கடலோரக் காவல் படையின் 40 ஆம் ஆண்டு கொண்டாட்டம்
சென்னை துறைமுகத்தில் ரோந்துக்கப்பல்களை பார்வையிட்ட பள்ளி மாணவர்கள்
திருவொற்றியூர், ஜன.5:இந்திய கடலோரக் காவல்படையின் 40-ஆம் ஆண்டு தினத்தையொட்டி சென்னை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இப்படையின் ரோந்துக் கப்பல்களில் பள்ளி மாணவர்கள் வியாழக்கிழமை பார்வையிட்டனர்.
இது குறித்து கடலோரக் காவல்படை கிழக்கு பிராந்தியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
இந்திய கடற்படையிலிருந்து கடலோரக் காவல்படை தனியாகப் பிரிக்கப்பட்ட தினமான பிப்ரவரி 1-ம் தேதியை இந்தியக் கடலோரக் காவல்படை தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. 40-வது ஆண்டு தினமான இந்த ஆண்டும்
இத்தினத்தைக் கொண்டாடும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக சென்னையைச் சேர்ந்த பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் வியாழக்கிழமை சென்னைத் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட கடலோரக் காவல்படையின் ரோந்துக் கப்பல்களான சாகர், வரத் ஆகியவற்றைப் பார்வையிட அனுமதிக்கப்பட்டனர். அப்போது கடலோரக் காவல்படையின் பல்வேறு பணிகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் ஆபத்தில் தவிப்பவர்களை ஹெலிகாப்டர் மூலம் காப்பாற்றுவது எப்படி என்பது செயல்விளக்க நிகழ்ச்சிகள் செய்து காட்டப்பட்டன. இந்நிகழ்ச்சியில் சுமார் 1,208 மாணவர்கள் கலந்து கொண்டனர். வெள்ளிக்கிழமையும் மாணவர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இந்நிகழ்ச்சியின் மூலம் கடலோரக் காவல் படையின் செயல்பாடுகளை மாணவர்கள் அறிந்து கொண்டு எதிர்காலத்தில் இப்படையில் சேர்வதற்கான ஆர்வத்தை வளர்க்கும் என்பதே இதன் நோக்கம் ஆகும் என செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment