Wednesday, 25 January 2017

மதுரவாயல் உயர்மட்ட மேம்பாலத் திட்டம்: 

பாலத்தின் தூண்களின் அமைப்பை மாற்றி அமைக்கக் கோரும் தமிழக அரசு

சாத்தியமில்லாததால் சுமூக முடிவை எட்டுவதில் முட்டுக்கட்டை 

சென்னை, ஜன.11:மதுரவாயல் உயர் மட்ட மேம்பாலத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் எனில் ஏற்கனவே அமைக்கப்பட்ட தூண்களை மாற்றியமைக்க வேண்டும் என தமிழக அரசு நிபந்தனை விதித்துள்ளதாகவும், எனினும் மாநில அரசு ஒத்துழைப்புடன் இத்திட்டதை நிறைவேற்றுவதில் உறுதியாக உள்ளது என சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், கப்பல் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 
திட்டத்தின் சிறப்பு அம்சங்கள்: 
     சென்னைத் துறைமுகத்தின் வாயில் எண் 10 -லிருந்து கூவம் நதி (17.50 கி.மீ), பூந்தமல்லி நெடுஞ்சாலை (1.50 கி.மீ) வழியாக மதுரவாயல் சென்று வெளிவட்டச் சாலையுடன் இணைப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இதன் நீளம் 19 கி.மீ. ஆகும்.   889 தூண்களுடன் அமையும் இத்திட்டத்தின் மொத்த மதிப்பீடு ரூ.1815 கோடி. இதில் ரூ. 470 கோடி மறுவாழ்வு மற்றும் குடியமர்த்தல் பணிக்கும், ரூ.1,345 கோடி கட்டுமானப் பணிகளுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.  இதில் ரூ.470 கோடியை சென்னைத் துறைமுகமும், தமிழக அரசும் தலா ரூ.235 கோடி வழங்க முடிவு செய்யப்பட்டது. இதில் இதுவரை சென்னைத் துறைமுகம் மட்டும் ரூ.51 கோடி வழங்கியுள்ளது. மேலும் கட்டுமானப் பணிக்கான நிதியில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ரூ. 499 கோடியை மானியமாக வழங்க உறுதியளிக்கப்பட்டுள்ளது.
மாநகர மக்களுக்கு பயனளிக்கும் திட்டம்: 
   இத்திட்டத்தை கட்டுதல்- இயக்குதல்-ஒப்படைத்தல் (Built-Operate-Transfer)  முறையின் கீழ் இதனைக் கட்டமைக்கும் பணியை ஹைதராபாத்தைச் சேர்ந்த சோமா எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டது.  15 ஆண்டுகள் சுங்க கட்டணம் வசூலிப்பதன் மூலம் முதலீட்டுத் தொகை, லாபத்தை இந்நிறுவனம் ஈடுகட்ட வேண்டும். பிறகு சென்னைத் துறைமுகம் வசம் இச்சாலை ஒப்படைக்கப்படைக்கப்படும்.  இப்பாலத்தில் சிவானந்த சாலை, கல்லூரி சாலை ஆகிய இடங்களில் வாகனங்கள் ஏறவும், காமராஜர் சாலை, ஸ்பர்டங் சாலை ஆகிய இடங்களில் இறங்கவும் இத்திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனால் துறைமுகத்திற்குச் சென்று வரும் வாகனங்கள் மட்டுமின்றி பொதுமக்களும் இச்சாலையைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.  மேலும் சென்னை மாநகரத்திலிருந்து வெளியூர் செல்லும் வாகனங்கள், வெளியூர்களிலிருந்து அரசு பொது மருத்துவமனை உள்ளிட்ட முக்கிய மருத்துவமனைகளுக்கு வரும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் தற்போதைய நெரிசலில் மணிக்கணக்கில் காத்திருப்பது தவிர்க்கப்படும்.
தடைவிதித்த தமிழக அரசு: 
      இத்திட்டத்திற்கு செப்.2010-ல் அன்றைய பிரதமர் மன்மோகன் சிங்கால் அடிக்கல் நாட்டுப்பட்டு பணிகள் நடைபெற்று வந்த நிலையில் பிப்.,2012-ல் உடனடியாகப் கட்டுமானப் பணிகளை தமிழக அரசு தடை விதித்தது.  இதனையடுத்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தடையை நீக்க வழக்கத் தொடுத்தது. விசாரணையின் முடிவில் தமிழக அரசின் உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் தடைவிதித்தது. இதனையடுத்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தமிழக அரசு மேல் முறையீட்டு மனு நிலுவையில் உள்ளது. மேலும் இத்திட்டத்தையே தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ரத்து செய்துவிட்டது.  இத்திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசின் ஒப்புதலைப் பெற பல்வேறு கட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் எவ்வித சாதகமான பதிலையும் தமிழக அரசு தெரிவிக்கவில்லை. இந்நிலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துவிட்டதாக தகவல்கள் வெளியாயின. ஆனால் அவ்வாறு எவ்வித ஒப்புதலும் அளிக்கப்படவில்லை என தற்போது தெரியவந்துள்ளது.
தூண்களை மாற்றி அமைப்பது சாத்தியமில்லை: 
இது குறித்து பொன்.ராதாகிருஷ்ணன் அளித்த சிறப்புப் பேட்டி: 
   சென்னைத் துறைமுக வளர்ச்சிக்காக கொண்டுவரப்பட்ட மதுரவாயல் உயர்மட்ட மேம்பாலத் திட்டத்தை நிறைவேற்றுவது அவசியமானது. ஆனால் தமிழக அரசு விதித்துள்ள தடையால் தடங்கல் ஏற்பட்டுள்ளது. தற்போது நீரோட்டம் பாதிக்கப்படாமல் இருக்க ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள இரு தூண்கள் கொண்ட பாலத்தை ஒரே தூணாகக் கொண்டு  அமைக்க வேண்டும் என மாநில அரசு அதிகாரிகள் நிபந்தனை விதிக்கின்றனர். ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள தூண்களை எப்படி மாற்றியமைப்பது? எனவே மீதம் உள்ள தூண்களை வேண்டுமானால் அவ்வாறு அமைக்கலாம் என பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தொடர் ஆய்வுகள், ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. இதில் சுமூகமான முடிவுகள் எடுக்கப்பட்டு தமிழக அரசின் ஒப்புதல் பெறப்பட வேண்டும். பின்னர் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்துள்ள மேல் முறையீட்டு மனு வாபஸ் பெறப்பட வேண்டும். பின்னர்தான் பணிகளைத் தொடங்க முடியும். இது குறித்து நவம்பர் மாதமே தமிழக அரசு ஒப்புதல் அளித்துவிட்டதாகக் கூறப்படுவதில் உண்மை இல்லை என்றார் அமைச்சர் ராதாகிருஷ்ணன். 
    மாநிலத்தின் தொழில் வளர்ச்சியில் சென்னத் துறைமுகத்தின் பங்கு முக்கியமானது.  மேலும் சென்னை மாநகரத்தின் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த இரண்டு கோணத்தில் பார்த்தால் இத்திட்டம் மக்கள் நலனில் மகத்தான பயனை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. எனவே இத்திட்டத்தை விரைவாக நிறைவேற்றுவதில் சுமூக முடிவு எட்டப்பட்டு முட்டுக்கட்டைகள் நீக்கப்பட வேண்டும். இதற்கு அனைத்து தரப்பினரும் அழுத்தம் தர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

No comments:

Post a Comment