Wednesday, 25 January 2017

ரொக்கப் பணமில்லா பரிவர்த்தனை சாத்தியமா? சலுகைகள் நீடிக்குமா?

வங்கிகளின் சேவைக் கட்டணங்களால் அவதிக்குள்ளாகும் வாடிக்கையாளர்கள் 

பொது நியாயத்தின் அடிபடையில் புதிய விதிமுறைகள் தேவை 

திருவொற்றியூர், டிச.4:ரொக்கப் பணமில்லாத பரிவர்த்தனைக்கு மாறியாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு வரும் பொதுமக்கள் வங்கிகளின் பல்வேறு வகையான சேவைக் கட்டணங்களால் கடுமையாக அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
    ஆயிரம், ஐநூறு ரூபாய் நோட்டுக்கள் பணமதிப்பு செல்லாது என கடந்த நவம்பர் 8-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். தொடக்கத்தில் இது கணக்கில் வராத பணம்,  கள்ள நோட்டுகளை ஒழிக்கவே கொண்டு வரப்பட்டதாக அறிவித்த பிரதமர் இதனால் ஏற்படும் சிரமங்களை பொதுமக்கள் 50 நாள்களை பொறுத்துத்தான் ஆக வேண்டும் எனவும் தெரிவித்து வந்தனர். மேலும் டிச.30-ம் தேதியுடன் இதற்கான காலக்கெடு முடிந்தும் வங்கிகளில் தாராள பணப் பட்டுவாடா செய்யப்படவில்லை. 
பணமதிப்பு நீக்கப்பட்ட நோட்டுகளுக்கு ஈடாக முழுமையாக புதிய ரூபாய் நோட்டுக்கள் அச்சிடும் திட்டம் இல்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துவிட்டலையில் ரொக்கமில்லா பண பரிவர்த்தனை மூலம்தான் வாழ்க்கை நடைமுறைகளை செயல்படுத்திக் கொண்டாக வேண்டும் என்ற கட்டாய மனநிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.  தற்போது ரொக்கமில்லா பரிவர்த்தனையை ஊக்கப்படுத்துவதற்காக அறிவிக்கப்பட்ட சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இச்சலுகைகளும்  வெகு சில நாள்களுக்கு மட்டுமே நீடிக்கும் என கூறப்படுகிறது. 
ஊக்கத் தொகையால் ஏற்படும் இழப்பை ஏற்பது யார்?
இது குறித்து தனியார் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் கதிரவன், குமரேசன் கூறியது,  
     பெட்ரோல் பங்குகளில் வங்கி அட்டைகளை உபயோகிப்போர்களுக்கு 0.75 சதவீதம் ஊக்கத் தொகை அளிக்கப்படுகிறது. உதாரணமாக 200 ரூபாய்க்கு ஒருவர் பெட்ரோல் போடுகிறார் என்றால் சலுகைப்படி ஊக்கத் தொகை ரூ.1.50 நேரடியாகக் குறைக்கப்படாது. முழுத் தொகையும் பிடித்தம் செய்யப்பட்டு பிறகு வங்கிகள் மூலம் அதே வாடிக்கையாளர்களின் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. ஆனால் பங்க் உரிமையாளர் கணக்கில் தினசரி வியாபாரம் அடிப்படையில் இக்கட்டணம் எங்கள் கணக்கில் கழித்தல் செய்யப்படுகிறது.  இதனால் விற்பனைத் தொகைக்கு ஏற்ப 
ஒவ்வொரு பங்க் உரிமையாளருக்கும் 3 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய்வரை 
இழப்பு ஏற்படுகிறது. இது குறி்த்து சங்க நிர்வாகிகள் மூலம் எதிர்த்தோம். இதனையடுத்து சுமார் 200 பெட்ரோல் நிலையங்களில் ஆய்வு என்ற பெயரால் அலைக்களிக்கப்பட்டனர். சலுகைகளை அறிவிக்கும் அரசு இதனால் ஏற்படும் இழப்பீட்டை ஏற்க மறுப்பது ஏன்?. இது குறித்து சனிக்கிழமை நடைபெற உள்ள சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் ஆலோசித்து அடுத்த கட்ட முடிவினை எடுக்க உள்ளோம் என தெரிவித்தனர். 
ஒரே சேவை-பல்வேறு கட்டண முறை:
    வங்கி அட்டைகள் அறிமுகப்படுத்தப்பட்டபோது கட்டணம் ஏதும் விதிக்கப்படவில்லை. பின்னர் பொதுமக்கள் உபயோகிக்கத் தொடங்கிய பிறகு 
படிப்படியாக நிபந்தனைகள், கட்டணங்கள் விதிக்கப்பட்டன. இதேபோல் வங்கியில்
கணக்குத் தொடங்க கூவிக் கூவி அழைத்தனர். தற்போது சராசரி பண இருப்பு 
தொகை வைக்க நிர்பந்திக்கின்றனர். தற்போதைய நிலையில் ஜன்தன் கணக்குகளைத் தவிர அனைத்து கணக்குகளுக்கும் குறைந்தபட்ச இருப்பு, சராசரி இருப்பு வைக்க வேண்டும். இல்லையெனில் சேவைக் கட்டணங்களை வங்கிகளை தன்னிச்சையாகவே 
எடுத்துக் கொள்கின்றன. இந்திய ரிசர்வ் வங்கியின் கணக்கின் படி இந்தியாவில் 
சுமார் 71 பட்டியலிடப்பட்ட வங்கிகளின் கிளைகள் செயல்பட்டு வருகின்றன. 
இதில் அரசுடைமையாக்கப்பட்ட சில வங்கிகளில் குறைந்தபட்சம் ரூ.250-க்குக் கூட சேமிப்புக் கணக்கும், ரூ.1,000-த்தில் நடப்புக் கணக்கும் தொடங்கிவிட முடியும்.
ஆனால் இத்தகைய குறைந்த பணத்திலான வங்கிக் கணக்குகளே தற்போது தொழில்நுட்பம், கவர்ச்சி, சேவை அடிப்படையில் இந்தியா முழுவதும் பரவியுள்ள முதல் இரண்டு இடங்களைத் தக்க வைத்துள்ள தனியார் வங்கிகளான ஐசிஐசிஐ, எச்டிஎப்சி வங்கிகளில் இல்லை. நடப்புக் கணக்கில் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.2.50 லட்சம் வரை சராசரி இருப்பு வைக்கும் கணக்குகள் உள்ளன. இதற்கு தகுந்தவாறுதான் சேவையும், கட்டணங்களும். ஏற்கனவே உறுதி ஒப்புக்கொண்டபடி கணக்குகளை பராமரிக்கவில்லையெனில் எதற்கெடுத்தாலும் தண்டக் கட்டணம்தான். அதுவும் வாடிக்கையாளர்களுக்குத் தெரிவிக்காமலேயே கணக்கில் கழித்தல் நடைபெறுகிறது. இதனை எதிர்த்து கடுமையாக வாதம் செய்தால் வாடிக்கையாளர்களை குளிர்விக்க இக்கட்டணத்தை மீண்டும் வரவு வைப்பார்கள். இது போன்ற கட்டணங்கள் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் எவ்வித நியாயமும் இன்றி வலுக்கட்டாயமாக 
வசூலிக்கப்படுகிறது.
பொதுவான கட்டண விகிதம் தேவை:
இது குறித்து பொதுமக்கள் தரப்பில் கூறப்படுவதாவது,
     பணமில்லா பரிவர்த்தனைக்கு பொதுமக்கள் இயல்பாக மாற வேண்டும் எனில் 
வங்கிக் கட்டணங்களில் வெளிப்படைத் தன்மை வேண்டும். எல்லா பரிவர்த்தனைகளுக்கும் மிகக் குறைந்த சதவீதத்தில்தான் கட்டணம் இருக்க வேண்டும். வங்கிகளில் நடப்பு, சேமிப்பு கணக்குகளில் இருப்பு வைக்கப்படும் பணத்திற்கு நாள் கணக்கில் வட்டி கணக்கிடப்பட்டு வழங்க வேண்டும். மேலும் சராசரி இருப்பு, குறைந்த பட்ச இருப்பு உள்ளிட்டவைகளில் நிபந்தனைகள் தளர்த்தப்பட வேண்டும். எந்தக் கட்டணம் விதித்தாலும் அது பொது நியாயத்திற்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.
அனைத்து வங்கிகளிலும் வாடிக்கையாளர்களின் பிரச்னைகளை உடனுக்குடன் தீர்த்து வைக்க ஊழியர்கள் நியமிக்கப்படவேண்டும். இதன்மூலம் களில் எந்த பிரச்னை என்றாலும் கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் மட்டுமே தொடர்பு கொள்ள வேண்டிய அவலநிலை வாடிக்கையாளர்களுக்கு இருக்காது.  இது குறித்து இந்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் பொதுவான விதிமுறைகள், கோட்பாடுகள் வகுக்க வேண்டும். இதில் வங்கி வாடிக்கையாளர்களின் 
வேண்டுகோள்கள் பரிசீலிக்கப்பட வேண்டும் என்றனர்.
     முன்பெல்லாம் பணக்காரர்கள் மட்டுமே வங்கிக்கு வந்து கொண்டிருந்த நிலையில் 
பணமதிப்பு செல்லாது என்ற அறிவிப்பு சாமான்யனையும் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளிவிட்டது. தற்போதைய நிலையில் பணமில்லா பரிவர்த்தனை பொதுமக்கள் இயல்பாக ஏற்றுக்கொள்ள வேண்டுமெனில் வங்கி அட்டைகள், இருப்புத் தொகை பராமரிப்பு சேவைக் கட்டணங்கள் மிகக் குறைவாகவும், நியாயமானதாகவும் இருக்க வேண்டும். வங்கியின் வாசலில் பணக்காரர்களுக்கும், சராசரி மனிதனுக்கும் ஒரே மாதிரியான சேவையும், மரியாதையும் வங்கிகள் தரவேண்டும். அப்படியொரு நிலை ஏற்பட்டால் அரசின் கொள்கை வெற்றியடைவதில் அதிக சிரமம் இருக்காது என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது. 

