகுகளுக்கு குறைந்பட்சம் ரூ.36 ஆயிரம் முதல் ரூ.3 லட்சம் வரையும், இதர சேதங்களுக்கு ரூ.10 ஆயிரமும் வழங்கப்படுகிறது. இதற்கான நிதி வங்கிகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்நிதியைப் பயன்படுத்தி மீனவர்கள் தங்களது படகுகளைச் சரி செய்து கொள்ள வேண்டும் என்றார் ஜெயக்குமார்.
நிகழ்ச்சியில் மீன்வளத்துறை இணை இயக்குனர் இந்திரா, ராயபுரம் உதவி இயக்குனர்கள் கணேஷ் நேரு, கங்காதரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment