Wednesday, 25 January 2017

வடசென்னை பகுதியில் 50 இடங்களில் சாலை மறியல் 

போலீஸார் தலைகாட்டாததால் பொதுமக்கள் கடும் அவதி


திருவொற்றியூர், ஜன.23:வடசென்னை பகுதியில் சுமார் 50 இடங்களில் திங்கள்கிழமை பல்வேறு தரப்பினரும் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆனால் எந்த இடத்திலும் மறியலைத் தடுக்க போலீஸார் நடவடிக்கை எடுக்காததால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாயினர்.
  ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர அனுமதி வேண்டும் எனக் கோரி கடந்த 7 நாள்களாக மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்தியவர்களை கலைக்க போலீஸார் மேற்கொண்ட முயற்சிகளையடுத்து சென்னையில் பல்வேறு இடங்களில் கலவரம் ஏற்பட்டது. இந்நிலையில் திருவொற்றியூர், எண்ணூர், மணலி, தண்டையார்பேட்டை, ராயபுரம் உள்ளிட்ட இடங்களில் திடீரென திருவொற்றியூர் நெடுஞ்சாலை, எண்ணூர் விரைவு சாலை உள்ளிட்டவைகளில் சுமார் 100 மீட்டருக்கு ஒரு இடத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். பல இடங்களில் குறைந்த எண்ணிக்கையிலானவர்களே போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்னும் சில இடங்கலில் வெறும் தடுப்புகள் மட்டுமே 
அமைக்கப்பட்டிருந்தன. ஆனால் தொடக்கம் முதலே மறியலில் ஈடுபட்டவர்களைக் கலைக்க போலீஸார் எவ்வித முயற்சியும் ஏற்படவில்லை. இதற்கு காரணம் 
காவல் நிலையத்தில் பணியில் இருந்த போலீஸாரைத் தவிர வழக்கமாக இது போன்ற நிகழ்வுகளில் அனுப்பி வைக்கப்படும் சிறப்பு போலீஸார், ஆயுதப்படை போலீஸார் 
எவரும் இப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்படாததே இதற்கு காரணம். வடசென்னை முழுவதுமே சுமார் 100 போலீஸார் மட்டுமே திங்கள்கிழமை பணியில் இருந்திருப்பார்கள் என போலீஸார் தரப்பில் கூறப்பட்டது.
சமூக விரோதிகளால் பொதுமக்கள் அவதி:
  மாணவர்கள், பொதுமக்கள்தான் இந்த மறியல் போராட்டங்களில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டாலும் பெரும்பாலான இடங்களில் விபரம் அறியாத சிறுவர்கள், வயதான பெண்மணிகளும் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதைக் காண முடிந்தது. மேலும் 
பல்வேறு இடங்களில் கூட்டத்தோடு கூட்டமாக இப்பகுதியில் உள்ளவர்களாலேயே அடையாளம் காண முடியாத நபர்கள் சிலர் ஊடுருவியிருந்ததைக் காண முடிந்தது. மேலும் சில இடங்களில் குடிபோதையில் சிலர் வாகனங்களில் வந்தவர்களை விரட்டியடித்தனர். பள்ளிக்குழந்தைகளைக் கூட அவர்கள் அழைத்துச் செல்ல அனுமதிக்காததால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாயினர். தொழிற்சாலைகளில் ஷிப்ட் முடிந்து வந்தவர்களையும் வீட்டிற்குச் செல்ல முடியாமல் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஆலைகளிலேயே தங்கி இருந்தனர். 
மேலும் வடசென்னை முழுதும் பெரும்பாலான கடைகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. கொருக்குப்பேட்டை, திருவொற்றியூர் ஆகிய இடங்களில் ரயில் மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. அடுத்து என்ன நடக்குமோ என்ற பீதியில் ஆழ்ந்த பொதுமக்கள் மாலை 6 மணியளவில் போராட்டம் தானாகவே விலக்கி கொள்ளப்பட்டதால் நிம்மதியடைந்தனர். 

No comments:

Post a Comment