பெட்டிச் செய்தி:
இது குறித்து சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த தனியார் நிறுவன மேலாளர் சி.யூ.சதீசன் கூறியது,
    எனக்கு பாரத ஸ்டேட் வங்கியில் சேமிப்புக் கணக்கு உள்ளது. எனது வீட்டின் அருகில் உள்ள இதே வங்கியின் ஏடிஎம் மையத்தில் அட்டை மூலம்  பணம் எடுக்கச் சென்றேன். ஆனால் எனது கணக்கில் பணம் இருப்பு இருந்தும் மூன்று முறை முயற்சித்தும் பணம் வரவில்லை. இதற்கு காரணம் தகவல் தொழில்நுட்பக் கோளாறு  இருக்கலாம் என நினைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்துவிட்டேன். அப்போது வந்த குறுந்தகவல்களில் மூன்று முறை தலா ரூ.23.50 வீதம் மொத்தம் ரூ.70.50 எனது கணக்கில் கழிக்கப்பட்டிருந்தது. இது நியாயமா எனக் கேள்வி கேட்பதற்கே வங்கியின் வாசலில் காத்திருக்க வேண்டுமே? என்றார் சதீசன்.
திருவொற்றியூரைச் சேர்ந்த பூமிநாதன்:
    இங்குள்ள எச்டிஎப்சி வங்கியில் எங்கள் நிறுவன கணக்கு உள்ளது கடந்த 
மூன்று மாதங்களுக்கான சராசரி இருப்பு வைக்கப்படவில்லை, கணக்கில் ரொக்கம் செலுத்தியது என ரூ.4,850 ஆயிரம்வரை பிடித்தம் செய்துவிட்டனர். பின்னர் வங்கி அதிகாரிகளிடம் முறையிட்டபோதும் எதிர்காலத்தில் இது போல நடக்காது என்ற நிபந்தனை அடிப்படையில் ரூ.2,200 மட்டும் திருப்பி வரவு வைக்கப்பட்டது. சேவைக்கு கட்டணம் என்றால் பரவாயில்லை. ஏதாவது ஒரு காரணத்தின் அடிப்டையில் 
தண்டத்தொகை வசூலிப்பது சரியா? என்றார் பூமி.

No comments:

Post a Comment